ஸ்ரீ ராம நவமியில் ரகுகுல சோமனை பக்தியுடன் வழிபடுவோம்!
உலகில் தர்மத்தின் தலை சாய்ந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் ஸ்ரீமகாவிஷ்ணு அவதாரங்கள் மேற்கொண்டு தர்மத்தின் ஆட்சியை நிலை நிறுத்தினார். அவ்வாறு அவர் எடுத்த அவதாரங்களுள் “ராமாவதாரம்” தனிச்சிறப்புடையதாகும். ஒரு மனிதன் தர்மகோட்பாடுகளுக்கு உட்பட்டு, நியாயத்தின் வழி நின்று எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ராமனின் மானிட வாழ்வு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
மகாவிஷ்ணு மானிட உருவம் தாங்கி அயோத்தியில் மனிதனாய் வாழ்ந்து காட்டிய வரலாறு தான் ராமவதாரம். இந்த அவதாரத்தில் மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அத்தனை தர்ம நியதிகளும் அப்போதைய சமூகத்திற்கு எடுத்து உரைக்கப்படுகின்றது. சூரிய குலத்தில் உதித்த ஸ்ரீ ராமச்சந்திரருக்கு குலகுருவாக வசிஷ்ட மகிரிஷி இருந்து அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கினார். இந்த அறிவுரைகள் ராஜகுல திலகமான ராமனை இன்னும் புடம் போட்ட தங்கமாய் மாற்றியது.
ராமனின் எண்ணமும் செயலும் எப்போதும் நீதியின் வளையத்திற்குட்பட்டே இருக்கப் பெற்றது. ராமவதாரத்தில், ஸ்ரீ மகாவிஷ்ணுவே ராமராகவும் பாம்பணையான ஆதிசேஷன் தம்பி லட்சுமணனாகவும், ஸ்ரீ மகாவிஷ்ணுவின் கையிலுள்ள பாஞ்சசன்னியம் என்ற சங்கு பரதனாகவும், மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் ராமரின் தம்பி சத்ருகனனாகவும் அமையப் பெற்றிருந்தார்கள் என்பது சிறப்பாகும். சைத்ர மாதத்து வளர்பிறை நவமி திதி நாளில் புனர்பூச நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் ராமரின் அவதாரம் நடைபெற்றது. ராமர் பிறந்த நேரத்தை குறிக்கும் இவையணைத்தும் அபூர்வ புண்ணிய காலமாக கருதப்படுவதால் ராமரின் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வணங்கினால் துன்பங்கள் விலகி ஓடும் என்பது ஐதீகம்.
இலங்கைத் தீவில் அசோக வனத்தில் சிறைப்பட்டிருந்த சீதாதேவியை மீட்டு வர, அனுமனின் தலைமையில் உள்ள வானரங்கள் கடலை கடந்து இலங்கை தீவை அடைய அணை கட்டினார்கள். அப்போது அனுமன் சில பாறை துண்டுகளில் “ராமா” என்ற நாமத்தை செதுக்கி கடலில் எறிந்தார். அனுமனால் வீசப்பட்ட பாறைகள் அனைத்தும் கடலில் மிதந்து சென்றன. இதைப் பார்த்த ராமபிரானும் ஒரு பாறையை எடுத்து கடலில் வீசியெறிய அது நீரில் அமிழ்ந்து போய்விட்டது. இதனால் வியப்படைந்த ராமபிரான் அதுபற்றி அனுமனிடம் கேட்டார். “அய்யனே, தங்களை விட தங்களின் திருநாமம் உயர்வும் புனிதமும் பொருந்தியதாகும். மேலும் இது பல சாதனைகளை சாதிக்கின்ற பெருமைகளையும் உடையதாகும்” என்று அனுமன் எடுத்துரைத்தார். “ரா” “மா” என்றால் யாருடைய நினைவில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அமைதியும் உண்டாகின்றதோ அவன் பரம பாக்கியவான் ஆகின்றான். ராமா என்ற சொல் பிரம்மத்தையே குறிக்கின்றது. அனுமனின் பலம் எப்படி அனுமனுக்கு தெரியாதோ அதைப் போலவே ராமா என்ற சொல்லின் பெருமையை ராமருக்கே விளங்காமல் இருந்தது.
