ஸ்ரீ கோமதியம்மனுக்கு அருள் செய்த சங்கர நாராயணன்

ஸ்ரீ கோமதியம்மனுக்கு அருள் செய்த சங்கர நாராயணன்

மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றால் சிறப்புப் பெற்றது சங்கரன்கோவில் திருத்தலம். சங்கரநாயினார் கோவில் என்றும் அழைப்பார்கள். சிவ, விஷ்ணு பேதமின்றி, நாராயணனும் தம்முன் அடக்கம் என்பதை சிவன் பாதி, நாராயணன் பாதியாகத் தமது வாம பாகத்தில்நாராயணனையும் காட்டி அற்புதக் காட்சி கொடுத்த திருத்தலம் சங்கரன்கோவில். தென்காசி-விருதுநகர் தயில் பாதையில் இருக்கிறது. சாலை வழியாகச் செல்வது என்றால் ராஜபாளையத்திலிருந்து 32 கிலோ மீட்டர். திருநெல்வேலியிலிருந்து 40 கிலோ மீட்டர். இவ்வூரை ஆவுடையம்மன்கோவில், தவக கோயில் என்று குறிப்பிடுவதுண்டு.
 
இப்பகுதியில் பஞ்சபூதத் தலங்களில் நிலம் தொடர்புடைய பிருத்வித் தலமாகக் கருதப்படுகிறது. சங்கரன் கோவில் ஆலயத்தில் சங்கரலிங்கஸ்வாமி சந்நிதி உட்புறத்தில் புற்றுமண் இருக்கிறது. இந்தப் புற்று மணலில் சிறிது உடலில் பூசிக்கொள்ள, நோய் அனைத்தும் குணமாகும் என்று நம்பப்படுகிறது. இப்புற்று மண்தான் இங்கு பிரசாதம்!
 
இத்தலத்திற்கு அருகிலேயே உள்ள கரிவலம் வந்த நல்லூர் அக்னித் தலமாகக் கருதப்படுகிறது. காட்டு யானை வேலி அமைத்து வலம் வந்து ஈசன் பால்வண்ண நாதரையும், தேவி ஒப்பனை அம்பாளையும் வணங்கிய தலம். இத்தலத்தை ஒட்டிய தாருகாபுரம் நீர் தொடர்புடைய அப்பு ஸ்தலமாகும். அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாதர் இத்தலத்து இறைவன். மூவேந்தருக்கிடையே உண்டான மனக்கசப்பை நேரில் காட்சியளித்து தீர்த்து வைத்ததாக ஐதீகம். இத்தலத்தை ஒட்டிய தென்மலை வாயு ஸ்தலமாகும். 
 
சிவ பரிபூரணி சமேத திரிபுரநாதர் இத்தலத்து இறைவன் கருவறையில் உள்ள தீபம் காற்றில் அசைந்து ஆடினாலும் கூட தீபம் அணையாமல், அலை பாயாமாக எரிந்து கொண்டிருப்பது இத்தலத்தில் ஓர் அற்புதக் காட்சி நச்சாடை தவிர்த்த நாதர், தேவி தவம் பெற்ற நாயகி கோயில் கொண்டிருக்கும் தேவதானம் ஆகாயத்தலம். சிவலிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே இருப்பது இத்தல விசேஷம்.
 
அன்னை உமாதேவியார் இறைவனிடம், விஷ்ணுமூர்த்தியோடு அவர் பொருந்தியிருக்கும் அற்பதக் காட்சியைத் தமக்கு காட்டியருள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறார்.
 
விஷ்ணுவும், தானும் வேறில்லை, குற்றமற்ற தவம் செய்தால்தான் அந்த வடிவத்தைக் காண முடியும். ஆதலால் அகத்திய முனிவர் இருக்கும் பொதிகை மலைக்கருகில் புன்னைவன் க்ஷேத்திரத்தில் இறைவனை நினைத்துத் தவம் செய்கிறார். தேவிக்கு வாக்களித்தபடியே இறைவன் சங்கரநாராயணன் என்ற திருப்பெயரோடு வலப்பாகம் கங்கையைத் தரித்த ஜடைமுடியும், நாக குண்டலமும், சந்திரகிரகணம் போன்ற விபூதியும், மழுவாயுதமும், சர்ப்பாரணமும், கொன்றை மாலையும் புலித்தோலும், சர்ப்பமாகிய வீரக்கழலுமாகவும், இடதுபாகம் இரத்னகிரீடமும், மகர குண்டலமும், சக்கராயுதமும், பொற்பூணூலும், துளசிமாலையும், பீதாம்பரமும் சூடிய நாராயணனாகவும் காட்சியளித்தார்.
 
கோமதி அம்மன் தவம் செய்து சங்கரநாராயணர் திருஉருவத்தைத் தரிசித்ததை நினைவுகூரும் வாயிலாக ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் ஆடித்தபசு உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 
இக்கோயில் சங்கரலிங்கஸ்வாமி கோயில், கோமதி அம்பாள் கோயில், சங்கரநாராயணர் கோயில் என்ற மூன்று பெரும் பகுதிகளைக் கொண்டது. சங்கரலிங்க ஸ்வாமி சந்நிதிக்கும், கோமதியம்மை சந்நிதிக்கும் இடையில் சங்கரநாராயணர் சந்நிதி இருக்கிறது. பூலித்தேவர் கட்டிய உட்கோயிலில் இந்தக் கோயில் இருக்கிறது. அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய கோயில் பார்க்கப் பரவசமூட்டுகிறது.
 
கோமதி அம்மன் சந்நிதியில் தேவியின் திருஉருவம் முன்பு மந்திரச்சக்கரம் ஒன்றைப் பதித்திருக்கிறார்கள். திருவாவடுதுறை ஆதினத் தலைவரால் இச்சக்கரம் பதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். இத்தலத்தில் அன்னை கோமதியம்மன், நோய்வாய்ப்பட்டவர்களையும், பேய், பிசாசு போன்ற தீயச்சக்திகளால் சித்தப்பிரமை அடைந்தவர்களையும் குணப்படுத்துவதாகவும், இவ்வாறு மனநோய் கொண்டவர்கள் பலர் வந்து இங்கு குணமடைந்திருப்பதாகவும் கூறினார்கள்.
 
அன்னை பார்வதிதேவியே இத்தலத்தில் தவம் செய்து சிவபிரானை வழிபட்டு வந்ததால் இத்தலத்தில் தவம் செய்தல், யாகம், ஹோமம் போன்றவை செய்தல், சிவபஞ்சாக்ஷரம், வேதம் ஓதுதல், சிவனடியார்களுக்கு தான் தருமம் செய்தல் போன்ற புண்ணியச் செயல்களுக்குப் பல மடங்கு பலன் உண்டாகும் எனத் தலபுராணம் தெரிவிக்கிறது.
 
இத்தீர்த்தத்தில் நீராடி, கோயிலில் உள்ள புற்று மருந்தைச் சிறிது வாயிலிட - விஷ நோய்கள், குன்மம், தீராத வயிற்றுவலி போன்றவை குணமாகும் என்பது நம்பிக்கை. சித்திரை மாத்திலும், ஆடி மாத்திலும் இத்தீர்த்தத்தில் நீராடுவதைச் சிறப்பாகக் கருதுகிறார்கள். சோம வாரத்தோடு வரும் அமாவாசை நாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவதும் சிறப்பு.
 
- K. குருமூர்த்தி