வேதங்கள் அனைத்தும் காயத்ரி மந்திரமே!

வேதங்கள் அனைத்தும் காயத்ரி மந்திரமே!

“வேதங்கள் அனைத்தும் காயத்ரி மந்திரத்தில் ஒன்றி விடுகின்றன. காயத்ரி, பிரணவத்தில் (ஓம்) கலந்து விடுகிறது. “ஓம்” சமாதியில் சேர்ந்து விடுகிறது” என்று ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியுள்ளார்.

வேதங்களின் சாரமாக “ஓம்” என்பது விளங்குகிறது. இந்தப் பிரபஞ்சமானது விரிவடைவதாகவும், பின்னர் ஒடுங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த விரிவு நிலையும், ஒடுக்க நிலையும் அலையின் இயக்கம் போன்று தொடக்கமோ அல்லது முடிவோ இன்றி மாறி மாறிச் செயல்பட்டு வருவதாக அன்றைய ஞானிகளும், இன்றைய விஞ்ஞானிகளும் சொல்லியுள்ளனர். “ஓம்” என்ற இந்த ஒலியைப் பிரித்தால் “அ-உ-ம்” என்று ஆகின்றது.

 “அ” என்று உச்சரிக்கும் போது செங்குத்து அசைவையும், “உ” என்பது வட்ட அசைவையும், “ம்” என்பது படுகை அசைவையும் உண்டு பண்ணுகிறது.

மேலும், “ஓம்” என்பதிலுள்ள “அ-உ-ம்” என்னும் தொனிகள் முறையே விழிப்பு நிலையையும், கனவு நிலையையும், உறக்க நிலையையும் உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.

காயத்ரி மந்திரத்திலுள்ள “ஓம் பூர் புவஸ் ஸுவ” என்பது இந்த மூன்று நிலைகளையும் குறிப்பதாகும். மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்ட நிலையாக “ஓம்” என்பது சிறப்பிக்கப் படுகிறது.

காயத்ரிதேவி சக்தியைத் தரும் உமாதேவியாகவும், செல்வத்தைத் தரும் லட்சுமிதேவியாகவும், அறிவைத் தரும் சரஸ்வதி தேவியாகவும் போற்றப்படுகிறாள்.

காலை வேளையில் நீராடிய பின்னர் சூரியனை நோக்கி நின்ற வண்ணம் மனத்தை ஒருமுகப்படுத்தி காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் அறிவு பெருகும். நினைவாற்றல் வளரும். பெரும் சக்தி கிடைக்கும். நினைத்தவை அனைத்தும் நிறைவேறும். எனவேதான், காயத்ரி மந்திரத்தை “வேதங்களின் தாய் போன்றது” என்று போற்றுகிறார்கள்.

“ஓம்” என்பது பிரணவ மந்திரம். இதுதான் “கடவுளின் ஒளி” என்று போற்றப்படுகிறது. இந்த “ஓம்” என்பதன் விரிவு தான் காயத்ரி. காயத்ரியின் விரிவுதான் வேதம். வேதத்தின் விளக்கம்தான் இந்தப் பிரபஞ்சம் என்று கொள்ள வேண்டும் என்பது பெரியோர்களின் ஒருமித்த கருத்தாகும்.

- ஆபஸ்தம்பன்