கோலங்களுடன் கொண்டாடும் ஓணம்

கோலங்களுடன் கொண்டாடும் ஓணம்

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் மிகுந்த மகிழ்ச்சியுடன் திகழ்வது ஆவணி மாதமாகும். மங்களகரமான இந்த மாதத்தில் திருமண வைபவங்களும், திருவிழாக் கொண்டாட்டங்களும் நிறைந்து காணப்படும். இம்மாதத்தில் வருகின்ற பண்டிகைகளும்கூட மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்துகின்றது. ஆவணி மாதத்தில் வருகின்ற முக்கியமான பண்டிகையாக ஓணம் பண்டிகை இருந்து வருகின்றது. இதற்கு திரு என்று அடைமொழியை சேர்த்து திருவோணம் என அழைக்கின்றார்கள். மகாபலி சக்கரவர்த்தியை விஷ்ணு பெருமான் ஆட்கொண்டதை நினைவு கூறும் விதமாக ஓணம் பண்டிகை கேரள மாநிலம் எங்கும் 11 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. ஆவணியில் வருகின்ற உத்திர நட்சத்திர நாள் தொடங்கி திருவோணம் வரை உள்ள 11 நாட்கள் கேரளாவின் அனைத்து வீடுகளிலும் விதவிதமான வண்ண கோலங்களை வரைந்து ஓணம் பண்டிகைக்கான சிறப்பு பட்சணங்களை செய்து வழிபடுகின்றார்கள். 

 
கேரள மாநிலம் தவிர்த்து, மற்ற இடங்களில் வாழ்ந்து வரும் மலையாள மக்கள் அனைவரும்  ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடத் தவறுவதில்லை. கேரள மாநிலத்தில் இருக்கின்ற சில தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு குறைந்தது மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிப்பார்கள். ஓணம் பண்டிகை தினத்தன்று கேரள மாநிலத்தில் நல்ல மழை பொழிந்தால் அது சுபிட்சத்தின் அறிகுறியாய் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. மகாபலி சக்கர வர்த்தியிடம், விஷ்ணு பெருமான் மூன்றடி மண் கேட்டு வந்த போது மகாபலி மிகுந்த பெருமிதத்துடன் அதற்கு இசைவு தெரிவித்தார். அவருடைய குலகுருவான சுக்ராச்சாரியார் எவ்வளவோ தடுத்தும் இரண்டடி மண்ணை விண்ணுக்கும் மண்ணுக்குமாக விஷ்ணு பெருமானுக்கு மகாபலி தாரை வார்த்துக் கொடுத்தார். அப்போது இறைவனுக்கே தான் தானம் கொடுக்கும் நிலையில் இருப்பதை எண்ணி மகாபலி கர்வமும் சற்றுக் கொண்டார். மூன்றாவது அடிக்கு இந்த புவியில் இடம் இல்லாத காரணத்தால் விஷ்ணு தன் அடியால் மகாபலியின் சிரத்தில் அழுத்தி அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பி விட்டார். 
 
இவ்வாறு பரந்தமானால் பாதாள உலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மகாபலி, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று பூமிக்கு விஜயம் செய்கிறார் என்றும் அந்த இடமானது கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது என்றும் நம்பப்படுகின்றது. இவ்வாறு வெளிப்படும் மகாபலியை வரவேற்கும் விதமாகவே இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. 
 
மகாபலிக்கு ஏற்பட்ட ஆணவத்தை இறைவன் நீக்கியதே இந்த பண்டிகையின் அடிப்படையாக விளங்குகின்றது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் முழுவதும் வீடுகளுக்கு முன்பாக போடப்படுகின்ற வண்ண வண்ண ஓவியங்கள் பார்ப்போரின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கும். இந்த மங்கல நன்னாளில் ஒவ்வொருவரும் எளிமையுடனும் நிறைந்த பக்தியுடனும் மகாபலியையும் அவரை ஆட்கொண்ட விஷ்ணு பெருமானையும் நினைவில் கொண்டு வழிபாடுகள் செய்வார்கள்.
 
நவநீதம்