சிந்தாத கிண்ணம்! சிதறாத எண்ணம்!

சிந்தாத கிண்ணம்! சிதறாத எண்ணம்!

மகாபாரத்தையும் பதினெண் புராணங்களையும் இயற்றி அருளியவர் வியாச முனிவர். அவருடைய ஒரே மகன் சுகர்.
 
எல்லா நூல்களையும் இளமையிலேயே கற்றுச் சிறந்த அறிஞராக விளங்கினார் சுகர். அவர் உள்ளம் இல்லற வாழ்க்கையை நாடாமல் துறவறத்திலேயே நாட்டம் கொண்டிருந்தது. இதனால் அவரை எல்லோரும் சுக முனிவர் என்றே அழைத்தார்கள்.
 
மகனின் துறவு நிலையைக் கண்டு வருந்தினார் வியாசர். “மகனே! நீ திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று என் உள்ளத்திற்கு மகிழ்ச்சி தர வேண்டும்” என்றார்.
 
“தந்தையே! எல்லாம் உணர்ந்த தாங்களா இப்படிச் சொல்வது? உலக மாயைக்கு எல்லாம் அடித்தளமாக உள்ளது சம்சார பந்தம். அதில் என்னை ஈடுபடச் சொல்கிறீர்களா?
 
நல்வழியில் செல்லுமாறு தந்தை கட்டளையிட்டால் மட்டுமே பணிய வேண்டியது மகனின் கடமை. என் உள்ளம் துறவையெ நாடி நிற்கிறது. திருமணம் செய்து கொள்ளும்படி இனிமேல் என்னை வற்புறுத்தாதீர்கள்” என்று உறுதியாகச் சொன்னார் அவர்.
 
தான் என்ன சொன்னாலும் மகன் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்பதை உணர்ந்தார் அவர்.
 
“மகனே! நீ மிதிலை மாநகர்க்குச் செல். பேரரசர் சனகர் அங்கே ஆட்சி செய்கிறார். அவர் வாய்மை தவறாதவர். புலன்களை வென்றவர். அறநெறிச் செல்வர். பிரும்ம ஞானி. ராஜ யோகி. நீ அவரிடம் சென்று திருமணம் செய்து கொள்ள மறுப்பதைச் சொல். அவர் உன் அறியாமையைப் போக்குவார்.”
 
இதைக் கேட்ட சுகர் வியப்பு அடைந்தார். அரசன் ஒருவன் எதையும் சமமாகப் பார்க்கும் பிரும்ம ஞானியாக இருக்க முடியுமா? அப்படி இருந்தால் ஆட்சியைச் செம்மையாக நடத்த முடியுமா? மிதிலை சென்று உண்மையை அறிவோம் என்று நினைத்தார்.
 
மிதிலை வந்த சுக முனிவரைச் சனகர் சிறப்பாக வரவேற்றார்.
 
தாம் வந்த காரணத்தை அவரிடம் சொன்னார் சுகர்.
 
“சுக முனிவரே! ஒருவன் இல்லற இன்பத்தை நுகர்ந்து கொண்டே அதில் பற்று இல்லாமல் பற்றற்ற துறவியைப் போல வாழலாம்.
 
நான் இல்லறத்தில் ஈடுபட்டு உள்ளேன். அரசனாக இருந்து ஆட்சியையும் செம்மையாக நடத்துகிறேன். பற்றற்ற துறவி போலவும் வாழ்கிறேன். அதனால்தான் என்னை எல்லோரும் ராஜரிஷி என்று அழைக்கின்றனர்.”
 
“என்ன! இல்லறத்தில் இருந்து கொண்டே துறவி பேல வாழ்வதா? அது எப்படி முடியும்?” என்று கேட்டார் சுகர்.
 
அப்பொழுது வீரர்கள் சிலர் திருடன் ஒருவனைச் சனகரின் முன் நிறுத்தினார்கள்.
 
“அரசே! திருடும் போது இவன் எங்களிடம் கையும் கனவுமாகப் பிடிப்பட்டான். இவனுக்கு என்ன தண்டனை தருகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
 
“இந்தத் திருடன் உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பு தருகிறேன். வழிய வழிய எண்ணெய் ஊற்றப்பட்ட ஒரு கிண்ணத்தை இவன் கையில் கொடுங்கள். எப்பொழுதும் திருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கும் நம் நகர வீதிகளின் இவனை அழைத்துச் செல்லுங்கள்.
 
ஒரு துளி எண்ணெயும் கிண்ணத்திலிருந்து சிந்தாமல் திரும்பி வந்தால் இவன் விடுதலை பெறட்டும். இல்லையேல் தூக்கிக் தொங்கட்டும் என்றார் சனகர்.
 
அவர் சொன்னது போலவே வீரர்கள் செய்தார்கள்.
 
ஆனால் அந்தத் திருடனோ நகர வீதிகளை எல்லாம் சுற்றிவிட்டு ஒரு துளி எண்ணெயும் சிந்தாமல் அங்கு வந்தான்.
 
அவனைப் பார்த்து சனகர் “நீ நகரம் முழுமையும் சுற்றி வந்தாயே, அங்கு என்னென்ன பார்த்தாய்? சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.
 
“அரசே! கிண்ணத்திலிருந்து ஒரு துளி எண்ணெயும் சிந்தக் கூடாது என்ற ஒரே எண்ணம்தான் எனக்கு இருந்தது. அதிலேயே கவனமாக இருந்தேன். வழியில் எஎன்னென்ன நடந்தது என்று பார்க்கவில்லை” என்றான் அவன்.
 
அவனை விடுதலை செய்தார் சனகர்.
 
இதைப் பார்த்து சிந்தனையில் ஆழ்ந்தார் சுக முனிவர்.
 
தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருந்த திருடன் நகர வீதிகளைச் சுற்றி வந்தும் அங்கு நிகழ்ந்த எதையும் பார்க்கவிலலை.
 
அதே போல ஒருவன் திருமணம் செய்து கொண்டாலும் பற்றற்ற துறவி போல வாழலாம் என்பது அவருக்குப் புரிந்தது.
 
“சனகரே! எனக்கு நல்லறிவு ஊட்டினீர். தந்தை சொன்னது போலவே நான் திருமணம் செய்து கொள்கிறேன். நன்றி” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் அவர்.
 
- எ.சோதி