தவக்கோலத்தில் பிள்ளையார்!

தவக்கோலத்தில் பிள்ளையார்!

பிள்ளையார்பட்டியிலே நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இவ்விழா பத்து நாட்கள் மிக சிறப்பாக நடைபெறும். பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்பது நாள் முன்னதாகக் காப்பு கட்டி, கொடியேற்றம் செய்து இரண்டாம் திருநாள் முதல் எட்டாம் திருநாள் வரை ஒவ்வொரு நாளும் காலை விழாவில் வெள்ளிக் கேடயத்தில் சுவாமி திருவீதி உலாவும், இரவு வேளையில் ஒவ்வொரு நாளும் அட்டவணையில் குறிப்பிட்டபடி சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் திருவீதி உலாவும் நடைபெறும். திருவிழா நடைபெறும் நாட்களில் மாலை வேளையில் கற்பக விநாயகர் திருக்கோயில் நகரத்தார்களின் ஆஸ்தான வித்வான்களின் இன்னிசையும், ஆன்மிகச் சிறப்பு சொற்பொழிவும், கலை நிகழ்ச்சியும் நடைபெறும். வருடம் முழுவதும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். விநாயகர் சதுர்த்தி பெருவிழாவில் கூட்டம் அதிகமாக வரும் மூன்று நாட்களில் வீருந்து உபசரிப்புக்காக பிள்ளையார்பட்டி கோயிலை சார்ந்த சிறாவயல், நாச்சியாபுரம் பங்காளிகளை விசாரணைதாரர்களாக நியமித்து விருந்து உபசரணை செய்வது நகரத்தார்களுக்கே உரிய சிறப்பு அம்சமாகும்.

 
விநாயகர் சதுர்த்தி விழா
 
முதல் நாள் இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் அருள்மிகு கற்பக விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா வருவார். திருவீதி உலாவில் ஒவ்வொரு நாளும் திருமறைப் பாராயணமும், திருமுறைப் பாராயணமும் நடைபெறும்.
 
இரண்டாம் நாள் இரவு விழாவில் விநாயகப் பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களின் கஷ்டங்களை நீக்கி அருள்வார்.
 
மூன்றாம் நாள் இரவு விழாவில் சுவாமி பூதவாகனத்தில் எழுநதருளி திருவீதி உலா வருவார்.
 
நான்காம் நாள் இரவு கமல வாகனம் என்கிற தாமரை வாகனத்தில் விநாயகப் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
 
ஐந்தாம் நாள் இரவு திருவீதி உலாவில் ரிஷப வாகனம் எனும் வெள்ளிக்காளை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
 
ஆறாம் நாள் மாலை கற்பக விநாயகர் கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்வார்.
 
விநாயகப் பெருமாள் வெள்ளி யானை வாகனத்தில் வந்து கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்கிறார்.
 
அசுரன் பெருச்சாளி வாகனமான வரலாறு
 
அசுர குலத்தில் கஜமுகாசுரன் மகத முனிவருக்கும், விபுதைக்கும் மகனாகப் பிறந்தவன். “தேவர்களை ஒழிப்பேன்” என்று சபதமெடுத்தான். அவன் தந்த தொல்லைகள் தாங்காமல் தேவர்கள் சிவபெருமானிடம் காப்பாற்றும்படி வேண்டினார்கள்.
 
சிவபெருமான் தன்னில் இருந்து ஒரு உருவத்தை உருவாக்கின்றார். மூன்று கண்கள், ஐந்து கைகள், யானை முகம், மனித உடல் ஆகியவைகளோடு விநாயகரைப் படைத்து சிவகணங்களின் தலைவராக்குகின்றார்.
 
விநாயகப் பெருமான் கஜமுகாசுரனுடன் போரிட்டு வெல்லுகின்றார். கஜமுகாசுரன் பெருச்சாளி வடிவமெடுத்து விநாயகப் பெருமானோடு போரிட்ட போது அவனை அடக்கி, அவனை தன்னுடைய வாகனமாக்கிக் கொள்கின்றார். எதிரியை அழிக்காது காலம் முழுக்க கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அகிம்சைப்போர்க் கலை விநாயகருக்கு உரியதாகும்.
 
கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்த பின் தங்கத்தால் ஆன மூஷிக வாகனத்தில் உலா வருகிறார்.
 
ஏழாம் நாள் இரவு வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.
 
எட்டாம் நாள் இரவு சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.
 
ஒன்பதாம் நாள் காலை கற்பக விநாயகப் பெருமான் திருத்தேருக்கு எழுந்தருளி மாலை திருத்தேர் திருவீதி உலா நடைபெறும்.
 
இங்குள்ள சண்டிகேஸ்டவரர் திருத்தேவரை பெண்கள் மட்டுமே டைம் பிடித்து இழுப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
 
ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்திக்கு முன்தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10.00 மி வரை மூலவர் கற்பக விநாயகர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.
 
பத்தாம் நாள் விநாயகர் சதுர்த்தி அன்று காலை தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும் இவ்விழாவில் முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட ராட்சச கொழுக்கட்டை விநாயகப் பெருமானுக்கு படைக்கப்படும். இதற்காக எட்டாம் திருநாளன்று இரவே பிரமாண்ட மோதகத்தைத் தயார் செய்து இரண்டு நாட்கள் அடுப்பிலேயே வேக வைக்கப்பட்ட பிறகு பத்தாம் நாள் அடுப்பை விட்டு இறக்கி நிவேதனம் செய்யப்படுகின்றது.
 
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விரதம்
 
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விரதம் சிறப்பாக பெண்களால் பின்பற்றப்படுகின்றது. விரதம் பூர்த்தி செய்யும் பெண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு குடத்திலும் பிள்ளையாரைப் போடடு தண்ணீரை நிரப்பி பூஜை செய்வார்கள். பிறகு அந்த தண்ணீரை தங்களின் மேல் ஊற்றிக் கொண்டு நனைந்த உடையுடன் பிள்ளையாரை வணங்கி விரதத்தை முடிப்பார்கள்.
 
இரவு ஐம்பெரும் மூர்த்திகளின் திருவீதி உலா நடைபெறும்.
 
- S.L.S. பழனியப்பன்