நேர்மையை ஆதரிக்கும் 8-ம் எண் காரர்கள்!

நேர்மையை ஆதரிக்கும் 8-ம் எண் காரர்கள்!

இந்த எண்ணைப் பற்றிப் பல விவரங்களைச் சொல்ல வேண்டும். இந்த எண்ணுக்குரிய கிரகம் சனி பகவான், சனி கொடுத்தாலும் கொடுப்பான், கெடுத்தாலும் கெடுப்பான். கொடுத்தால் அவனைப்போல் கொடுப்பவன் இல்லை. நளன் கதை நமக்கெல்லாம் தெரியும். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள், பன்னிரண்டு ராசிகளையும் சனிக்கிரகம் முப்பது ஆண்டுகளில் சுற்றி வருகின்றது. சந்திரன் நிற்கும் ராசிக்கு முன்னும் பின்னும் சந்திரன் நிற்கும் நடு ராசியிலுமாக, மூன்று ராசிகளிலும் சனி ஏழரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறான். இதைத் தான் ஏழரை நாட்டுச் சனி என்று சொல்லுகிறார்கள்.

 
எட்டு எண்ணை மிகவும் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாகப் பலர் சொல்வார்கள். துன்பத்தைக் கொடுக்கும் கிரகமான சனியை இந்த எண் எட்டு குறிப்பதால், மக்கள் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாக எண்ணுகிறார்கள். மனித வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்கிறோம். புண்ணியச் செயல்களையும் செய்கிறோம். புண்ணியத்துக்கேற்றபடி, பிற கிரகங்கள் அமைந்து வாழ்வில் இன்பத்தைக் கொடுக்கின்றன. செய்த பாவச் செயல்களுக்கேற்ற பலனை எப்போது, எப்படி அநுபவிப்பது? அந்த பாவத்துக்குரிய பலனை அநுபவித்தால் தானே பாவச் சுமை விலகும். உடலும் உள்ளமும் சுத்தமாகும். அதற்கு ஒரு வழியாகத்தான் இந்த எண் எட்டு அமைந்திருக்கிறது. பாவமே செய்யாமல் புண்ணியமே செய்துள்ள ஒருவருக்கு இந்த எண் அமைந்திருந்தாலும் துன்பங்களைக் கொடுக்குமா? இப்படியும் கேட்கலாம் நிச்சயமாகத் துன்பத்தைத் தராது. தன் தான்ய சம்பத்துடன் அதிகாரம் மிகுந்த வாழ்வைக் கொடுக்கும். இத்தகைய வாழ்வைக் கொடுத்து மனத்தில் அகம்பாவம் ஏற்படாமலும் செய்யும், நேர்மையான வழியையே காட்டும். இது தான் இந்த எண் எட்டின் மிக முக்கிய அம்சம்.
 
பிறந்த நாள் 8, 17, 26 ஆகிய தேதிகளும் கூட்டு எண் எட்டும் கொண்டவர்கள். இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள். மிக உயர்ந்த உடல்வாகு கொண்டவர்கள், தங்களைப் பற்றியும் தங்கள் முன்னேற்றத்தைப் பற்றியுமே அதிகமாகச் சிந்திப்பார்கள். நுண்கலைகளில் அதிக விருப்பம் காட்டமாட்டார்கள். எல்லாம் விதிப்படி நடக்கும் என்ற கொள்கை உடையவர்கள். ஆனால் சோம்பேறிகளாக இருக்க மாட்டார்கள். உடல் சோம்பியிருந்தாலும் உள்ளத்தில் திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பார்கள். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு எந்தவிதத் தடைகளையும் சமாளித்து முன்னேறுவதில் சமர்த்தார்கள். நினைத்ததைச் சாதிக்க அசுர வேகத்தில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு ஒருவரைப் பிடித்து விட்டால், உடல், பொருள், ஆவி மூன்றையும் தியாகம் செய்வதில் முன் நிற்பார்கள்.
 
இந்த எண்ணைச் சார்ந்தவர்களிடம் ஒரு குறை என்னவென்றால், இவர்களுடைய திறமையும் உழைப்பும் பிறருக்குத் தெரியமாட்டா, வெளிக்காட்டிக் கொள்ளவும் விரும்ப மாட்டார்கள். இந்தக் குணத்தினால் பிறர் இவர்களைக் குறைவாக மதிப்பிட்டு விடும் வாய்ப்புக்கள் அதிகம். இதே மாதிரி இவர்களுடைய தன்னலமற்ற சேவையும் பிறர் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும். எண் எட்டைச் சேர்ந்தவர்கள் உழைப்பாளிகள், தியாக சீலர்கள். ஆனால் கிணற்றுக்கும் விளக்காகவே இருந்து விடுவார்கள் என்று கெய்ரோ கூறியிருக்கிறார். பல சமயங்களில் பிறருக்கு உதவியே தங்கள் வாழ்நாளை வீணடித்துக் கொள்வார்கள். 
 
“உலக வாழ்க்கை சுகபோகத்துக்காக அல்ல, கர்ம வினைப்பயனை அநுபவிக்கவே இந்தப் பிறவி வாய்த்திருக்கிறது என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள். பணம் சம்பாதிப்பதைவிட முக்கியப் பணிகள் சில வாழ்வில் உள்ளன என்று நினைத்து, மூளையைக் கசக்கிக் கொள்வார்கள். அவர்கள் பேச்சிலும் செயலிலும் நிதானமும் நேர்மையும் காணப்படும். அளந்துதான் பேசுவார்கள். வெட்டிப் பேச்சு, கலவரம் என்றால் அந்த இடத்தில் இவர்களைப் பார்க்க முடியாது. களைப்பே இல்லாமல் நினைத்த காரியத்தை முடிப்பார்கள். மணிக்கணக்கைப் பார்க்கலாமல் உழைப்பார்கள்.
 
இந்த எண்ணில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் கணித மேதைகளாக விளங்குவார்கள். பதினேஜாம் தேதியில் பிறந்தவர்களிடையே அதிக மூளை பலமும் அறிவுக் கூர்மை காணப்படும். வாழ்வில் முன்னேறி வாழ்பவர்கள் எட்டில் ஒரு வகை, வாழ்க்கையை வெறுத்தோ, சந்தர்பவசத்தால் மனைவி மக்களிடையே வெறுப்பு ஏற்பட்டோ துறவற வாழ்க்கை மேற்கொள்பவர்கள் மற்றொரு வகை. சிறு வயதில் சிலருக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாது.
 
- வித்யாதரன்