மதுரை மீனாட்சியம்மன் ஆலயச் சிறப்புக்கள்!

மதுரை மீனாட்சியம்மன் ஆலயச் சிறப்புக்கள்!

உலகப் புகழ் பெற்ற மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் கோயில் நகரம் எனப்போற்றப்படும் மதுரையின் மத்தியில் வைகையாற்றங்கரையில் அமைந்துள்ளது. சக்தியின் அம்சமாக அம்மன் குடிகொண்டிருக்கும் மூன்று தலங்களில் ஒன்றாக இது விளங்குகின்றது.   காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும், மதுரையில் மீனாட்சியாகவும் லோகநாயகி அருள்பாலிக்கின்றாள். மதுரையின் ஆன்மீக அடையாளமாய் திகழ்ந்திடும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் மூலவராய் சுந்தரேஸ்வரரும் அம்பிகையாய் மீனாட்சியும் அருள்பாலிக்கின்றார்கள். இச்சிவாலயத்தை மீனாட்சியம்மன் ஆலயம் என்றும் அழைக்கின்றார்கள்.

முக்கியச் சிவத்தலங்களான சிதம்பரம், திருக்காளத்தி, காசி ஆகியவற்றுடன் நான்காவது சிறப்புமிக்க சிவத்தலமாக திருவாலவாய் திருத்தலமும் வைக்கப்படுகின்றது. மேலும் பிறக்க முக்தி, இருக்க முக்தி மற்றும் இறக்க முக்தி என்று ஆன்மீகச் சான்றோர்களால் வர்ணிக்கப்படுகின்ற, சிவனின் முக்தித் தலமாகிய மதுரையை “சிவன் முக்திபுரம்” என்றும் அழைக்கின்றார்கள். அம்பிகையின் சக்தி பீடங்களில் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகின்ற மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தை “ராஜமாதங்கி சியாமள பீடம்” என்றும் போற்றுகின்றார்கள்.

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 192-வது தலமாகவும், பாண்டிய நாட்டு தலங்களில் ஒன்றாகவும் மதுரையின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் விளங்குகின்றது. சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இவ்வாலயத்தை, சிவனருளால் பாவம் நீங்கப் பெற்ற இந்திரனால் கட்டப்பட்டது எனப் புராணங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீராமர், லட்சுமணன், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் மகரிஷிகளால் இச்சிவாலயம் வழிபடப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தில் வழங்கப்படுகின்ற தாழம்பூ குங்குமம் பிரசித்தி பெற்றதாக இருக்கின்றது. மதுரைப் பகுதியின் மத்தியில் கடம்பவனக்காடு நிறைந்திருந்தது. இச்சமயத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால், அப்பாண்டிய மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை என்னும் அழகிய நகரை உருவாக்கினான். அதன் பின்னர், சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திர - அமுதத்தைச் சிந்தி புதிய மதுரை நகருக்கு ஆசி கூறினார் என வரலாறுகள் தெரிவிக்கின்றன.

மீனாட்சி சுந்தரேஸ்வரர், இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருளுகின்றார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் என்றெல்லாம் பக்தர்கள் அழைப்பார்கள். மதுரையின் ஈசனாகிய சொக்கலிங்கநாதரை வழிபட்டு, இந்திரன் தன்னுடைய பாவத்தினைக் கழுவிக் கொண்டான். அதனால் சுயம்பு லி்ங்கத்திற்கு அற்புதமானதொரு ஆலயம் எழுப்பினார். ஆதலின் மூலவர் விமானத்திற்கு “இந்திர விமானம்” எனப் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில், அம்பாளின் திருவிக்கிரகம் மரகதப் பச்சைக்கல்லால் ஆனதாகும். அம்பாளின் கருவறையை 32 சிங்க உருவங்களும், 64 சிவக்கணங்களும், 8 கல் யானைகளும் தாங்கி நிற்பது அபூர்வ அமைப்பாகும். இந்த ஆலயத்தில் கலையழகு மிக்க பத்து மண்டங்கள் அமையப் பெற்றுள்ளன. அவற்றில் “ஆயிரங்கால் மண்டபம்” மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்படுள்ளது. இந்தூண்களை எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும், ஒரே நேர்வரிசையில் தென்படுவது வியப்பு மிக்க விடயமாகும். இந்த ஆயிரங்கால் மண்டபம் ஆலயத்தின் அருங்காட்சியகமாகத் தற்போது செயல்படுகின்றது. இவ்வாலயத்தின் தலவிருட்சம் கடம்பமரமாகவும், தீர்த்தங்களாக ஆலயத்தின் பொற்றாமரைக் குளமும், வைகையும் இருக்கின்றன. சிவபெருமான் நடாத்திய 64 திருவிளையாடல்களும், சுவாமி சன்னதிப் பிரகாரங்களில் சிற்பக் காட்சிகளாகச் செதுக்கப்பட்டுள்ளன. மதுரையின் 10 நாள் சித்திரைத் திருவிழா அகிலப்புகழ் பெற்றதாகும்.

- அபிதா மணாளன்