காவல் தெய்வமாய் பேரூர் ஸ்ரீ அங்காளம்மன்

காவல் தெய்வமாய் பேரூர் ஸ்ரீ அங்காளம்மன்

அமைவிடம் - கோயமுத்தூருக்கு மேற்கே ஆறாவது கிலோ மீட்டரிலுள்ள பேரூரில் இந்த அம்மன் கொலு வீற்றிருக்கிறாள். 

 
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பாம்பு அங்கிருந்து நாளடைவில் அது பாறைபோல் இறுக அதில் உளிகொண்டு அம்மன் சிலையை செதுக்கினார்கள் என வரலாறு கூறுகின்றது. அந்தப் புற்றினுள் சர்ப்பமாக இருந்து அன்னை அனைவரையும் காத்து வருகிறாள். சில சமயம் புடவையில் அச்சர்ப்பம் படுத்திருப்பதை பல பக்தர்கள் தரிசித்திருக்கிறார்கள்.
 
ஒரு முறை பகல் இரண்டரை மணிக்கு கோவில் நடைசாத்திய பிறகு ஒரு முக்கியஸ்தர் தரிசனத்துக்கு வந்திருக்கிறார். அகால வேளையில் கதவு திறக்கக் கூடாது என்று சொன்னதைக் கேட்காமல் கதவைத் திறக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருக்கிறார். கதவைத் திறந்ததும் அனைவரும் மிரண்டு விட்டார்கள். அம்பாளின் காலடியில் சர்ப்பம். முக்கியஸ்தர் “வெளி்யே போய் விடலாம்” என்று சொல்லி உடனே வெளியேறி விட்டார். காத்திருந்து மாலையில் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து விட்டே ஊர் திரும்பியிருக்கிறார். அம்பாளின் வலது தொடையிலுள்ள துவாரம் (புற்று துவாரம்) வழியாக பாம்பு உள்ளே செல்வதை பலர் கண்டிருக்கின்றனர். கோவில் சுவற்றில் சர்ப்பம் வரையப்பட்டு உள்ளது.
 
“நம்பியவர்களுக்கு நான் அன்னை, உடனிருந்து காப்பென்” என்ற வாசகங்களும் காணப்படுகின்றன.
 
ஒரு சமயம் ஈஸ்வரனும், பார்வதியும் படியளக்க பூ உலகத்திற்கு வருகையில் ஒரு ஆறு குறுக்கிட்டது. “சகலமும் அறிந்த கைலாய நாதர்” என்பதை மறந்து கணவர் என்ற பேதமையில் பார்வதி தேவியார் “அங்கு ஆழம், அங்காழம்” என்று அடிக்கடி சொன்னதால், அங்காழம்மன் என்று அழைக்கப்பட்டது. அது காலப்போக்கில் மருவி பார்வதி குடி வந்த இடம் “அங்காளம்+மன்” என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது.
 
சிவஸ்தலமான பேரூரில் சிவாலயத்துக்கு எதிரே அங்காளம்மன் கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளத. அங்காள பரமேஸ்வதி வடக்கு நோக்கி அமர்ந்து, கையில் சூலாயுதமும், காலருகில் அரிவாளுடனும் அருள் புரிகின்றாள். விநாயகர், சுப்ரமண்யர் வடக்கு நோக்கியும், பேச்சியம்மன் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.
 
நோய்வாய்ப்பட்டவர்கள் பேச்சியம்மனுக்கு நேர்ந்து கொண்டு காணிக்கை செலுத்துகின்றனர். கர்ப்பிணிகள் ஏழு, அல்லது ஒன்பதாம் மாதங்களில் படையலிடுகின்றனர். பூசிணிக்காய் உடைக்கின்றனர் கொத்தனார்களின் குலதெய்வமான “வீரமார்த்தி அம்மன்” சன்னதியும் இங்குள்ளது. இதற்கும் மாவிளக்கேற்றி, தேங்காய் உடைத்து, பழம், கரும்பு, இனிப்பு, முறுக்கு என அனைத்தும் படைத்து வழிபடுகின்றனர். பௌர்ணமி தோறும் அங்காளம்மனுக்கும், பேச்சியம்மனுக்கும் வடைமாலை சார்த்தப்படுகிறது.
 
மாசானக்கருப்பு என்ற விசேஷமான சன்னதியும் இங்குண்டு. நவராத்திரி சமயத்தில் அற்புதமாக கொலு வைத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், அர்ச்சனை எல்லாம் செய்யப்படுகிறது. தினமும் சுண்டல் நிவேதனம் செய்து விநியோகிக்கின்றனர்.
 
