போட்ஸ்வானா கபரோனில் சிவன் ஆலயம்!

போட்ஸ்வானா கபரோனில் சிவன் ஆலயம்!

பிரார்த்தனை என்பது மனித சமுதாயத்திற்கு கிடைக்கப் பெற்ற ஒரு வரப்பிரசாதமாகும். பூமியில் படைக்கப்பட்ட உயிரினங்கள் யாவும் தனக்கு துன்பங்கள் நேர்ந்த போதும் நோயில் உழலும் போதும் அவற்றை மன உறுதியுடன் பொருத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை தவிர வேறு வழியேதும் அவற்றிற்கு இல்லை. ஆனால் ஆறு அறிவு படைத்த மனித இனத்திற்கு எவ்வகையிலான துன்பங்களாயினும் அவற்றை களைவதற்கும் குறைப்பதற்கும் இறைவனின் திருவடி எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறது. பிரார்த்தனை என்பது மனிதர்களுக்கு ஆத்மார்த்தமான அமைதியையும், சாந்தியையும், மன நிம்மதியையும் அளிக்க வல்லதாக இருக்கின்றது. 

தீர்க்க முடியாத சில பிரச்சனைகளுக்குக் கூட பெற்ற தாயிடம் செல்வது போல, பெரும்பாலான இந்து சமயியிகள் இறைவனின் திருவடியை சரணாகதி அடைகின்றார்கள். நம்பினோர் கைவிடப்படுவதில்லை என்கின்ற அந்த உயர்வான நம்பிக்கை அவர்களை உய்விக்கின்றது என்பது தான் உண்மை. ஆகவே இப்படிப்பட்ட உயர்ந்த பயன்களை தரக்கூடிய பிரார்த்தனையை செய்வதற்கு இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஆலயம் என்ற ஒன்று அவசியப்படுவது இயற்கையே. எனவே தான் உலகின் எந்த மூலையிலும், எந்த பணியை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தாலும் இந்து சமய மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தான் வாழ்கின்ற இடத்தில் அற்புதமான ஒரு ஆலயத்தை ஏற்படுத்தி தம்முடைய ஆன்மீக தேடல்களுக்கு விடையைக் காண்கின்றார்கள்.

இப்படியானதொரு ஆன்மீக தேடலின் விடையாய் இருப்பது தான் தென் அமெரிக்க எல்லையில் அமைந்திருக்கும் குடியரசு நாடான போட்ஸ்வானாவில் அமையப் பெற்றிருக்கும் சிவன் ஆலயம். போட்ஸ்வானா நாடானது நான்கு புறங்களிலும் நிலத்தால் சூழப்பட்டதாகும். இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் தம்மை பெருமையுடன் “பட்ஸ்வானா” என சொல்லி கொள்கின்றார்கள். தம்முடைய நாட்டின் தனி ஒருவரை குறிப்பிட்டு சொல்லும் போது “மோட்ஸ்வானா” எனவும் சொல்கின்றார்கள். போட்ஸ்வான தேசமானது தாம் விடுதலை பெற்றவுடன் தமது நாட்டின் பெயரை 1966-ம் ஆண்டு முதல் போட்ஸ்வானா என அமைத்துக் கொண்டது. 

அது முதல் தம்முடைய தனித்தன்மையை பாரம்பரிய பண்பாட்டு நடைமுறைகளின் மூலமாகவும் ஜனநாயக அரசியல் மூலமாகவும் நிலை நிறுத்திக் கொண்டது். நில அமைப்பின்படி போட்ஸ்வானா தேசமானது மலைகள் அதிகமில்லாமல் தட்டையான அமைப்பை கொண்டிதிருப்பதோடு சுமார் 70% நிலப்பரப்பு கடுமையான பாலைவனமாகவும் காட்சியளிக்கின்றது. இந்த பாலைவனம் காளகாரி பாலைவனம் என அழைக்கப்படுகின்றது. இந்த உலகில் மிக குறைந்த ஜனத்தொகையை கொண்ட நாடுகளில் போட்ஸ்வானாவும் ஒன்றாகும். நாட்டின் 10% மக்கள் தலைநகர் கபரோனில் வசிக்கின்றார்கள். தனி நபர் வருடாந்திர வருமானத்தை மிகக் குறைவாக கொண்டிருந்த போட்ஸ்வானா இப்போது வளர்ச்சி பாதையை நோக்கி முன்னெடுத்து செல்கின்றது.  

