வெற்றிக்கு வித்திடும் விஜயதசமி!

வெற்றிக்கு வித்திடும் விஜயதசமி!

புராண காலத்தில் வாழ்ந்திருந்த அசுரர்கள் யாவரும் தாம் மேற்கொண்ட சிறப்பான தவத்தால் கடவுளர்களை நேரில் தரிசனம் செய்து கிடைத்தற்கரிய பல வரங்களைப் பெற்று வாழ்க்கை வளமும் பலமும் பெற்றார்கள். இருந்த போதிலும் கடவுளால் அளிக்கப்பட்ட விசேஷமான வரங்களைக் கொண்டு அவர்கள் மற்றவர்களின் நலனுக்காக ஒரு போதும் முயற்சிகள் எடுத்ததில்லை.
 
தாமே அதிகாரத்திலும், வீரபராக்கிரமத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் மனிதர்களை தேவர்கள் எப்பொழுதும் இம்சித்தே இருந்து வந்தார்கள். இவர்களின் விதிவிலக்காக வாழ்ந்த ஒரே ஒருவரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மகாபலி சக்கரவர்த்தியின் அரசவை ஆலோசகராக விளங்கி அவ்வப்போது நல்ல அறிவுரைகளை வழங்கி வந்த சுக்கிராச்சாரியாரை சொல்லலாம். 
 
சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தையும் நன்கு கற்றுணர்ந்த சுக்கிராச்சாரியார் பிறருக்கு எப்போதும் உதவ வேண்டும் என்றே நினைத்திருந்தார். அத்தோடு, விபத்துக்கள் மற்றும் நோய்களால் அகால மரணமடைந்த மனிதர்களை மீண்டும் உயிர்ப்பித்துக் கொடுக்கும் மிருத்தியுஞ்ச மகா மந்திரத்தையும் கற்றவராக இருந்தார். அசுரர் குலத்தில் அவதரித்த சுக்கிராச்சாரியார், ஆச்சாரியார் என்னும் குல தர்மத்திற்கு கட்டுப்பட்டு எப்போதும் மற்றவர்க்கு நல்லதையே செய்து வந்தார். ஆனால் இவரைத் தவிர அசுரர்கள் யாவரும் தாம் பெற்ற இறைப்பலத்தால் யாருக்குமே எந்த நலம் தரும் செயலையையும் செய்தார் இல்லை. அதற்கு மாறாக எந்த நேரத்திலும் அவர்களின் பராக்கிரமப் பலத்தால் பிறரைச் சீண்டியும் துன்பப்படுத்தியும் அதனால் மகிழ்ச்சியும் அடைந்து வந்தார்கள். சில நேரங்களில் அசுரர்களின் அவதாரத்தால் மனித குலம் அடைந்த அளப்பரிய துயரத்தை போக்கும் பொருட்டு, தெய்வங்களே சங்கல்பம் செய்து கொண்டு அவர்களுடன் போர் புரிந்து அவர்களின் வாழ்வை முடிப்பது வழக்கமாக இருந்து வந்தது.  
 
இங்ஙனமாக தீய சக்திகளை பயன்படுத்தி மனித குலத்தை துயர்படுத்தி வந்த அசுரர்களை வதம் செய்த வெவ்வேறு தினங்கள் புராண வரலாற்றில் முக்கியமான தினங்களாகவும் தொடர்புடைய தெய்வங்களை நினைந்து வணங்கும் தினங்களாகவும் போற்றப்படுகின்றன. இந்த வரிசையில் மகிஷன் என்னும் அசுரன், பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். அவனின் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினான் பிரம்மதேவன். அவரிடம், யாராலும் தன்னை அழிக்க முடியாத வரத்தினை கேட்டான் மகிஷன். அதற்கு பிரம்மதேவர் இந்தப் பூவுலகில் பிறந்த மனிதர்களும் அசுரர்களும் என்றாவது ஒரு நாள் இறப்பைச் சந்தித்தேயாக வேண்டும், அதுவே நியதி என்றும் தெரிவித்து வரம் தர மறுத்து விட்டார். இதன் பின்பு மகிஷன் தனக்கு பெண்ணால் மட்டுமே அழிவு நேர வேண்டும் எனக் கேட்டு வரத்தையும் பெற்று விட்டான். அவனுடைய எண்ணம் என்னவென்றால் மென்மையே உருவான பெண்களால் தமக்கு அழிவு நேராது என்பது தான். 
 
மகிஷன் பிரம்மனிடமிருந்து தான் பெற்ற வரத்தின் பலனாக தேவர்களையும் முனிவர்களையும் பலவாறாகக் கொடுமைப்படுத்த தொடங்கினான். அவர்கள் அனைவரும் விஷ்ணுவிடம் சென்று மகிஷனின் கொடுமையை எடுத்துரைத்து அதற்கான தீர்வினை வேண்டி நின்றார்கள். பின்பு விஷ்ணு, “மகிஷனுக்கு பெண்ணால் தான் அழிவு காத்திருக்கின்றது. எனவே நீங்கள் அனைவரும் பராசக்தியிடம் சென்று முறையிடுங்கள்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார். இதனையடுத்து தேவர்களும் முனிவர்களும் அன்னை பராசக்தியை நினைந்து கடுந்தவம் புரியலானார்கள். அவர்களின் தவத்தை மெச்சிய அன்னை பராசக்தி அவர்களுக்கு காட்சி கொடுத்தாள். அவர்களிடம் தங்களுக்கு அசுரன் மகிஷனால் ஏற்பட்ட துன்பத்தை எடுத்துக் கூறியதுடன் அவர்களுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டார்கள். இதை கேட்டவுடன் அன்னை பராசக்தி அசுரனுடன் போர் செய்வதற்கு தயாரானாள். 
 
போருக்கு கிளம்பிய உமையவளுக்கு, சிவபெருமான் சூலத்தையும், விஷ்ணு பகவான் சக்கரத்தையும், அக்னி பகவான் தனது சக்தியையும், வாயு பகவான் தனது வில்லாயுதத்தையும் வழங்கினார்கள். அவற்றை பெற்றுக் கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள். போர் களத்தில் தன் முன் நின்ற மகிஷனைப் பார்த்து இரக்கம் கொண்டாள் அன்னை. அவனை கொல்வதைக் காட்டிலும் பாசத்தை வீசி நல்வழிப்படுத்த நினைத்தாள். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஏனென்றால் தீயவை எப்போது நல்லவற்றை விரும்புவதில்லை. எந்த உபாயத்தை மேற்கொண்டாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். மேலும் அதற்கான முடிவு அழிவு மட்டுமே என்பதையும்  அன்னை உணர்ந்து கொண்டாள். இதைத் தொடர்ந்து அன்னை பராச்கதி ஒன்பது நாட்கள் தொடர்ந்து போரிட்டு பத்தாவது நாளில் மகிஷாசுரனை அழித்தாள். அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்விலிருந்து தான் நவராத்திரி தினங்களில் கொலு வைக்கும் பழக்கம் ஏற்பட்டது எனச் சொல்லப்படுகின்றது. 
 
எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அந்த வெற்றியை தந்தருளும் நாளாக விஜயதசமி தினம் விளங்குகின்றது. கல்வி. கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்த நாளில் தொடங்குவது வழக்கமாகும். இந்த நாளில் குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார் என்பது எல்லோருடைய நம்பிக்கையாகும். கல்வி மட்டுமல்லாமல் இதர சுப விஷயங்களையும் விஜயதசமி தினத்தில் தொடங்கினால் எளிதில் வெற்றி பெறலாம்.
 
- ஜெயா நாகேந்திரன்