மகிமை மிக்க காயத்ரி!

மகிமை மிக்க காயத்ரி!

சிறப்புகள் அனைத்தையும் பெற்ற காயத்ரி மந்திரத்தைப் பார்ப்போம்.

“ஓம்பூர் புவஸ் ஸுவ
ஓம் தத் ஸவிதுர்வ வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்”

இதற்குத்தானா இத்தனை சிறப்புகள் என்று எண்ணி விடக் கூடாது. இன்னும் சொல்லப் போனால்

“தத் ஸவிதுர்வ வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோத ப்ரசோதயாத்”

என்பதே சிறப்பு வாய்ந்த காயத்ரியாகும்.

இந்த மந்திரத்திற்கு முன்னாலுள்ள “ஓம்” என்பது பிரணவ மந்திரம் என்பதை நாம் அறிவோம்.

 
இதைப்போல, “பூர்”, “புவ”, ஸுவ” என்பவைகளும் “ஓம்” போன்று மந்திரத்தின் முன்வரும் வியாஹ்ருதிகளாகும்.
 
பூர், புவ ஸுவ என்பவை இந்த உலகத்தையும், மறு உலகத்தையும், சொர்க்க உலகத்தையும் குறிக்கும். இந்த மூவுலகங்கள் அனைத்துமே இறைவனையே குறிப்பதாகும்.
 
“நம்முடைய அறிவைத் தூண்டி விடுகின்ற பேரொளி படைத்த சூரிய பகவானுடைய சிறப்பான ஒளியை நாம் தியானம் செய்கிறோம்” என்பதே இந்த மந்திரத்தின் பொருளாகும்.
 
சூரியனின் உள்ளே இருந்து கொண்டு இந்த உலகத்திற்கே ஒளி தந்த வண்ணமிருக்கும் பரமாத்மாவான ஸ்ரீமத் நாராயணனை நாம் தியானிப்போம் என்பது மந்திரத்தின் விளக்கமாகும்.
 
இந்த உலகத்து மக்களின் அறிவைக் கூர்மைப்படுத்துவது மட்டுமன்றி அறிவையே நல்குவதும் சூரிய பகவான்தான். இந்தச் சூரிய பகவானையும் இயக்குபவர் ஒருவர் உண்டென்றால் அவர்தான் ஸ்ரீமந்நாராயணன் என்று நமது வேதசாஸ்திரங்கள் தெளிவுபடக் கூறுகின்றன.
 
இந்த மந்திரத்தில் வருகின்ற “தத்”, தேவஸ்ய” என்ற சொற்கள் பரமாத்மாவைக் குறிப்பனவாகும்.
 
அறிவைத் தூண்டி நம்மை ஆக்கப் பணிகளில் ஈடுபட வைக்கும் ஒளிக்கடவுளை வணங்குகிறோம். இந்தக் கடவுள் - அதாவது சூரிய பகவான் நமக்குக் கூரிய அறிவுத் திறனை - அறிவாற்றலைத் தருவதன் மூலம் நமது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்பது உறுதியாகும் சூரியனை வழிபட்டவர்கள் உயர்வது உறுதி!
 
- ஆபஸ்தம்பன்