வருமானம் தரும் வடக்கு ஜன்னல்
வடக்குப் பக்கம் குறைந்தபட்சம் இரண்டு அடிகள் காலியிடம் விடப்பட்டு காம்பவுண்டும் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளில் உள்ள வடக்கு ஜன்னல் பூரண சிறப்பைத் தருகிறது. வடக்குத் திசையின் அதிபதியாக குபேரனைக் குறிப்பிடுகிறோம். குபேரன் எனப்து ஒரு குறியீடு. குபேரனுக்கு அதிதேவதை சோமன். குபேர கடாட்சம் விரும்புகிறவர்கள் வடக்கு ஜன்னலையும் அதன் வழியாக வரும் காற்றையும் விரும்புகிறவர்களாக இருப்பார்கள். குபேரனிடம் மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் இருக்கின்றன என பழம்பெரும் நூல்கள் கூறுகின்றன. இவைகளில் சங்கமும், பத்மமும்தான் முதல்நிலை தகுதியைப் பெறும் நிதிகள். இவைகளுக்கு உருவம் உண்டு. குட்டையான பூதவடிவில் தாமரை மலர் மீது சங்கை வலது கரத்தில் பிடித்திருப்பவர் சங்கநிதி. வலது கையில் தாமரையைப் பிடித்திருப்பவர் பத்மநிதி.
நமது கோவில் நுழைவாயில்களில் இடப்புறம் பத்மநிதியையும், வலப்புறத்தில் சங்க நிதியையும் காணலாம். தஞ்சை பெரிய கோவிலில் நுழைவாயிலின் இருபுறமும் இடம் பெற்றிருக்கும் இக்கோடீசுவர பூதங்களை பக்தர்கள் கவனித்திருக்கக் கூடும். தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில் கோபுரங்களில் ஈசானிய மூலையிலிருந்து வாயு மூலைக்குள் வருகிற பகுதியில் தான் குபேரனின் சிற்பங்கள் இடம் பெறுவது வழக்கம். நமது வீடுகளில் கூட இந்தக் குபேரனை தரிசனம் செய்வதற்காகத்தான் நமது பணப்பெட்டிகள் நைருதி மூலையில் வடக்கைப் பார்த்தவாறு வைக்கப்படுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.