கர்ம தோஷ நிவர்த்தியளிக்கும் ஸ்வேதாரண்யேஸ்வரர்!
அறிவு, திறமை, முயற்சி இருந்து முன்னேற்றமடைய வழி இல்லாத நிலை. தொழில் நல்ல நிலையில் இருந்தும், பெயர் புகழ் என்ற நன்மதிப்புடன் இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் திடீரென சரிவினைச் சந்தித்து மீள முடியாத நிலை, இதற்கெல்லாம் காரணம் பூர்வ ஜென்ம கர்ம தோஷம். முன்னோர்கள் சாபம், சர்ப்ப சாபம், கோ சாபம் போன்ற சாபங்களாலும் பூர்வ ஜென்ம தோஷம் ஏற்படுகிறது. ஜோதிடப்படி 5-ம் இடம் பூர்வ ஜென்மத்தைக் குறிப்பதாகும் இந்த 5-ம் இடம். 5-ம் இடத்து அதிபதி நிலையைக் கொண்டு இதை அறியலாம். இந்த அமைப்பு 5-ம் இடத்தில் சனி, இராகு, கேது சேர்க்கை. 5-ம் இட அதிபதி மறைவு, நீசம் போன்றவற்றால் அறியலாம். ஜாதகங்கள் நல்ல நிலையில் அமைந்தாலும் யோகாதிபதிகள் யோகத்தை செய்ய வேண்டிய நிலையில் இருந்தாலும், வாழ்வில் சரிவுகளைத் திடீரென சந்திக்கும் நிலை. அனைத்து வழிகளிலும் பிரச்சனைகள் உண்டாகும். புத்திர பாக்ய தாமதம், பூர்வீக சொத்தில் பிரச்சனை, தொழிலில் நஷ்டம், மனநிலைப் பாதிப்பு, திருமணத் தடை, அவமானம் போன்றவை ஏற்படும்.
இந்த தோஷத்திலிருந்து விடுபட, நாடி ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள புதன் ஸ்தலமான திரு வெண்காடு சென்று, பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இத்தலம் செல்பவர்களின் சகல பாவங்களும் தோஷங்களும் நிவர்த்தியாகின்றன என்பது ஐதீகம். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் கொண்ட இத்தல இறைவன் ஸ்ரீ ஸ்வேதாரண் யேஸ்வரர். அம்மன் ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை நவகிரகங்களில் புதனுக்கு தனிச் சன்னதி உள்ளது. புதன் சன்னதி பிரம்ம விதயாம்பிகை அம்மன் இடப்பாகத்திலும், புதனின் தந்தை சந்திரனின் கோயிலும் சந்திர தீர்த்தமும் புதன் சன்னதிக்கு எதிரிலும் அமைந்துள்ளது.
இங்கு சூரியன், சந்திரன், அக்னி தீர்த்தங்கள் உள்ளன. ஆலமரம், கொன்றை, வில்வம் என 3 ஸ்தல விருட்சங்கள் உள்ளன. இங்குள்ள ஆல மரத்தடியில் ருத்ர பாதம் உள்ளது. இங்கு பிதுர் கடன் செய்யலாம். இங்குள்ள மூன்று தீர்த்தங்களில் நீராடி, முறையான பூர்வ ஜென்ம கர்ம தோஷ சாந்தி, பித்ரு தோஷ சாந்திக்கு பித்ரு தர்ப்பணம் போன்ற வற்றை அங்குள்ள சந்திர தீர்த்தக் கரையில் ஆலமரத்தடியில் உள்ள ருத்ர பாதத்தில் செய்து கொள்ள, பூர்வ ஜென்ம கர்ம தோஷம் நீங்கும். இது 21 தலைமுறைகளுக்குக் கட்டுப்படும்.