வியாசரின் வழித்தோன்றலாய் சௌனக மகரிஷி!

வியாசரின் வழித்தோன்றலாய் சௌனக மகரிஷி!

புராண மற்றும் அதற்கு பிற்பட்ட காலங்களில் வாழ்ந்த முனிபுங்கவர்களும் மகரிஷிகளும் மனித சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் தொண்டு செய்தே வாழ்ந்திருக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மிகச் சிறந்த கல்வி ஞானத்தையும் தவ வலிமையையும், அஷ்டமா சித்திகளையும் பெற்று விளங்கினார்கள். ஆகவே தான், மற்றவர்களைக் காட்டிலும் முனிவர்களும் ரிஷிகளும் மனித சமுதாயத்திற்கு நல்லவற்றைச் செய்கின்ற எத்தனிப்பில் வெற்றியுடன் முன்னெடுத்துச் சென்றார்கள். இதைத் தவிரவும், இவர்களிடத்தில்  தன்னலமற்ற மற்றும் எதையும் யாரிடத்திலும் எதிர்பாராத மிகச் சிறந்த மக்கள் நலச் செயல்பாடுகள் மேலோங்கி இருந்தன.

இதன் காரணமாகவே இவர்களில் பலரும் புராண வரலாற்றில் நீங்காத இடத்தினைப் பெற்றுள்ளார்கள். சப்தமகரிஷிகள் யாவரும் மிகச் சிறந்த கல்வி ஞானத்தையும் தபோ ஞானத்தையும் பெற்றுவைத்து உலக நன்மைக்காக பல ஆச்சரியபடத்தக்க நிகழ்வுகளை செய்து காட்டியிருக்கின்றார்கள். இவர்களால் இயற்றப்பட்ட இறை மற்றும் வைத்திய நூல்கள் வருங்கால சந்ததயினருக்கு பயனளிக்கும் வகையில் அமைந்தன. 
 
நைமிசாரண்யத்தில் ரிஷிகள் பலரும் ஒன்று கூடி நீண்ட நெடும் வருடங்களுக்கு கலியுகத்தில் தீங்குகள் அண்டாவண்ணம் யக்ஞயத்தை நடத்தினார்கள். இதற்கு, உலக நன்மையையே பெரிதும் கருத்தில் கொண்டிருந்த சௌனக மகரிஷி தலைமை தாங்கினார். பொது ஜன சேவையை மேன்மையானதாக கருதியிருந்த சௌனக மகரிஷி எல்லா புராணங்களையும், பண்டைய இதிகாசங்களில் முக்கியமானதான மகாபாரதத்தையும் தன்வசப்படுத்தியிருந்தார். சௌனக மகரிஷியின் சேவைகள், வேதங்களை பகுத்து ஆராய்ந்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து இனி வரும் காலங்களில் மனித சமுதாயம் பயனடையும் வகையில் அளித்த வியாச மகரிஷியின் சேவைககளை பெரிதும் ஒத்ததாக இருந்தன. ஆகவே தான் சௌனக மகரிஷியை வேத வியாசரின் வழித்தோன்றல் என அழைக்கலானார்கள்.

வியாச மகரிஷி நான்கு வேதங்களையும் பகுத்தாய்வு செய்து பிரித்ததைப் போலவே, சௌனக மகரிஷி அனுகிராமனிஸ், பிரகதேவதா மற்றும் ரிக்விதனா ஆகியவற்றை புதிததாக உருவாக்கினார். வியாசர் புராணங்கள் தொடர்பான சரத்துக்களை சேகரித்து, தொகுத்து, பிழை நீக்கம் செய்து ரோமஹரசனா மற்றும் உக்ராஸ்ரவா ஆகியோருக்கு புகட்டினார். இவர்கள் பின் வந்த காலங்களில் அவற்றை சௌனக மகரிஷிக்கும் அவர்களது சிஷ்யர்களுக்கும் போதித்தார்கள். சௌனகர் ஸ்ரீமத் பாகவதம் மற்றும் மகாபாரதத்தை இந்த இரண்டு சரித்திர நாயகர்களிடமிருந்து கற்றுக் கொண்டார். 
 
சௌனக மகரிஷி் துவாபர யுகத்தி்ன் கடைசி காலத்தையும் கலியுகத்தின் தொடக்கத்தையும் முந்தைய யுகங்களின் கல்வி மற்றும் தவ யோகங்களை இணைக்கும் ஒரு பாலமாக அமைந்திருந்தார். அறிவை சேமித்து வைத்து அடுத்த தலைமுறைக்கு அதனை எடுத்துச் செல்லும் அரும் பணியை சௌனக மகரிஷி ஆற்றியதன் காரணமாக இன்றும் அவர் ஆராதிக்கப்படுகின்றார். இன்று நாம் பெற்றுள்ள புராண வரலாறுகள் மற்றும் பரதத்திற்கு அடிப்படையாக விளங்குவது சௌனக மகரிஷியின் அரும் சேவையாகும்.
 
பழைய புராணங்களை பற்றி உக்கிரஸ்ரவா குறிப்பிடுகையில் “வேத வியாசரின் ஆழ்ந்த கருத்துக்களை கேட்டு இருக்கின்றேன். வைசாம்பயணாவின் நாக அரசர் ஜனமே ஜெயம் தொடர்பான சர்ப்ப யக்ஞனா என்பதை படித்திருக்கிறேன் (ஜனமே ஜெயம் பரிஷத் மகராஜாவின் மகனும் அபிமன்யுவின் பேரனுமாவார்). நான் குருசேத்திரம் சென்று பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பாரத போர் 18 நாட்களுக்கு நடைபெற்ற இடத்தை கண்ணுற்றேன். இந்த போரில் நாட்டில் உள்ள எல்லா மன்னர்களும் ஏதோ ஒரு விதத்தில் பங்கெடுத்து கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்தேன். நான் படித்தறிந்த புனிதமான புராணங்கள் உலக நன்மைகளையும் தர்மத்தின் துளிகளையும், ரிஷிகளின் தியாகங்களையும் மனித இனத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்து இயம்புவதாக உள்ளன” என்கின்றார்.
 
இதற்கு சௌனக மகரிஷி, “நீங்கள் கற்றறிந்த அந்த புராணங்களை அதாவது முதன்முதலில் துவாயம்பயாணா உருவாக்கியதை எனக்குச் சொல்லுங்கள். இந்த புராணங்கள் தேவர்களாலும் பிரம்ம மகரிஷிகளாலும் பெரிதும் போற்றப்பட்டுள்ளன. வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட மிகச் சிறந்த சரத்துக்களுடன் இவை பகுத்துணர்ந்து சொல்லப்பட்டுள்ளன. இது ஒரு புனிதமான சேவை. இது ஒரு நல்ல மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இது பல புத்தகங்களின் கருத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. இது மற்ற சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களை இணைத்துக் கொண்டுள்ளது. பரத இதிகாசத்தையும் எனக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் இதுவும் ஒரு புனிதமான தொகுப்பாகும். இது தீங்குகளை அப்புறப்படுத்துவதில் முன் நிற்கின்றது” என்று கூறினார். 
 
சௌனக மகரிஷியின் வரலாற்றினை படித்து அறியும் போது, இவர் வியாசருக்கு இணையான இலக்கிய மற்றும் பொது நலத் தொண்டினை இந்த உலகுக்கு நல்கியுள்ளார் என்பதை நன்கு உணர முடிகின்றது. 
 
- ஒத்தக்கடை ராமன்