எத்தனை எத்தனை பிறவிகள்!

எத்தனை எத்தனை பிறவிகள்!

இறைவனே, இருப்பையூர் என்ற தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற சிவபெருமானே! நான் எத்தனையோ பிறவிகள் பிறந்து இளைத்து விட்டேன். என்னை தங்கள் கருவில் பலமுறை சுமந்து அம்மாக்கள் உடல் சலித்துப் போய்விட்டனர். என் தலையெழுத்தை எழுதி எழுதி பிரமன் கை சலித்துப் போய்விட்டான். இனிமேல் நான் மற்றொரு அன்னையின் கருப்பையில் வராமல் காத்தருள் என்று பாடுகிறார் பட்டினத்தார்.
 
மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே நாதா
இருப்பையூர் வாழும் சிவனே மற்றுமோர் அன்னை
கருப்பையூர் வாராமல் கா
 
என்பது அந்தப் பாடல்.
 
இதனை உறுதிப்படுத்துவதைப் போல நடந்த ஆராய்ச்சியைப் படியுங்கள் மனிதர்கள் எத்தனை எத்தனை பிறவிகள் எடுக்கிறார்கள் என்பதற்கு இதுவே சிறந்த ஆதாரம்.
 
அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிந்தவர் பிரியன் எஸ் வெயிஸ் என்பவர் இவரிடம் ஒரு பெண் தன்னுடைய மனநோய்க்காக சிகிச்சை பெற வந்தாள். அவளுக்கு பலவிதமான மருந்துகள், சிகிச்சைகள் அளித்தும் அவள் குணமாகவில்லை. இந்தப் பெண்ணின் நோய் மருத்துவருக்கு பெரிய சவாலாக இருந்தது. ஆகவே அவர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி மருத்துவம் செய்ய ஆரம்பித்தார்.
 
இந்த மருத்துவ சிகிச்சையின் போது அந்தப் பெண்ணுக்கு முன்ஜென்ம நினைவுகள் வர ஆரம்பித்தன. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அந்தப் பெண் இதுவரையில் 86 முறை இறந்து பிறந்திருப்பதாகத் தெரிவித்தான். அது மட்டும் அல்லாமல் அவள் தன்னுடைய பலவகைப்பட்ட பிறவிகளில் 12 பிறவிகளைப் பற்றி மிகத் துல்லியமாகப் பல தகவல்களைத் தெரிவித்தாள்.
 
அப்படி அவள் தெரிவித்த பல தகவல்களில் முக்கியமானது வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் அந்தக் கடனை அடைப்பதற்காக மீண்டும் நாம் பிறவி எடுத்து இந்த உலகத்தில் பிறக்க வேண்டும் என்பது தான்.
 
வேறு ஒருவர் ஹிப்நாடிச உறக்கத்தில் ஆழ்ந்த போது தான் இதுவரையில் எடுத்த 40 பிறவிகளை நினைவுபடுத்தி எடுத்துரைத்தார்.
 
பதஞ்சலி யோகம் சொல்கிறது
சாந்தோதி தாவ்ய பதேச்ய தர்ம
அனுபாதீ தர்ம
 
ஒவ்வொரு பொருளுக்கும். உயிருக்கும் அவற்றுக் உரிய தனித்தன்மை உண்டு. இயல்பும் உண்டு. இதுவே அந்த உயிரின் தர்மம் என்கிறார்கள்.
 
இந்தக் குணம் அல்லது இயல்பு எப்படி ஏற்படுகிறது என்றால், இது ஒரு உயிரின் சென்ற கால நடைமுறைகளினால் ஏற்படுகிறது. இதுவே வித்துக்கள் என்கிற சமஸ்காரங்கள் ஆகும்.
 
தாவரம் முளைப்பதற்கு விதை அவசியம் அதைப் போலவே பிறவி எடுப்பதற்கு கர்மவினைகள் அடிப்படையாகின்றன. இந்தக் கர்மவினைகள் நமதுசெயல்களினால் ஒவ்வொரு பிறவியிலும் ஆன்மாவில் பதிகின்றன.
 
இந்த வகையில் தான் கடன் வாங்கிய ஒருவன் அதைத்திருப்பிக் கொடுக்காவிட்டால் அதற்காக அந்தக் கடனை அடைப்பதற்காக மீண்டும் ஒரு பிறவி எடுக்கிறான் என்பதை அந்தப் பெண் தெரிவித்து இருக்கிறாள்.
 
பிதிர் உலகம் ஏழு அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு அடுக்கிலும் பல நிலைகள் இருக்கின்றன. பழைய சம்பவங்களை நினைவுபடுத்தும் அடுக்கு ஒன்று இருக்கிறது. இந்த அடுக்கில் உள்ளவர்கள் தங்கள் கடந்து போன வாழ்க்கையைப் பார்ப்பதற்கு முடியும். தங்கள் குறையைக் கண்டுபிடித்து அதைச் சரி செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.
 
கடன் வாங்கிவிட்டு அதனைத் திரும்பக் கொடுக்காமல் இறந்து போனால், அவர்கள் அடுத்த பிறவி கண்டிப்பாக எடுத்து எப்பாடுபட்டாவது அந்தக் கடனை அடைக்க வேண்டி இருக்கும். இல்லாவிட்டால் அவர்களால் அடுத்த நிலைக்குச் செல்ல முடியாது். கடனை பைசல் செய்த பிறகே ஆத்மா அடுத்த உயர்ந்த பிறவியை எடுத்துக் கொள்ளும்.
 
அதுமட்டும் அல்ல கடனை வாங்கிவிட்டு அதைத் திரும்ப அடைக்காத ஆன்மாக்களை, கடன் கொடுத்த ஆன்மாக்கள் இந்த உலக வாழ்க்கையை நீத்த பிறகு வந்து சந்திக்கும். அடுத்த பிறவியிலும் கடனை அடைக்காவிட்டால் அந்த ஆத்மா சொல்ல முடியாத துயரங்களையும், தோல்விகளையும் சந்திக்கும்.
 
ஆகவே கடனைக் கொடுக்காமல் இறந்து விட்டால் எத்தனை பிறவி எடுத்தாலும் அது தொடர்ந்து வரும் என்றும் அந்தப் பெண் தெரிவித்தான். நீங்கள் கடன் வாங்குபவராக இருந்தால் ஏமாற்றாமல் கடன் தொகையைச் செலுத்தி விடுங்கள். அப்போது தான் கடன் கணக்குத்  தீருவதைப் போல உங்கள் ஜென்மக் கணக்கும் தீரும்.
 
- வேணு சீனிவாசன்