உயிர் காக்கும் தெய்வப்பணி!
நல்ல செயல்கள் நல்ல பலனை விளைவிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அது மட்டுமின்றி நல்ல சிந்தனைகளே கூட நல்ல பலனை விளைவிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இந்த விவசாயியின் கதையைப் படிக்கும் போது, அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய பூசலார் நாயனாரின் நினைவு வருகிறது. அதோ நம் முன்னோர்கள் மானசபூஜையை நமக்கு வகுத்து அளித்திருப்பதற்கான காரணமும் புரிகிறது.
அது ஒரு சிற்றூர் அந்த ஊரிலே புகழ்பெற்ற ஒருஜோதிடர் இருந்தார். ஒரு நாள் மாலை நேரத்தில் அவரிடம் தம் ஜாதகத்தைப் பார்க்க ஓர் ஏழை விவசாயி வந்தார். அவர் தமது ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்தார்.
ஜாதகத்தைச் சோதித்துப் பார்த்ததும் ஜோதிடருக்குத் தயக்கம் ஏற்ப்பட்டது. காரணம், அந்த விவசாயிக்கு அன்றைய இரவே எட்டு மணிக்கு மரணம் நேரக்கூடிய ஒரு கண்டம் இருந்தது. ஜோதிடர் விவசாயியிடம் நேரிடையாக எதுவும் சொல்ல விரும்பாமல், “ஐயா, இன்றைய தினம் எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. ஏதோ வேலைகளுக்கு இடையில் அதை நான் மறந்தே போய் விட்டேன். தங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும் நாளைக் காலையில் தாங்கள் என்னை வந்து பாருங்கள்” என்று சொல்லி மழுப்பி விட்டார். ஜோதிடர் சொன்னதை உண்மை என்றே நம்பிய விவசாயி, மறுநாள் காலையில் வந்து பார்ப்பதாகச் சொல்லிச் சென்றார்.
விவசாயி சென்றதும் ஜோதிடர் தம் மனைவியை அழைத்து, “இப்போது என்னைப் பார்ப்பதற்கு ஒருவர் வந்தாரே, அவருடைய ஆயுள் இன்று இரவோடு முடியப் போகிறது. அதை அவரிடம் தெரிவிக்காமல், நாளைக்கு வந்து பாருங்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டேன். அவர் உயிருடன் இருந்தால்தானே நாளைக்கு என்னை வந்து பார்க்க முடியும்” என்று சொன்னார்.
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி. பக்கத்திலிருந்த நமது கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார். வழியிலேயே மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது. அது மழைக் காலமாக இருந்ததனால் மழைத் தூறல் வேறு போட ஆரம்பித்து விட்டது. விரைவில் இடியுடன் கூடிய பெருமழை கொட்ட ஆரம்பித்தது.
அப்போது விவசாயி ஒரு காட்டுவழியாகச் சென்று கொண்டிருந்தார். மழைக்கு ஒதுங்குவதற்குச் சுற்றும் முற்றும் பார்த்த அவர் கண்களுக்குச் சற்றுத் தொலைவில் பாழடைந்த சிவன் கோயில் ஒன்று தட்டுப்பட்டது. விவசாயி ஓடோடிச் சென்று சிவன் கோயிலின் முன்னால் இருந்த மண்டபத்தில் ஒதுங்கிக் கொண்டார். மண்டபத்தில் நின்று கொண்டிருந்த அவர் கோயிலின் பாழடைந்த நிலையைக் கண்டு பெரிதும் மனம் வருந்தினார். “ஹா! கோயிலின் கர்ப்பக்கிருகமும் மண்டபமும் இந்த அளவுக்குக் கேட்பாரற்றுப் பாழ்பட்டுப் போயிருக்கின்றனவோ ஆங்காங்கே ஆலமரமும் அரசமரமும் அல்லவா முளைக்க ஆரம்பித்திருக்கின்றன! என்னிடம் போதுமான பணம் இருந்தால் இந்தக் கோயிலைப் புதுப்பிக்கும் வேலையைத்தான் முதலில் செய்வேன்” என்று நினைத்துக் கொண்டார்.
அதோடு அவர் சிந்தனை மேலும் விரிந்தது. அந்தச் சிவன் கோயிலைப் புதுப்பிப்பதாக மானசிகமாக நினைத்துக் கொண்டார். கோபுரம், உட்பிரகாரங்கள், மண்டபங்கள் ஆகியவற்றை அமைத்தார். கும்பாபிஷேகத்துக்கு வேதியர் புடைசூழ கலசம் ஊர்வலமாகக் கொண்டு வரப்படுவதாகக் கற்பனை செய்தார். பாழடைந்த கோயிலில் நின்றபடியே மானசிகமாகக் கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்திக் கர்ப்பக்கிருகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வணங்கினார்.
இத்தகைய சிந்தனைகளில் தம்மை மறந்து ஈடுபட்டிருந்த விவசாயி, தாம் நின்று கொண்டிருந்த மண்டபத்தைத் தற்செயலாக ஏறிட்டு நோக்கினார். அங்கே சரியாக அவரது தலைக்கு மேலே பாழடைந்த மண்டபத்தின் ஒரு பகுதியிலிருந்து மழையின் குமுறலைக் கேட்டு வெளிவந்த ஒரு கருநாகம் படமெடுத்த நிலையில் அவரைக் கொத்த தயாராக இருந்தது! அதைக் கண்டாரோ இல்லையோ, “ஐயையோ? என்று விவசாயி அலறிப்புடைத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே ஓடி வந்து விட்டார். அதே சமயத்தில் மழையால் மிகவும் தளர்ந்திருந்த பாழடைந்த மண்டபம் திடுதிடுவென்று இடிந்து தரை மட்டமாயிற்று. அப்போது இரவு மணி எட்டு, மழையும் ஓய்ந்தது.
விவசாயி தம் வீடு திரும்பினார். மறுநாள் சென்று ஜோதிடரைச் சந்தித்தார். ஜோதிடர் திகைத்தார். அவர். “நாம்ஜோதிடக் கணக்கில் தவறி விட்டோமோ?” என்று கருதி ஜோதிட நூல்களை எடுத்துத் துல்லியமாக ஆராய்ந்தார். கணக்கு சரியாகவே இருந்தது. “இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால் அவனுக்கு ஒரு சிவன் கோவிலைக் கட்டி முடித்துக் கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் இருக்க வேண்டும்” என்று ஜோதிட நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது. “பாவம்! ஏழை விவசாயியால் கோயிலை கட்டிக் கும்பாபிஷேகமா நடத்த முடியும்?” என்று நினைத்தபடியே ஜோதிடம் அறிவித்த எல்லா விவரங்களையும் விவசாயியிடம் தெரிவித்தார். விவசாயி முதல் நாளிரவு நமக்கு நேர்ந்த அனுபவங்களை ஜோதிடரிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார். பிறகு ஜோதிடர் விவசாயிக்கு மேற்கொண்டு சொல்ல வேண்டிய ஜோதிடத்தைக் கூறி அனுப்பினார்.
தெய்வப்பணி பற்றிய கற்பனைகூட எவ்வாறு ஆயுளுக்கான இடையூறுகளை நீக்குகிறது என்பதை இந்த கதை அறிவிக்கிறது.