ஒருவர் ஒரு மணி நேரத்தில் பன்னிரண்டாயிரம் முறை ஸ்ரீ ராம நாம மந்திரத்தை சொல்ல இயலும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படி பதின்மூன்று கோடி முறை சொன்னால் சரீரத்தின் வடிவில் அம்மந்திரத்தின் தேவதையாகிய ஸ்ரீ ராம பிரானை தரிசனம் செய்யலாம் என்று சுவாமி சிவானந்தர் கூறியிருக்கின்றார். திருவையாற்றின் ஸ்ரீ தியாக பிரம்மம் ஒரு கோடி ராமநாம ஜபத்தை செய்த பிறகு தான் ராமர் ஒரு கணம் அவருக்கு காட்சி அளித்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. “ஓம் நம சிவாய” என்பது திருவைந்தெழுத்து. இது ஒரு சிவனுக்குரிய மந்திரமாகும். “ஓம் நமோ நாராயணாய” என்பது அஷ்டாட்சரம் என்னும் எட்டெழுத்து மந்திரம். இது விஷ்ணுவுக்குரியது. எட்டெழுத்தில் உள்ள “ரா”வும் ஐந்தெழுத்து உள்ள “மா”வும் இணைந்து உருவானது தான் “ராம” நாமம். இதுவே தாரக மந்திரமானது.
இதர மந்திரங்களை ஜபிக்கும் போது “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து தான் ஜபிக்க வேண்டும். “ராம” நாமத்திற்கு “ஓம்” சேர்க்க வேண்டியதில்லை. ராம ராம என்றாலே போதுமானதாகும். யாகம் செய்தல், தவம் செய்தல் ஆகியவற்றால் அடைகின்ற புண்ணியத்தை காட்டிலும் மிக எளிதான சுலபமான வழியொன்று உள்ளது என்றால் அது ராமநாம ஜபம் செய்கின்ற சித்தாந்தம் தான். இந்த உண்மையை உலகுக்கு எடுத்துரைத்தவர் காமகோடி பீடத்தை அலங்கரித்த அருட்செல்வத்தை பகவத் நாம போதேந்திரா ஆவார். ராமநாமத்தின் பெருமையை கவிச்சக்கரவர்த்தி கம்பர் கீழ் கண்டவாறு தன்னுடைய பாடலின் மூலமாக தெரிவிக்கின்றார்.
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்
ஸ்ரீராம நவமி உற்சவத்தில் அனுஷ்டிக்க வேண்டியது.
ஸ்ரீராமநவமியை ஓர் உற்சவமாகவே ஸ்ரீராம பக்தர்கள் பத்து நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள். இந்தப் பத்து நாட்களிலும் ஸ்ரீராமர் பூஜை, ராமநாம ஜபம், ராமாயணம் பாராயணம் செய்தல் ஆகியவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இந்தப் பத்து நாட்களில் ராமாயணம் முழுவதையும் படிப்பது சிரேஷ்டமானத. முழுவதும் படிக்க இயலாவிட்டால் சுந்தர காண்டம் மட்டுமாவது படிக்க வேண்டும். இந்தப் பத்து நாட்களிலும் ராமாயணத்திலிருந்து ஒரு சர்க்கமாவது நாள்தோறும் படிப்பது நல்லது. எதுவுமே செய்ய இயலாதவர்கள் ஸ்ரீராம நாமத்தை எவ்வளவு அதிகமாக ஜபம் செய்ய இயலுமோ, அவ்வளவு அதிகமாக ஜபம் செய்வது நல்லது.
- அபிதா மணாளன்