கல்வி ஞானம் அருளும் அகிலாண்டேஸ்வரி
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்ற தலம். யானை பூஜித்ததால் இது யானைக்காவல்; அம்பிகை ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் உபதேசத் தலம்; ஜம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் ஜம்புவனம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவீச்வரம் என்றெல்லாமும் இத்தலம் அழைக்கப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம். 51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது. காஞ்சிப் பெரியவர் அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கர பகவத்பாதாள் உருவாக்கி பிரதிஷ்டை செய்த சிவ சக்ரம், ஸ்ரீசக்ரம் போன்ற இரண்டு தாடங்கங்களையும் புதுப்பித்து அம்பிகைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
வெள்ளை நாவல் பழம் பழுக்கும் வெண் நாவல் மரமே இத்தல விருட்சம். இச் சந்நதியை தினம் 12 முறை 48 நாட்கள் வலம் வந்தால் இல்லத்தில் செல்வம் செழிக்கும். அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமியாக, உச்சிக் காலத்தில் பார்வதியாக, மாலையில் சரஸ்வதியாகத் திகழ்வதால், அம்பிகைக்கு மூன்று வண்ண உடை அலங்காரங்கள் மூன்று வேளைகளிலும் செய்யப்படுகிறது. சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். சிவன் குருவாக இருந்து பார்வதிக்கு உபதேசித்த தலம் என்பதால் இங்கு திருக்கல்யாணம் நடப்பதில்லை. திருமணமும் நடைபெறுவதில்லை.