பெரம்பூர் கந்தன்

பெரம்பூர் கந்தன்

நாகப்பட்டனம் மாவட்டம் பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பழமையான முருகத்தலமாகும். பங்குனி உத்திர நாளில் இத்தலத்தை தரிசிக்கலாம். தலவரலாறு: தட்சனின் மகளாக தாட்சாயணி என்னும் பெயரில் பார்வதிதேவி பிறந்து சிவனை மணந்தாள். ஒரு சமயம் தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். இதில் பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் கலந்து கொண்டார். இதனால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. பிரம்மா சிவனிடம் சாப விமோசனம் வேண்டினார். மன மிரங்கிய சிவன் பூலோகத்தில் தீர்த்தம் உண்டாக்கி என்னை வழிபட்டால் சாபம் நீங்கும் என்றார். அதன்படி வழுவூர் என்னுமிடத்தில் வீரட்டேஸ்வரர் என்னும பெயரில் சிவலிங்கம் எழுப்பி வழிபட்டு பிரம்மா சாபம் நீங்கப்பெற்றார். அத்துடன் இத்தலத்தின் அருகில் உள்ள பிரம்ம மங்களபுரத்தில் (பெரம்பூர்) தந்தைக்கு உபதேசம் செய்த சுப்பிரமணியரை வணங்கி ஞான உபதேசமும் பெற்றார். தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்திய சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். அவனது உடலின் ஒரு பகுதி மயிலாக மாற்றப்பட்டது. அது இத்தலத்திற்கு வந்து ஞான உபதேசம் பெற்றது. ஞானகுரு:பிரம்மனுக்கும், மயிலுக்கும் முருகன் ஞான உபதேசம் செய்ததால், இத்தல முருகன் ஞான குருவாக விளங்குகிறார்.பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்கு முருகனின் இடது பக்கம் திரும்பியிருப்பது சிறப்பம்சமாகும்.ஆறுமுகன்: முருகப்பெருமான் ஆறுமுகம், 12 திருக்கரங்களுடன், மயில் மீது அமர்ந்து வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் குக தட்சிணாமூர்த்தி, குக சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர். இது தேவாரவைப்புத்தலமாக போற்றப்படுகிறது. தை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள துர்க்கைக்கு விளக்கு பூஜை செய்யப்படுகிறது. பிரார்த்தனை: திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், முருகனுக்கு காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், சந்தனத்தால் அலங்காரம் செய்தும் வழிபாடு செய்கிறார்கள். இத்தல முருகனுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறப்பற்ற நிலை உண்டாகும் என்பது ஐதீகம். தந்தை ஸ்தானத்தில் மகன்: பொதுவாக சிவன் கோயில்களில் சிவன் தனி மூலஸ்தானத்தில் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருள் பாலிப்பார்கள். சிவன் சன்னதிக்கு பின் புறம் வட மேற்கு திசையில் முருகனுக்கு சன்னதி இருக்கும். ஆனால் இங்கு முருகன் குருவாக விளங்குவதால், அவரே மூலவராக கிழக்கு நோக்கியும், தெய்வானை தனி சன்னதியில் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். முருகன் சன்னதியின் பின்புறம், குபேரலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கியும், ஆனந்தவல்லி அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். இதனால் இத்தலத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளுவதாக கூறப்படுகிறது. இது போன்ற அமைப்புள்ள கோயில்களை காண்பது மிகவும் அரிது. கோயில் அமைப்பு: பிரகாரத்தில் ஆதி விநாயகர், மகாவிஷ்ணு, ஐயப்பன், துர்க்கை, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, பிரம்மா, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கிழக்கு நோக்கிய நிலையில் ஐந்து நிலை, 7 கலசத்துடன் கூடிய பிரமாண்ட கோபுரம், இரண்டு பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என கோயில் பெரியதாக அமைந்துள்ளது. கோயில் வாசலில் இடும்பன் சன்னதி உள்ளது. தல விருட்சமாக பிரம்பு மரமும், தீர்த்தமாக ஸ்ரீபுஷ்கரிணியும் அமைந்துள்ளது. மிளகு செட்டியார் என்பவர் இத்தலத்தில் தங்கி திருப்பணி செய்துள்ளார். எனவே அவரது சிலை மயில் வாகனம் அருகில் வைக்கப்பட்டு, திருவாதிரை நட்சத்திர நாளில் அபிஷேகம் செய்யப்படுகிறது.திருவிழா : பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சித்ரா பவுர்ணமி, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல்.இருப்பிடம் : மயிலாடுதுறையிலிருந்து சங்கரன் பந்தல் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பஸ்களில் 15 கி.மீ., சென்றால் பெரம்பூரை அடையலாம். திறக்கும் நேரம் : காலை 6 - 11.30 மணி, மாலை 4.30- இரவு 8.30 மணி. போன் : 04364 -253 202, 94866 31196.