காஞ்சியின் கலைக்கோயில்

காஞ்சியின் கலைக்கோயில்

காரை சங்கராகாஞ்சி காமகோடி பீடாதிபதி 58வது ஆச்சாரியாள் ஆத்மபோதேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெரிய தபஸ்வியாக வாழ்ந்தவர். 52 ஆண்டுகள் பீடத்தில் அமர்ந்திருந்து அருள்பாலித்தார். இவர் விழுப்புரம் அருகிலுள்ள வடவாம்பலம் என்னும் கிராமத்தில் சித்தி அடைந்தார். ஆனால், இவ்வூரில் எந்த இடத்தில் சித்தி பெற்றார் என்ற விபரம் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இதனைக் கண்டறியும் பணியில் காஞ்சிப்பெரியவர் ஆர்வம் கொண்டார். இதற்காக வடவாம்பலத்தில் முகாமிட்டார். அங்குள்ள வடவாம்பலத்தில் உள்ள தோப்பு துரவுகளில் கால் போன போக்கில் சுற்றிவந்து கொண்டே இருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கலாம் என்று அவருடைய உள்ளுணர்வுக்குத் தோன்றியது. மடத்துநிர்வாகிகள் பணியாட்களை அழைத்து மண்ணைத் தோண்ட ஏற்பாடு செய்தனர். குமாரமங்கலம் வைத்தியநாத சாஸ்திரிகள் தலைமையில் இப்பணி நடந்தது.

சிறிது ஆழம் தோண்டியதும் கபால அஸ்தி(மண்டையோடு) காணப்பட்டது. ண்ணைத் தோண்டிக் கொண்டிருந்த பணியாட்களிடம், 'நிறுத்துங்கள்' என்ற கையை அசைத்தபடியே கீழே சரிந்தார். மயக்கம் தெளிந்ததும், தான் கண்ட அற்புத காட்சியை விவரித்தார்.''காவியஸ்திரம் அணிந்து கையில் தண்டம் ஏந்தி நெற்றியில் விபூதி, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் ஒரு துறவியின் உருவம் என்முன் தோன்றியது. அந்த உருவத்தின் முன்னே ஆயிரக்கணக்கான வேதியர்கள் வேதபாராயணம் செய்து கொண்டிருந்தனர். பக்தர்களும் தங்கள் பிரார்த்தனையை அம்மகானிடம் கூறிக் கொண்டு சூழ்ந்து நின்றனர். என்னைப் போலவே அம்மகானும், ''தோண்டாதே!'' என்று கூறிக்கொண்டே மறைந்துவிட்டார். சாஸ்திரிகளின் அனுபவத்தைக் கேட்ட ஊர் மக்கள் ஆத்மபோதேந்திர சுவாமிகள் சித்தி அடைந்த இடத்தை காட்டியருளிய, காஞ்சிப்பெரியவரின் கருணையை எண்ணி மகிழ்ந்தனர். மகான் சித்திபெற்ற இடத்தை அவர் எப்படித்தான் கண்டுபிடித்தாரோ என்று ஆச்சரியப்பட்டனர். அவரை தெய்வத்தின் மறுவடிவமாகவே பார்த்தனர்.பின்னர் அந்த இடத்தில் துளசிமாடம் ஒன்று அமைக்கப்பட்டது. காலப்போக்கில், பிருந்தாவனமாக மாற்றப்பட்டது. 1927, ஜனவரி 17ல், பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. அன்று முதல் மஹாசுவாமிகள் தன்னை நாடி வருவோரிடம், ''வடவாம்பலம் பிருந்தாவனம்'' சென்று தரிசித்து வரும்படி அருள்பாலிப்பது வழக்கம். இன்றும் அங்கே தெய்வீகசக்தி பரந்திருப்பதை தரிசிக்கும் பக்தர்கள் உணர்கிறார்கள். அங்கு சென்று வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் யாவும் நல்லபடியாக நிறைவேறுகின்றன.