சூரிய தோஷம் போக்கும் திருமங்கலக்குடி பிராண நாதேஸ்வரர் ஆலயம்!

சூரிய தோஷம் போக்கும் திருமங்கலக்குடி பிராண நாதேஸ்வரர் ஆலயம்!

ஜாதகத்தில் சூரியன் நீசம், பகை, மறைவு, சூரிய திசை, புத்தி பாதிப்புக்கு சூரியனார் கோவில் - தஞ்சை - திருவையாறு சாலையிலுள்ள திருக்கண்டியூர் வீரட்டம், விழுப்புரம் அருகிலுள்ள திருப்புறவார் பனங்காட்டூர், குன்றக்குடி அருகிலுள்ள சூரக்குடி.
 
சூரியனார் கோவில் கும்பகோணம் அருகில் மற்றும் கோனார்க்கில் உள்ளது. தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து தர்ப்பைப்புல் விரல்களில் வைத்து செம்பு நீரில் ஒரு முனையை வைத்து மறுமுனையை கைவிரல்களில் பிடித்துக் கொண்டு, ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்து தீபம் காட்டியபின், நீரை அருந்துவதால் சூரியனாரை பிரார்த்தனை செய்த பலன் கிடைக்கும்.
 
ஆதித்யஹிருதயம் மிக எளிமையான சிறந்த பரிகாரம் ஆகும். பக்தி சிரத்தையுடன் செய்தால் வாழ்வில் வளம் பெறலாம்.
 
காலமா முனிவர் கிரக மாற்றத்தால் தனக்கு தொழு நோய் ஏற்படப் போவதை அறிந்து, நவகிரகங்களை வேண்ட, கிரகங்கள் அவருக்கு அருள் புரிந்தன. இதையறிந்த பிரம்மன் கோபம் கொண்டு முனிவருக்கு வரவிருந்த நோயை கிரகங்களுக்கு உண்டாகும்படி சபித்து விட்டார். பூலோகம் வந்த நவ கிரகங்கள் சிவனை நோக்கித் தவிமிருந்து சாப விமோசனம் பெற்றனர். நவ கிரகங்கள் தங்களுக்குத் தொழுநோய் ஏற்படாமலிருக்க ஸ்தாபித்த லிங்கத்தைக் கொண்டு எழுந்த ஆலயம் திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் ஆலயம். ஜாதகத்தில் சூரியன் நீசம், பகை, மறைவு பெற்றவர்கள், ஞாயிற்றுக்கிழமை முதலில் திருமங்கலக்குடி வழிபாட்டை, முடித்துக் கொண்டு எதிர்புறமுள்ள சூரியனார் கோயில் வந்து கோள் வினை தீர்த்த விநாயகரை தீபம் ஏற்றி வழிபட்டு, பின் மூல ஸ்தானம் சென்று உஷா, பிரத்யஷாவுடன் இருக்கும் சூரிய பகவானையும் அவருக்கு எதிரில் உள்ள குரு பகவானையும் தீபம் ஏற்றி வழிபட்டு, பின்பு சந்திரன், கேது, சுக்கிரன், ராகு ஆகியோரையும் தீபம் ஏற்றி வழிபட்டு, பின்பு, ராகு சன்னதி அருகிலுள்ள சண்டிகேசுவரரை வழிபட்டு பின்பு, மீண்டும் வந்த வழியிலேயே திரும்பி வந்து அனைத்து கிரகங்களையும் மறுமுறையும் வழிபட வேண்டும். கடைசியாக மீண்டும் கோள் வினை தீர்த்த விநாயகரை வழிபட்டு, கொடி மரத்தினருகே விழுந்து கும்பிட்டு வழிபட வேண்டும். 9 கிரகங்களும் ஆயுதம் வாகனமின்றி நின்றி கோலத்தில் காட்சி தருவதால், நவகிரக ஸ்தலங்களுக்குத் தனித்தனியே சென்று அடையும் கிரக தோஷ நிவர்த்தியை இங்கு ஒரே இடத்தில் நவகிரகங்களை வழிபட்டு கிரக தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
 
வழித்தடம்
 
கும்பகோணத்திலிருந்து ஆடுதுறை சென்று, அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் ஆலயம் அடையலாம் கும்பகோணத்திலிருந்து பஸ் வசதி உண்டு்.
 
- K. துரைராஜ்