நல்லருட் கருணை புரியும் நல்லூர்க் கந்தப் பெருமான்

கலியுக வரதனாக எமக்குக் கண்கண்ட தெய்வமாக மிளிர்கின்ற வேலவன் வழிபடும் அடியார்களின் துன்பங்களையும் துயரங்களையும் போக்கியருள்புரியும் நோக்கில் நல்லூரிலே எழுந்தருளி அருள்பாலிக்கின்றான்.
எத்தனையோ முருகன் ஆலயங்கள் இருந்தும் இந்த நல்லூரில் மட்டும் ஏன் இத்தனை அடியார் கூட்டம்? நல்லூர் கந்தசுவாமி கோயிலில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருக்கும் வேல் அருட்சக்திமிக்க அற்புத அதிசய வேலாகும். அங்கிருந்து அருளானது ஒளிவீசி. எங்கும் அருளைப் பரப்பி கதிர் ஒளி காட்டிக் கொண்டிருக்கின்றது.
முருகன் அடியார்கள் வேண்டுவதையெல்லாம் அள்ளிஅள்ளிக் கொடுக்கும் அற்புத அதிசய சக்தி மிக்க வேல் அது. அருள் ஒளி வீசி கதிர் ஒளி பரப்பிக் கொண்டிருப்பதனால் பக்தர் குழாம் இங்கே படையெடுக்கின்றது.
ஸ்ரீசங்கபோதி புவனேகபாகு என்ற அரசனால் கட்டப்பட்ட இந்தக் கோயில் நல்லூர் இராசதானியாக இருந்த காலத்தில் செங்கோல் செலுத்தி அரசோச்சி வந்த மன்னர்கள் தங்களுடைய வழிபடு தெய்வமாக முருகப்பெருமானைக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
கடைசியாக அரசாண்ட சங்கிலி மன்னனின் உருவச் சிலை இந்த நல்லூர் முத்திரைச் சந்தியடியில் வைக்கப்பட்டிருப்பதனால் இந்தக் கோயிலின் அருமையும் பெருமையும் சொல்லாமலே புலப்படுகிறது. அது மாத்திரமன்றி அழகான இராஜகோபுரத்துடனும் மணிக்கோபுரங்களுடனும் அமைக்கப் பெற்றிருக்கும் இக்கோயில் தொன்றுதொட்டே வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயமாக நம்மிடையே புகழ்பரப்பி நம்பப்பட்டு வருகின்றது. மேலும் அடியார்கள் முற்றுமுழுதாக நம்பி வழிபடுகின்ற திருக்கோயிலாக இது மிளிர்கின்றது எனின் மிகையாகாது.
கைதொழுகின்ற அடியார்களின் கடுவினையகற்றி அருள்புரிந்து நல்வாழ்க்கையையும் கொடுப்பதனால் இக்கோயிலில் எழுந்தளியிருக்கும் வேலாயுதம் சிறப்புப் பெறுகின்றது. சரித்திரப் புகழ்மிக்க இந்த ஆலயத்தில் வருடந்தோறும் ஆடி அமாவாசை வந்து ஆறாம் நாள் கொடியேற்றமாகி வருடாந்த மஹோற்சவம் இருபத்தைந்து நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.
ஒவ்வொரு வருடமும் நல்லூர் பரம்பரை அறங்காவலர் பெருமக்களால் மஹோற்சவத்துக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு யாழ்ப்பாண மாநகர சபையினரின் ஒத்துழைப்புடனும் அடியார்களின் தொண்டு அடிப்படையிலான சேவையும் ஒருங்கிணைக்கப்பட்டு திருவிழா நடைபெற்று வருகின்றது. மேலும் செங்குந்தா பரம்பரையினர் எனப்படுபவர்களால் கொடியேற்றத்துக்கு முதல்நாள் நல்லூர் பருத்தித்துறை வீதியிலமைந்துள்ள சட்டநாதர் கோயில் வீதியிலுள்ள கதிர்காம பழனிமுருகன் கோயிலிலிருந்து திருவிழாவுக்கான கொடிச்சீலை இங்கு கொண்டுவரப்படுகின்றது. ஓர் அழகான சிறிய சித்திரத் தேரினிலே வைத்து எடுத்துவரப்படும் கொடியேற்றத் திருவிழாக் கொடிச் சீலை பக்தர் குழாம் சூழ்ந்து வர முன்னே நாதஸ்வர இசை மங்களமாய் முழங்க பக்திபூர்வமாக நடைபெறும் அழகே தனி.
