காசிக்கு நிகரான புண்ணியத்தலமே இராமேஸ்வரம்!

காசிக்கு நிகரான புண்ணியத்தலமே இராமேஸ்வரம்!

இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்னும் புண்ணிய நகரத்தில் அமைந்துள்ளது இராமநாதசுவாமி ஆலயம். இங்குள்ள இறைவன் இராமநாதசுவாமி மற்றும் ராமலிங்கேஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார். இவ்வாலயத்தில் அம்பாளாய் அருள்பாலிக்கும் இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தினி என்தாகும். இராமேஸ்வரம் நகரும் ராமநாதசுவாமி ஆலயமும் வங்காள விரிகுடா கடலில் ஒரு அழகிய சிறிய தீவில் அமையப் பெற்றுள்ளன. திருஞானசம்மந்தர் மற்றும் திருநாவுக்கரசரர் தேவாரப் பாடல் பெற்ற இச்சிவத்தலம் முன்னோரை நினைந்து செய்யப்படுகின்ற வழிபாட்டில் முன்னிலை பெறுகின்றது. இத்தலம் வந்து வழிபட்டு ராமலிங்கேஸ்வரரின் திருவருள் பெற்றுச் சென்றவர்களில், ஸ்ரீராமர், பதஞ்சலி முனிவர், அம்பாளின் உபாசகரான ராயர், ஜகத் குரு ஸ்ரீ ஆதி சங்கரர், ஆஞ்சநேயர், சுக்ரீவன், விபீஷணன், விவேகானந்தர் ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
 
காசிக்குப் புனிதப்பயணம் மேற்கொள்பவர்கள், இராமேஸ்வரம் தலத்திற்கும் வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில், நீராடி இராமநாத சுவாமியையும், பர்வதவர்த்தினி தாயாரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரையானது முழுமை அடைகின்றது என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே, தென்-வட இந்திய யாத்ரீகர்களின் வருடம் முழுவதிற்குமான யாத்திரைப் பரிவர்த்தனைகளால், இராமேஸ்வரம் புனிதத்தலமானது  இந்திய ஒருமைப்பாட்டின் சின்னமாகக் கருதப்படுகின்றது. மேலும், எப்படிப்பட்ட கொடிய தோஷமாக இருந்தாலும், இராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து ராமலிங்கேஸ்வரரை வழிபட்டால் உடனே விலகிவிடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் யாத்ரீகள் வந்து செல்கின்ற இடம் என்பதால், இராமேஸ்வரம் தென் தமிழ்நாட்டின் முக்கிய புண்ணியத்தலமாக விளங்குகின்றது. இதைத் தவிர, பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம் என்பதாலும், இத்தலம் 12 சோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாக விளங்குவதாலும் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.
 
மறைந்த முன்னோருக்கு பித்ரு தர்ப்பணம் கொடுக்கவும், பித்ருக்களுக்கான வழிபாடுகளை மேற்கொள்ளவும், பித்ரு சாபங்களைப் போக்கிக் கொள்ளவும் திருச்சிராப்பள்ளி, திருமறைக்காடு, பவானி, திருவையாறு, கன்னியாகுமாரி, திருக்குற்றலாம், திருவீழிமிழலை, திருவாஞ்சியம் ஆகிய புகழ்பெற்ற புண்ணியத்தலங்கள் இருக்கின்றபோதிலும், இவ்விடயத்தில் இவற்றிற்கெல்லாம் மேலான தலமான பித்ரு வழிபாட்டுத் தலமாக விளங்குவது இராமேஸ்வரமேயாகும்.
 
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்ற இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற 274-ல் இது 198-வது தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புப்பெற்றதாகவும் இலங்குகின்றது. இராவண வதத்திற்குப் பின்பாக, தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் விலகிட, ஸ்ரீ ராமர் அயோத்திக்குத் திரும்பும் வழியில் இராமேஸ்வரத்தில் சிவலிஙகம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட காரணத்தினால் இத்தலம் இராம - ஈஸ்வரம் என்ற பெயரினைப் பெற்றது. இந்தியாவின் வடக்கில் உள்ள காசியும், தெற்கில் உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணியத் தலங்களாகக் கருதப்படுகின்றது.
 
இராமேஸ்வரம் கடல் அக்னிதீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இராமநாதசுவாமி ஆலயத்தில் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. ஜகத் குரு ஸ்ரீ அதி சங்கரர் இவ்வாலயத்தில் ஸ்படிகலிங்கம் ஒன்றினைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இவ்வாலயத்தின் மூன்றாய் பிரகாரம் 1212 தூண்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இராமநாத சுவாமி சன்னதிக்கு வலது பக்கத்தில் ஸ்ரீ பர்வதசர்த்தினி அம்பாள் சன்னதி அமையப் பெற்றுள்ளது. இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி ஆலயம் சென்று தீர்த்தங்களில் நீராடி அம்மையப்பரை வழிபட்டு வந்தால் தோஷமும், பீடையும் நீங்கி வளமான வாழ்வு கிட்டிடும் என்பது திண்ணம்!
 
- அபிதா மணாளன்