ஜப வேள்வியும் நானே!

ஜப வேள்வியும் நானே!

பகவான் கீதையில் அர்ஜுனனிடத்தில் உலகில் உ்ள உயர்ந்த விஷயங்கள் எல்லாமே இறைவனின் விபூதியெ என்பதை எடுத்துச் சொல்கையில் - வேள்விகளில் தான் ஜபவேள்வியாக இருப்பதாகச் சொல்கிறான்.

 
“யக்ஞானாம் ஜப யக்ஞோஸ்மி” என்பது பகவானின் திருவாக்கு.
 
வெளியிலே அலைந்து திரிந்த மனிதன் தன் களைப்பைப் போக்கிக் கொள்ள வீட்டிற்கு வந்து. தன்னை எப்படி ஆசுவாசப்படுத்திக் கொள்கிறானோ அது போல நம் ஆணைக்குக் கட்டுப்படாமல் மேய்ந்து கொண்டிருக்கும் இந்திரியங்களை ஒருமுகப்படுத்தி ஆசுவாசப்படுத்துவதற்கு சிறந்த சாதனம் ஜபமேயாகும்.
 
மந்திரங்கள் சப்தரூபமாக உள்ளவை. இவை தேவதைகளின் சூக்ஷ்ம சரீரம். இவைகளில் இவ்வளவு என்று குறிப்பிட முடியாத சக்தி உண்டு.
 
பகவானுடைய நாமாவை மந்த்ரமாக ஜபிக்கிறபோது “ஓம் நமோ” என்ற இரு வார்த்தைகளைச் சேர்த்துக் கொள்கிறோம்.
 
“ஓம் நமோ நாராயணாய”
“ஓம் நமசிவாய”
“ஓம் நமோ வாஸுதேவாய”
 
என்றெல்லாம் சொல்வதன் தாத்பர்யம் - அவனுடைய சரணாரவிந்தங்களில் சரண் அடைவதான பாவனை முழுமையாக ஏற்படவே.
 
நமஸ்கரிப்பவன் தன்னிலும் உயர்வான ஒன்றின் முன்னால்தான் வணங்குவான். பகவானை நமஸ்கரிக்கும் போது - தன் திறமை, தன் சக்தி, தன்புத்தி எல்லாமே அவன் தந்தது - அதனை அவனிடத்தில் முற்றிலும் இழந்து நிற்கிறான்.
 
நமஸ்கரிப்பதனை வார்த்தைகளால் கூறுவதே “நமோ” என்ற இரண்டு எழுத்துகளின் தாத்பர்யம் “ந மம” என்பதும் இதில் அடங்கும். என்னுடையது என்பதாக எதுவும் இல்லை. எல்லாம் உன்னுடையது - என்பது இதன் பொருள்.
 
நமோ என்று சொல்லும் போது மானசீகமாகவே ஜபம் செய்பவன் இப்படிப்பட்ட சரணாகதி நிலையை எட்டி விடுகிறான். அவனுடைய போலித்தனமான தற்பெருமை, அகங்காரம், ஆணவம் எல்லாம் அவனை விட்டு விலகி விடுகின்றன. அந்த நிலையில் அவன் தனக்குள் இருக்கும் பரம்பொருளைப் புரிந்து கொள்வதும் எளிதாகிவிடுகிறது.
 
ஓம் என்பது அந்தப் பரம்பொருளின் குறியிட்டு ஒலி குறியீட்ட வடிவம்.
 
“ஓம் நமோ நாராயணாய” என்று சொல்லும் போது இந்த மூன்றையுமே ஜபம் செய்பவன் கண்டுகொண்டு நாராயணன் என்ற பரம்பொருளின் முன்னிலையில் தன்னை இழந்து, பரம்பொருளை உணர்ந்து சரணாகதி நிலையை அடைந்துவிடுகிறான். இதை நாம் சாதாரணமாக எண்ண்ஙகளின் மூலம் அடைய முடியாது. அதை அடைய உதவும் சூத்திரமே ஜபம் செய்யும் போது உபயோகிக்கப்படும் மந்தரம் ஆகும்.
 
பலசூக்ஷமமான சொற்கள் ஜபத்தில் பயன்படுத்தப் படுகின்றன. அவை “மந்த்ரங்கள்” என்று ஸம்ஸ்க்ருத மொழியில் அழைக்கப் பெறுகின்றன.
 
மந்த்ரம் என்பதற்கு “ஜபிப்பவனைக் காப்பாற்றி மோக்ஷம் அளிப்பதே மந்த்ரம்” -
 
“மன்னாத் த்ராயதே இதி மந்த்ர” என்று ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு விளக்கம் தரப்பட்டிருக்கிறது.
 
மந்த்ரம் என்பது இறை சக்திக்கு - கடவுளுக்கு நிகரான ஒலி. அதனால் ஏற்படும் ஒலி அலைகள் நம்முள் தெய்வசக்தியைத் தோற்றுவிக்கின்றன.
 
தெய்வம் - அதன் உருவம், அதன் நாமம், அதன் மந்த்ரம் ஆகி்ய அனைத்தும் ஒன்றே ஆகும்.
 
எல்லாச் சொற்களும் மந்த்ரங்களாக ஆக முடியாது. மந்த்ரங்களும் வெறும் சொற்களலல. அவை தெய்வ சக்தி வாய்ந்த அதி சூக்ஷுமமான சொற்கள்.
 
ஞானிகளும், ரிஷிகளும் ஆத்மஞானம் பெற்ற சமயத்தில் அந்த மந்த்ரங்களை திசித்தார்கள் அவற்றை அவர்கள் ஒளி வடிவமாகவோ அல்லது ஒலி மூலமாகவோ கண்டார்கள்.
 
ஒரு சாதாரண மனிதனுக்கோ மந்த்ரம் என்பது வெறும் சப்தமாகவே தோன்றும். ஆனால் அதுவே ஒரு ஆத்ம சாதகனுக்கோ ஆத்ம ஞானத்தையே அளிக்கக்கூடிய வல்லமை பெற்ற ஒரு சொல்.
 
எப்படி ஒரு சிறிய ஆல விதையில் பிரம்மாண்டமான ஒரு பெரிய ஆலமரமே அடங்கியிருக்கிறதோ அது போலவே ஆத்ம ஞானமென்பது ஒரு மந்த்ரத்தில் சூக்ஷுமமாகப் படிந்திருக்கிறது.
 
- ஆர்.பி.வி.எஸ்.மணியன்