நாமசங்கீர்த்தனம் மனதை பரிசுத்தமாக்குகிறது!

நாமசங்கீர்த்தனம் மனதை பரிசுத்தமாக்குகிறது!

திருமலைக்கு வரும் கிராமவாசிகள் பலர் “கோவிந்தா” என்று சொல்வதற்கு மாறாக “கோயிந்தா” “கோயிந்தா” என்று சொல்வதைக் கேடகிறோம். அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து அருள் பாலிக்கிறான் அந்த ஏழுமலையான்.
 
பாண்டித்யம் இல்லாவிட்டாலும் பகவான் நாமத்தைச் சொல்லலாம்.
 
நாவிலேயே தழும்பு ஏற்பட்டுப் போகும் அளவிற்கு பகவானுடைய நாமத்தை உச்சாடனம் பண்ண வேண்டும்.
 
நெருப்பைத் தெரிந்து தொட்டாலும் தெரியாமலும் கையை வைத்தாலும் அது சுட்டு விடும். அதைப் போல பகவான் நாமாவின் சுபாவம் என்னவென்றால் எவர் அதைச் சொல்வாரோ, அவருடைய பாவத்தை அது நாசம் செய்துவிடும். ஆகையால் நாம் எந்தக் காரியத்தை எப்போதுசெய்து கொண்டிருந்தாலும் மனத்தால் மட்டும். பகவான் நாமாவை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நம்முடைய பாவங்கள் நம்மையறியாமலேயே கழிந்துவிடும். எப்படி மனதில் நாமத்தைச் சொல்வது? எல்லோருக்கும் நாம் ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபத்தைச் செய்து கொண்டு வந்தால் நல்லது என்று ஆசை ஏற்படுகிறது. இம்மாதிரி நல்ல உபதேசம் கொடுப்பவர்கள் மிகக் குறைவு - உபதேசம் கொடுப்பதற்குச் சிலபேர் கிடைத்தாலும் விதிக்கு அனுசாரமாகக் கொடுப்பதில்லை. இம்மாதிரி நிலையில் நாம் என்ன செய்வது என்ற சந்தேகம் நமக்கு வரும்.
 
இதற்காக மந்திரம் ஒன்று இருக்கிறது. அது எளிதானது எப்படி வேண்டுமோ அப்படி இந்த மந்திரத்தைச் சொல்லலாம்.
 
ஒருவர் புனிதமானவனாலும் அவ்வாறு இல்லாவிட்டாலும், ஆசார சீலனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த எளிய மந்திரத்தைச் சொல்லலாம். அது என்ன மந்திரம்?
 
ஹரேராம ஹரேராம ராமராம ஹரேஹரே
ஹரேக்ருஷ்ண ஹரேக்ருஷ்ண 
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
 
என்பது அந்த மந்திரம்.
 
இந்த நாமாக்களை நாம் எல்லோரும் சொல்லலாம். இதற்கு நியமமே கிடையாது. எப்போதும் தாராளமாகச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். பெண்கள் மாதவிலக்கு நேரங்களிலும் இதைச் செல்லலாம்.
 
இந்த மஹாமந்திரத்தை ஜபித்துக் கொண்டு வந்தால் நாம் பகவானின் அருளைப் பெற்றுப் புனிதமடைந்து ஜன்மசாபல்யம் அடையலாம்.
 
சாமானிய மனிதர்கள் கூட தூங்கப் போகும்போதும், உண்ணத் தொடங்கும் போதும், பயணம் செய்யும் போதும் - இந்த எளிய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தால் பயன் பெறுவார்கள் என்பது உறுதி.
 
ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவந் நாமாக்களைப் பாடி பஜனை செய்ய வேண்டும் ஸாயங்காலத்தில் ஒரு குத்துவிளக்கை ஏற்றி வைத்து ஸ்வாமி படத்தின் முன்னால் அமர்ந்து பகவத் நாமாக்களைப் பாடலாம். பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம். கருணையே உருவான கடவுளின் நாமத்தைச் சொல்ல வெட்கம் என்ன? சரீரம் ஒத்துழைக்கவிட்டாலும் பரவாயில்லை. பக்தி பாவனைதான் முக்யம். ஜகந்மாதாவான அம்பிகையை லௌகீக விஷயங்களுக்கிடையே சிறிது நேரமாவது நினைத்து இப்படியே ராமா, கிருஷ்ணா, சிவா, அம்மா என்று கத்த வேண்டும். இது ஒரு நல்ல பழக்கமாக நம் வாழ்வில் அமைய வேண்டும்.
 
பகவந்த நாம ஸ்மரணையை “பவித்ரானாம் பவித்ரம்” - “புனிதமானதிலும் புனிதமானது” என்று சொல்லியிருக்கிறது.
 
பகவந் நாமத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்லுவது தான் நாமாவளி.
 
திரும்ப திரும்பச் சொல்லும் வார்த்தைகளுக்கு என்ன சக்தி உண்டு என்று யாராவது கேட்டால் அவர்கள் அதன் விஞ்ஞான நுட்பத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றே பொருள். ஒளி-ஒரு சக்தி. அதே போல ஒலியும் சக்தி.
 
பகவான் நாமாவை உரக்க உச்சரிப்பதால் திரும்பத் திரும்பச் சொல்லுவதால் மனம் பரிசுத்தமடைகிறது.
 
யோக முறைப்படி மூலாதாரத்திலிருந்து உருவாகும் ஒலி அலை உடம்பில் ஆறு சக்ர நிலைகளைக் கடக்கும் போது பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகிறது. நம் மனதை மூடியிருக்கும் பல்வேறு கர்ம வாசனைகளை இந்த ஒலி அலைகள் விலக்குகின்றன. மனம் பரிசுத்தடைகிறது சாந்தமடைகிறது.
 
- ஆர்.பி.வி.எஸ்.மணியன்