கர்ம தோஷ நிவர்த்தியளிக்கும் ஸ்வேதாரண்யேஸ்வரர்

கர்ம தோஷ நிவர்த்தியளிக்கும் ஸ்வேதாரண்யேஸ்வரர்

அறிவு, திறமை, முயற்சி இருந்து முன்னேற்றமடைய வழி இல்லாத நிலை. தொழில் நல்ல நிலையில் இருந்தும், பெயர் புகழ் என்ற நன்மதிப்புடன் இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் திடீரென சரிவினைச் சந்தித்து மீள முடியாத நிலை, இதற்கெல்லாம் காரணம் பூர்வ ஜென்ம கர்ம தோசம். முன்னோர்கள் சாபம், சர்ப்ப சாபம், கோ சாபம் போன்ற சாபங்களாலும் பூர்வ ஜென்ம தோசம் ஏற்படுகிறது. ஜோதிடப்படி 5-ம் இடம் பூர்வ ஜென்மத்தைக் குறிப்பதாகும் இந்த 5-ம் இடம். 5-ம் இடத்து அதிபதி நிலையைக் கொண்டு இதை அறியலாம். இந்த அமைப்பு 5-ம் இடத்தில் சனி, இராகு, கேது சேர்க்கை. 5-ம் இட அதிபதி மறைவு, நீசம் போன்றவற்றால் அறியலாம். ஜாதகங்கள் நல்ல நிலையில் அமைந்தாலும் யோகாதிபதிகள் யோகத்தை செய்ய வேண்டிய நிலையில் இருந்தாலும், வாழ்வில் சரிவுகளைத் திடீரென சந்திக்கும் நிலை. அனைத்து வழிகளிலும் பிரச்சனைகள் உண்டாகும். புத்திர பாக்ய தாமதம், பூர்வீக சொத்தில் பிரச்சனை, தொழிலில் நஷ்டம், மனநிலைப் பாதிப்பு, திருமணத் தடை, அவமானம் போன்றவை ஏற்படும்.

 
இந்த தோசத்திலிருந்து விடுபட, நாடி ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள புதன் ஸ்தலமான திருவெண்காடு சென்று, பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இத்தலம் செல்பவர்களின் சகல பாவங்களும் தோசங்களும் நிவர்த்தியாகின்றன என்பது ஐதீகம். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் கொண்ட இத்தல இறைவன் ஸ்ரீ ஸ்வேதாரண் யேஸ்வரர். அம்மன் ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை நவகிரகங்களில் புதனுக்கு தனிச் சன்னதி உள்ளது. புதன் சன்னதி பிரம்ம விதயாம்பிகை அம்மன் இடப்பாகத்திலும், புதனின் தந்தை சந்திரனின் கோயிலும் சந்திர தீர்த்தமும் புதன் சன்னதிக்கு எதிரிலும் அமைந்துள்ளது.
 
சுவேதகேது என்ற சிறுவன் தனது ஆயுள் 8 ஆண்டுகளே என்பதை அறிந்து இத்தலம் வந்து வழிபட 8 வயது பூர்த்தியானதும், எமன் வீசிய பாசக்கயிறு பலனிளக்காமல் போய், லிங்கத்திலிருந்து சிவன் வெளிப்பட்டு, காலனை அடக்கி, சுவேத கேதுவைக் காப்பாற்றினார். பிரம்மனிடம் பெற்ற வரத்தால் தேவர்களுக்குத் துன்பங்களைத் தந்த மருத்துவன் என்ற அரக்கனை தனது 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்திலிருந்து அகோர மூர்த்தியாகத் தோன்றி, அரக்கனை சரணடையச் செய்து தனது காலடியிலும், காயம்பட்ட ரிசப தேவரை திருத்த மண்டபத்திலும் அமரச் செய்தவர் அகோர மூர்த்தி வடிவம். சிவனின் 64 மூர்த்தங்களில் அகோர மூர்த்தி 43-வது மூர்த்தியாவார். மேலும் வேத ராசி என்ற அந்தணர் கொண்டு வந்த கட்டுச் சோற்றை அவிழ்க்க அதில் மரத்திலிருந்து பாம்பு நஞ்சைக் கக்கியது தெரியாமல், அதை மற்றொரு வேதியனுக்குக் கொடுக்க, அவன் அதை உண்டு இறந்தான். வேத ராசி அறியாமல் செய்த தவறினால் ஏற்பட்ட பிரம்ஹத்தி தோசத்தை நீக்கியவர் இந்த அகோர மூர்த்தி. சுவேத கேது வழிபட்ட லிங்கம் ஸ்வேதாரண்ய லிங்கம். மற்றும் நடராஜர், அகோர மூர்த்தி என மூன்று மூர்த்திகள் உள்ள  ஸ்தலம்.
 
இங்கு சூரியன், சந்திரன், அக்னி தீர்த்தங்கள் உள்ளன. ஆலமரம், கொன்றை, வில்வம் என 3 ஸ்தல விருட்சங்கள் உள்ளன. இங்குள்ள ஆல மரத்தடியில் ருத்ர பாதம் உள்ளது. இங்கு பிதுர் கடன் செய்யலாம். இங்குள்ள மூன்று தீர்த்தங்களில் நீராடி, முறையான பூர்வ ஜென்ம கர்ம தோச சாந்தி, பித்ரு தோச சாந்திக்கு பித்ரு தர்ப்பணம் போன்றவற்றை அங்குள்ள சந்திர தீர்த்தக் கரையில் ஆலமரத்தடியில் உள்ள ருத்ர பாதத்தில் செய்து கொள்ள, பூர்வ ஜென்ம கர்ம தோசம் நீங்கும். இது 21 தலைமுறைகளுக்குக் கட்டுப்படும்.
 
வழித்தடம் சீர்காழி - பூம்புகார் சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
பூர்வ ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள், தற்பொழுது துன்பங்களை அனுபவிக்கிறார்கள். மனமுருகி இறைவனிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டால், பகவான் நமது துன்பங்களைக் குறைத்து, கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றலையும் அருளுகிறார். பட்டினத்தார் நெஞ்சுருகப்பாடும் கீழ்க்கண்ட பாடலை, நாம் தினமும் மனமுருகிப் பாடி, இறைவனைத் துதிக்க, பூர்வ ஜென்மத்தில் செய்த பிழைகள் அனைத்தையும் பொறுத்து, கருணை காட்டு வார் இறைவன்.
 
கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி நில்லாப்பிழையும், நினையாப்பிழையும் நின்னந்தெழுத்தைச் சொல்லாப் பிழையும், தொழாப்பிழையும் பொறுத்தருள்வாய் இறைவா! கச்சி ஏகம்பனே.
 
K.துரைசாமி

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!