மே மாத ராசி பலன்கள் 2026 - மேஷம்

மே மாத ராசி பலன்கள் 2026 - மேஷம்

விவேகத்துடன் விரைவாக காரியம் செய்து முடிக்கும் மேஷ ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் விரைய ஸ்தானத்திலும் குரு மூன்றாமிடத்திலும் மறைவு பெறுவதும் ராசியில் சூரியன் உச்சம் பெற்று அமைவதும் உங்களின் செயல்பாடுகளில் கவனமுடன் செயல்பட வேண்டி வரும். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் நிதானமாக செயல்படுவது நல்லது.
 
உங்களின் ராசிநாதன் விரையத்தில் சனியுடன் சம்மந்தம் பெற்று அமைவது உங்களின் செயல்களில் பலரின் தொல்லைகளை தாங்கி கொள்ள வேண்டி வரும். சரியான நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு சில நேரம் சவால் நிறைந்ததாக இருந்தாலும் எந்த வித பாதிப்பையும் தராது. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற சில நேரம் கவனமுடன் செயல்படுவது அவசியமாகும். உங்களின் தனாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று இருப்பது பணவரவுகள் தடையின்றி வரும். எட்டாமிடத்தை சுக்கிரன் பார்வை இடுவது நல்ல சூழ்நிலையை பெற்று தரும்.
 
குரு மூன்றில் மறைவு பெறுவதும் பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும். குறைவின்றி காரியம் நடந்து வந்தாலும் எல்லாவற்றையும் கண்காணிப்பது அவசியமாகும். கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும். நண்பர்களின் உதவி உறுதுணையாக அமையும். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யும் போது எதிர்பாராத நஷ்டம் ஏற்படலாம் என்பதால் சற்று முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.
 
கலைத்துறையினருக்கு ஏற்றமான காலமாக அமையும். பலவித நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டி இருக்கும். முதலீடு இல்லாத தொழிலில் திடீர் ஆதாயம் கிடைக்கும். கல்வி கற்கும் மாணவர்கள் நல்ல பெறுபேறு பெறுவீர்கள். அடுத்து உயர் கல்வி செல்பவருக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்க பெறுவீர்கள். பொது வாழ்வில் சிலருக்கு சச்சரவு உண்டாகும். எத்தனை சோதனை வந்தாலும் எல்லாவற்றையும் சரி செய்து விடுவீர்கள். விவசாயம் சிலருக்கு பெரிய பலனை தராது. இருப்பினும் செலவு செய்யுமளவுக்கு பலன் கிடைக்க பெறுவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது அமர்வது நல்லதல்ல என்றாலும்.. சூரியனின் பலம் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்று தரும். இறை வழிபாடும் நல்ல நண்பரின் ஆலோசனையும் உங்களுக்கு சிறப்பான பலனை பெற்று தரும். உங்களின் சுயமரியாதை எப்பொழுதும் போல சிறப்பாக அமையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
சிவப்பு, பச்சை, வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
ஞாயிறு, புதன், வெள்ளி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
02-05-2026 சனி இரவு 12.23 முதல் 05-05-2026 செவ்வாய் பகல் 12.03 மணி வரை.
30-05-2026 சனி காலை 07.42 முதல் 01-06-2026 திங்கள் இரவு 07.19 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை ராகு காலம் 04.30 - 06.00 மணிக்கு வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும், தயிர் அன்னம் நைவேத்தியம் வைத்து வேண்டுதலை சொல்லிவிட்டு அன்னத்தை தானம் செய்து விட்டு வர சகல காரியமும் அனுகூலமாக அமையும்.