போட்ஸ்வானாவின் தலைநகரான கபரோனில் கால்டெக்ஸ் என்னும் பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு பின்பாக ஹிந்து ஹால் என்னும் பிரபலமான பெயருடன் அமைந்திருக்கின்றது சிவன் ஆலயம். இந்த ஆலயம் மருவபுலா ரொபோட்ஸ்க்கு மிக அருகாமையில் அமைந்திருக்கின்றது. வெகு காலங்களுக்கு முன்பாக பலவிதமான தொழில் வியாபாரம் முதலியவற்றின் அடிப்படையில் இங்கு வந்து குடியேறிய இந்து மக்கள் இந்த சிவாலயத்தை தம்முடைய ஆன்மீக தேவைகளுக்காக உருவாக்கியி்ருக்கின்றார்கள். மேலும் இந்த நாட்டில் இருக்கின்ற ஒரே சிவாலயமும் இதுவே தான். இந்த ஆலயத்திற்கு அருகிலேயே பிரசித்தி பெற்ற பிரின்சஸ் மரீனா மருத்துவமனை மற்றும் புகழ்மிக்க கபரோன் சன் என்னும் ஹோட்டலும் அமைந்திருக்கின்றன. ஆலயத்தின் முகப்பிலேயே ஓம் என்னும் அமைப்பு மிகப் பெரிய அளவில் இந்து மதச் சின்னமாக நிறுவப்பட்டுள்ளது. கபரோனில் அமையப்பட்டுள்ள ஒரே இந்து ஆலயம் என்பதால் இதனை யாரும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

ஆலய நுழைவிலேயே நவக்கிரகங்களுக்கான சன்னதி அமைந்திருக்கின்றது. அதை அடுத்து சிவனுக்கான சன்னதி ஒரு பெரிய லிங்கத்துடன் அமைந்துள்ளது. சிவனின் சன்னதியை சுற்றிலும் பரிவார தெய்வங்களாக கணேசர், சுப்பிரமணியர் மற்றும் பார்வதி தேவி ஆகியோர் அமைந்திருக்கின்றார்கள். ஆலயத்தின் சுவற்றை ஒட்டி சிவபெருமான் சோமாஸ்கந்த வடிவத்தில் தன்னுடைய துணை பார்வதி தேவியுடனும் மக்களாகிய பாலகணபதியுடனும் பாலசுப்பிரமணியத்துடனும் காட்சி அளிக்கின்றார். சிவன் சன்னதிக்கு எதிர் புறத்தில் நந்தி தேவர் வீற்றியிருக்கின்றார். ஆலயத்தின் உட்புறத்தில் ஒரு பெரிய கூடம் அமையப் பெற்றுள்ளது. அங்குள்ள ஒரு சிறிய மேடையின் மீது ஸ்ரீராமர், சீதா, லட்சுமணர் மற்றும் ஆனுமார் ஆகியோரின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்கும் ஒரு சிவன் சிலை உள்ளது. 

கரபோனின் சிவா ஆலயத்தில், மகா சிவராத்திரி, ஸ்ரீராம நவமி, தசரா விழா, தீபாவளி விழா ஆகியவை வெகுச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலய வளாகமானது காலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை தொடர்ந்து திறந்திருக்கின்றது. பூஜைகள் செய்யப்படும் போது, இங்கு அமைந்துள்ள அனைத்து தெய்வங்களுக்கும் தீபராதனைகள் செய்யப்படுகின்றன. 

- அபிதா மணாளன்