மாசித் திருவிழாவின் ஐந்தாம் தீமிதி வைபவம் நடக்கும். பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் இறங்குவர். உச்சிக்கால பூஜையும், அபிஷேகமும் நடந்தபின், கொடி இறக்கப்பட்டு அன்னதானம் நடக்கும். ஏராளமான அன்பர்கள் அரிசி, பருப்பு, காய்கறி, நன்கொடை தந்து அம்மனின் அருளுக்குப் பாத்திரமாகிறார்கள்.
 
அன்று மாலை மஞ்சள் நீராட்டு விழா. நடராஜர், பார்வதி பிரதிமைகளைக் கொண்டு போய் (பார்வதியின் காலடியில் சிவலிங்கம் உள்ளது) வைத்து பக்தர்களுக்கு விபூதி கொடுத்து பழம், கடலை, முறுக்கு வகைகளை எடுத்துச் சென்று நொய்யல் ஆற்றங்கரையில் வைத்து பூஜித்து கட்டிய கங்கணத்தை அவிழ்த்து விட்டு விக்கிரகங்களை நீராட்டி, புத்தாடை அணிவித்து, மாலைசூட்டி அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து வருவார்கள். மண்டகப்படி உள்ள இல்லங்களின் முன் தெய்வங்களை இறக்குவர். அவ்வீட்டார்கள் பானகம், நீர்மோர், சுண்டல் என்று படைக்க, தீபாராதனை காண்பித்து கோவிலை அடையும் போது இரவு மணி பன்னிரண்டாகி விடும். அடுத்து பேச்சியம்மனுக்கு பூஜை நடக்கும். அம்மனின் சன்னிதியில் கபாலத்தில் விபூதி வைக்கப்பட்டிருக்கும்.
 
பேய் பிசாசு பிடித்தவர்கள், சித்தப்பிரமை கொண்டவர்கள் ஆலயத்தில் ஒரு பக்கமாய் உட்கார வைக்க்பட்டிருப்பர். அரை லிட்டர் பால், வெள்ளை வஸ்திரம், பச்சரிசிமாவு வைத்திருப்பர்.
 
பச்சரிசி மாவில் மனித பொம்மை செய்து, அரளிக் குச்சியை நட்டு வைத்து, மாவில் பாலை ஊற்றியதும், முழுப் பூசணிக்காயை மூன்று முறை சுற்றி, கபாலத்திலிருந்து விபூதி எடுத்து உட்கார்ந்திருப்பவர்களுக்கு இட்டு, வேறு இடத்தில் அமரச் செய்கின்றனர். பச்சரிசி பொம்மையை ஆற்றில் நனைத்து வீசி எறிந்து விட்டு சர்க்கரைப் பொங்கல், வடை நிவேதிக்கிறார்கள்.
 
கடைசி நாள் மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள குண்டத்துக்கு பால், தயிர், இளநீர், தேன், பழங்கள், மஞ்சள், எலுமிச்சம் பழம் இவற்றால் அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பு சாத்தி குண்டத்தை சாந்தி செய்கின்றனர். அடுத்து அங்காள பரமேஸ்வரி, பேச்சியம்மன், வீரமார்த்தி அம்மன், விநாயகர், முருகன் எல்லா தெய்வங்களுக்கும் அபிஷேக, அலங்காரம் நடததுவதோடு மாசித்திருவிழா பூர்த்தியாகின்றது.
 
ஆடி மாதம் அமாவாசை, பௌர்ணமி, செவ்வாய், வெள்ளி நாட்களில் அம்பாளின் ஊஞ்சல் திருவிழா கண்படைத்தவர் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய திருவிழா. பேச்சியம்மனை மருத்துவச்சி அம்மா என்றே குறிப்பிடுகின்றனர். பேறு காலத்தை எதிர்நோக்கியிருப்பவர்கள் பிரார்த்தித்தால் சுகப்பிரசவம் ஆகிறதாம். “ஆம்” என்றால் அழகு (அம்+காளி அங்காளி) அழகான காளியம்மன் பக்தர்களுக்காக ஆயுதம் தாங்கி வினைகளை வேரறுக்க, ஆபத்துகளிலிருந்து காக்க இங்கே எழுந்தருளியிருக்கிறாள். அவளை ஆராதித்து அவள் கருணைக்குப் பாத்திரமாவோம்.
 
- ஆர். பொன்னம்மாள்