கலங்காமல் காத்த கணபதி!
மாகதர் என்னும் ரிஷிக்குக் கஜாசுரன் என்ற ஓர் மைந்தன் இருந்தான். தனது அசுர பலத்தினால் தேவர்களையும் மக்களையும் கொடுத்துன்பத்திற்குள்ளாக்கினான். அவர்களுடைய சொத்துக்களைக் களவாடினான். ஐசுவரியங்களைக் கொள்ளையடித்தான். அவர்களை அடிமைப்படுத்தித் தன் படைக்கு ஊழியம் செய்யும் வேலையாட்களாக அமர்த்தினான். அவனைக் கண்டாலே - ஏன் பெயரைச் சொன்னாலே - மக்கள் கதி கலங்கி மதி மயங்கி அங்கம் பதிறானர்கள். அவனிடமிருந்து பயந்து மீள்வதற்கு, அவனைக் கண்ட மாத்திரத்தில் தோப்புக்கரணம் போட்டும், சிரசில் குட்டிக் கொண்டு தேங்காய் உடைத்தும் மிகுந்த வணக்கத்துடன் நடந்து கொண்டனர்.
இப்பேர்பட்ட பயத்தோடு கூடிய மரியாதைக்குரியவனும் துஷ்டத்தனத்தில் கெட்டிக்காரனும் அசுரபலத்தில் வல்லவனுமாகிய கஜாசுரன் ஒரு சமயம் விளையாட்டாக விண்ணில் சென்ற காலை அங்குள்ள அண்டச் சுவர் ஒன்றை இடித்து விட்டான். ஆம். ஆகாச கங்கை உடைப்பெடுத்து பூலோகம் முழுவதும் நீரில் மூழ்கியது. ஆனால் இத்தலம் மட்டும் மூழ்கியும் மூழ்காமல் இருந்தது.
ஜலப்பிரயைத்தையும் அதனால் ஜெகமெங்கும் ஏற்பட்ட ஜீவ, தாவர நாசத்தையும் கண்ட தேவரும், யாவரும் மனங்கலங்கி, இத்தலத்தில் வீற்றிருந்த விக்னேஸ்வரனை அணுகி, அவன்தன் பாதகமலங்களைப் பணிந்து நின்றனர். அண்டிவருவோர்தம் அல்லல் போக்குதலே தொழிலெனக் கொண்ட அறுமுகன் சோதரன் தனது துதிக்கையை நீட்டி, தண்ணீரை எல்லாம் உறிஞ்சித் தொழுது நின்றோர் தம் துயர் துடைத்ததோடு, ஆகாச கங்கையின் அண்டச் சுவரையும் தன் காற்பெருவிரல் நகத்தால் அடைத்து, அதனின்றும் புனல் பெருகாமல் செய்து விட்டார்.
அதோடு மட்டுமன்றி இக்கொடுஞ்செயலைச் செய்து பெருந்துன்பத்திற்குள்ளாக்கிய கஜாசுரனையும் வதம் செய்து, மக்களைச் சுகம் பெற வைத்து விட்டார். அதனால் அவர் கலங்காமற் காத்த கணபதி என்று அழைக்கப்படுவதோடு மக்கள் தாங்கள் அசுரனுக்கு மரியாதை செலுத்திய விதமாகிய தெண்டனிடல், தோப்புக்கரணம் போடுதல், தலையில் குட்டிக் கொள்ளுதல், தேங்காய் உடைத்தல் ஆகியவற்றைப் பிள்ளையாருக்கே செய்து வழிபட்டு வரலாயினர்.
- வி.மீனாட்சி சுந்தரம்