நாமாக்களில் ராஜா “கோவிந்த நாமமே”!

நாமாக்களில் ராஜா “கோவிந்த நாமமே”!

திருப்பாவையின் இருபத்தெட்டாவது பாசுரத்தில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - “குறைவொன்றுமில்லாத கோவிந்தா” என்று பாடிய போது கோவிந்த ராஜ பட்டாபிஷேகத்தில் எம்பெருமான் மனதில் இருந்த நெடுநாளைய குறை ஒன்று தீர்ந்து, அவன் குறைவொன்றுமில்லாதவனாக மாறினான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறாள் என்று தோன்றுகிறது.
 

என்ன குறை தெரியுமா?
 
ராமாவதாரத்தில் பட்டாபிஷேகம் நடந்தபோது “அஷ்ட வஸுக்கள் தேவேந்த்ரனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணின மாதிரி இருந்தது” என்று வால்மீகி வர்ணிக்கிறார்.
 
தன்னால் பாப விமோசனம் பெற்ற அஹல்யையிடம் தப்பாக நடந்து கொண்ட மஹாபாபியான இந்த்ரனது பட்டாபிஷேகத்தை தனது பட்டாபிஷேகத்தோடு ஒப்பிட்டு இந்த்ரனைத் தனக்கு உவமையாகச் சொன்னதில் மனக்குறை ஏற்பட்டதாம்.
 
இந்த இந்தரனையே ஜயித்து இந்தரஜித் என்று பேர் பெற்றிருந்த மேகநாதனை லக்ஷ்மணன் கொல்ல, அவனுடைய தந்தை ராவணனை வென்ற தம்மை தமது எதிரியிடம் தோற்றுப்போன இந்த்ரனோடு ஒப்பிட்டது பெருங்குறையாக நெஞ்சில் நின்றுவிட்டதாம்.
 
இந்த குறை க்ருஷ்ணாவதாரத்தில் ஸாக்ஷாத் அந்த இந்திரனே, “தோற்றேன்” என்று இவர் காலில் வந்து விழுந்து இவருக்கு கோவிந்த பட்டம் தந்து அபிஷேகம் பண்ணின போதுதான் தீர்ந்தது.
 
ராமபட்டாபிஷேகத்தில் உண்டான குறை கோவிந்த பட்டாபிஷேகத்தினால்தான் தீர்ந்தது. இதைத்தான் ஆண்டாள் “குறைவொன்றுமில்லாத கோவிந்தா” என்று சொன்னாளோ என்னைவோ!
 
பூர்ணாவதாரம் என்று வர்ணிக்கப்படும் க்ருஷ்ணாவதாரத்தில் குறையொன்றும் இருக்க நியாயம் இல்லை. அதனால்கூடச் சொல்லியிருக்கலாம்.
 
மஹாவிஷ்ணுவுக்குப் ப்ரீதியான நாமாக்கள் பன்னிரண்டில் “கோவிந்த” என்பது ஒன்று.
 
அதிலும் மூன்றுமுறை ஆசமனம் செய்கிறபோது நாம் சொல்லும்.
 
அச்யுத - அனந்த - கோவிந்த என்ற மூன்று நாமாக்களில் கோவிந்த நாமா ஒன்று.
 
இதையெல்லாம் விட ஜகத்குருவான ஆதிசங்கரர் மனிதனுக்குத் தத்துவ உபதேசங்கள், விவேக வைராக்யங்களைக் கூற வந்தபோது அவர் பாடிய “மோஹமுத்கரம்” என்று நூலில் ஒவ்வொரு ச்லோகத்தின் இறுதியிலும் நாம் திரும்பத் திரும்பப் பாடும் “பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்” என்று அதனை மூன்று முறை ஆசார்யார் சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டிருக்கிறார்.
 
பின்னாளில் ஆண்டாளும் தனது திருப்பாவைப் பாசுரத்தில் மூன்று முறை கோவிந்த நாமாவைச் சொல்லியிருக்கிறாள்.
 
“கூடாரைவெல்லி” என்று சிறப்பாக வைணவர்களால் கொண்டாடப்படும் மார்கழி 27ஆம் நாளில் பாடப்படும் 27வது பாசுரத்தில் “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்கிறாள்.
 
அதற்கு அடுத்த பாசுரத்தில் “குறைவொன்றுமில்லாத கோவிந்தா” என்கிறாள்.
 
இருபத்தொன்பதாவது பாசுரத்தில்
 
“இற்றைப் பறைகொள்வான் அன்று காண்கோவிந்தா” என்கிறாள்.
 
இந்த இரு அருளாளர்கள் வாயினின்றும் மும்முறை வெளிவந்த இந்த நாமம் - ஹிந்து மரபில் மூன்று முறைத் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது - அதன் முக்யத்துவத்தை வலியுறுத்தவே - என்பதற்கிணங்க - சத்யச் சொல்லாக - அறுதியிட்டு உறுதியாகக் கூறப்பட்டுள்ளதால் நாமாக்களின் ராஜா - “கோவிந்த நாமமே”
 
- ஆர்.பி.வி.எஸ்.மணியன்