தனிமனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் கீதை!

தனிமனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் கீதை!

நல்ல உணவை உட்கொண்டால் நமது உடல் நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்கிறது. பொருந்தாத உணவை உட்கொண்டால் உடல் நலம் கெடுகிறது.

 
அதுபோல் வியாபார ரீதியில் எழுதப்படும் மனிதனின் மிருக இயல்பைத் தூண்டும் தீய நூல்கள் தீய பத்திரிகைகள், பொருந்தாத உணவு போன்றவை. அவற்றைப் படிப்பதால் மனிதனின் மனநிலை பாதிக்கப் படும். அறியாமை என்ற இருள் மேலும் மேலும் சூழ்ந்து கொள்ளும். மனதின் ஆற்றல்கள் சிதைந்து போகும். உயர்ந்த சிந்தனைகளைச் சிந்திக்க இயலாத நிலை ஏற்படும். உயர்ந்த இலட்சியத்திலிருந்து நழுவும் நிலை ஏற்படும். உடல்நலம் பாதிக்கப்படும்.
 
இதற்கு மாறாக, நல்ல உணவ மனிதனின் உடல் நலத்தை உறுதிப்படுத்துவது போல், மனிதன் தன்னிடமுள்ள தெய்வீக இயல்புகளை வெளிப்படுத்த உதவும் பெருநூல் கீதை.
 
கீதையைக் கற்பது நமது மனதை வளப்படுத்தும். முடிவில் ஆத்மஞானத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்.
 
“எவனால் பகவத்கீதை சிறிதேனும் படிக்கப் பட்டதோ, கங்கா தீர்த்தம் துளியேனும் பருகப்பட்டதோ விஷ்ணுவின் அர்ச்சனை ஒரு தடவையேனும் செய்யப்பட்டதோ அவனுக்கு யமனிடம் பயப்பட வேண்டிய நிலை ஏற்படாது என்று, பஜகோவிந்தம் கீதையின் முக்கியத்துவத்தை இரத்தினச் சுருக்கமாகக் கூறுகிறது.
 
கீதை கங்கை போன்றது. கங்கையின் ஒவ்வொரு துளி நீரும் புனிதம் வாய்ந்தது. அதுபோல் கீதையின் ஒவ்வொரு சுலோகமும், தெய்வீகமும் முக்கியத்துவமும் உடையது.
 
கீதையிலிருந்து தினமும் ஓர் அத்தியாயத்தைப் பாராயணம் செய்வது தினமும் ஒரு சுலோகத்தை மனப்பாடம் செய்து, அதன் பொருளை ஆழ்ந்து சிந்திப்பது ஆகியவை ஆரோக்கியம் வாய்ந்த மிகவும் நல்ல பழக்கங்களாகும். இதை ஆத்மசாதகர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே கடைப்பிடிக்க வேண்டும்.
 
இவ்விதம் செய்வது நமது தனிமனித வாழ்க்கைக்கு ஆன்மிக வளம் சேர்ப்பதோடு சமுதாயநலனையும் மேன்மை பெறச் செய்யும்.