இக்கோயிலில் எங்குமில்லாத ஒரு தனிப்பட்ட பெருமையுடன் கூடிய சிறப்பு யாதெனில் நேர ஒழுங்குக் கட்டுப்பாடேயாகும். சரியாக 6 மணி அடிக்கப் பூஜை ஆரம்பமாகும் என்று சொன்னால் நம்பிப் போகலாம். எந்தவிதமான குறைபாடுகளுமின்றி சரியான நேரத்துக்குப் பூஜையாகி எம்பெருமான் வீதிவலம் வருகின்ற அற்புதமான நல்லருட்காட்சியைக் காணலாம்.
இருபத்தைந்து நாள் திருவிழாவும் இருபத்தைந்து விதவிதமான வாகனங்களில் முருகப் பெருமான் மாலை வேளையில் மருந்து போன்று விளங்கும் சூரிய ஒளி வெயில் எறிக்க வீதி வலம் வருகின்ற அருள்மயமான காட்சியின் அருமை சொல்லில் அடங்காது.
இந்த இரவுத் திருவிழாவைக் காண்பதற்கு அடியார் பெருமக்கள் சரியான நேரத்துக்கு ஆலயத்தில் சமுகமளித்து பக்தி பூர்வமாக முருகனை வழிபாடியற்றும் அழகு தனிப் பெருமையையுடையது. ஒவ்வொரு திருவிழாவும் ஒவ்வோர் அழகுடனே சிறப்பாக நடைபெறுவதனால் அடியார்கள் தினசரி இங்கே வந்து குழுமுவார்கள். மிகுந்த ஜனத் திரள் மத்தியிலே நெருக்கமான நெரிசலிடையேதான் அழகன் முருகனைக் காணலாம். இருபத்தைந்து நாள் திருவிழாவில் பகல் திருவிழா உள் வீதியிலும் மாலைத் திருவிழா அதாவது இரவுத் திருவிழா வெளி வீதியிலுமாக இடம்பெறும்.
வழிபடும் அடியார்களின் வசதி கருதி ஆலயச் சூழலில் பல முன்னேற்பாடுகள் செய்யப்பெற்றிருக்கும். தினசரி திருவிழா நாள்களில் வேல் நடுவிலே வர இரு பக்கமும் வள்ளியும் தெய்வானையும் காட்சி தரமுருகன் வீதி வலம் அருங்காட்சி இடம்பெறும்.
இத்திருவிழா நடைபெறும்போது வீதி பஜனைகளும் பக்தி பூர்வமாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இது எல்லாவற்றிற்கும் மேலாக நல்லூரானின் பத்தாம் திருவிழா மஞ்சம். இந்த மஞ்சமானது அழகான மின்சார தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களால் இழுத்து வரப்படுவது சிறப்பம்சம்.
மேலும், இந்த வருடாந்த மஹோற்சவத்தில் பூச்சப்பறம், தங்கரதம், வெள்ளி மயில், வெள்ளிக்கடா, மாம்பழத் திருவிழா, குதிரை வாகனத் திருவிழா, சப்பரத் திருவிழா, தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா, பூங்காவனம் என்று பல்வேறு விழாக்களும் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
அது ஒருபுறமிருக்க, நல்லூர் தேர்த்திருவிழா நாள் ஒரு புனித புண்ணியப் பேறாகும். யாழ்.குடாநாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அடியார் பெருமக்கள் இந்த நல்லூர் வந்த குழுமுவர். முருகனும் நன்கு வரவேற்றுத் தம்முடைய அடியார்களுக்கு அருள்புரியத் தயங்கவேமாட்டேன் என்று புன்சிரிப்புத் தவழ வீதிவலம் வந்து காட்சி கொடுப்பான்.
ஆதலால் இந்த ஆண்டு பல்வேறு வகைகளில் தலைமைப் பீடம் ஏற்று முருகனைக் கரங்குவித்து, சிந்தித்து, வந்து நின்று சேவிப்பது கடனாகும்.
கலாபூஷணம் இராசையா ஸ்ரீதரன்
Featured Video
மாத பலன்கள்
Newsletter Sign Up
Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!