பிரமிட் தியானம் - விசாலம்

பிரமிட் தியானம் - விசாலம்

ஒரு மனிதனின் மனம் எவ்வாறு செயல்படுகிறதோ அதே போல அவன் வாழ்க்கையும் அமைகிறது. மனம் குழம்பிய நிலையில் சோர்வாக, மந்தமாக இருக்குமேயானால் அவன் வாழ்வும் குழம்பித்தான் போகிறது. தெளிவான மனம் தெளிந்த கருத்தை அள்ளித் தருகிறது.

அமைதியான மனதை அடைய என்ன வழி? 

"தியானம்" தான். தியானம் ஒன்று மட்டுமே நம் மனதைப் பண்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இப்போது "விடக்கா" என்றச் சொல்லைப் பற்றிச் சொல்கிறேன். பாலி மொழியில் "டக்கா" என்றால் தர்க்கம் எனப்படும். " விடக்கா" என்றால் மனிதனின் அலைபாயும் மனதைக் குறிக்கும். அன்றாட வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள் திரும்பத் திரும்ப நினைவில் வந்து நம்மை மூழ்க வைக்கும். இந்த நிலையை விடக்கா என்று சொல்லலாம். இந்த நிலை நமக்குள் இருக்கும் நமக்குள் இருக்கும் சக்தியை உணரவிடாமல் செய்கிறது. "பிரமிட் தியானம்" இந்தச் சக்தியைக் கொடுக்கிறது. இதை "ஆனாபானா சதி "என்ற பெயரில் அழைக்கின்றனர். இதை ஒழுங்காகச் செய்தால் இந்த "விடக்கா "என்ற பலதரப்பட்ட எண்ண ஓட்டங்களிலிருந்து விடுபடலாம். மனம் சலனமற்ற நிலையை அடைகிறது.

ஆனாபானாசதி, பாலி மொழியில் "ஆனா" என்றால் உள்ளே இழுக்கும் மூச்சு. "அபானா" என்றால் வெளியே விடும் முச்சு. "சதி" என்றால் உடன் இருத்தல். அதாவது உள்மூச்சு வெளிமூச்சுடன் நாம் உடன் இருக்க வேண்டும். அப்படியே ஒன்ற வேண்டும். அதையே உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். இயற்கையாக சுவாசித்தலைக் கவனிக்க வேண்டும். இந்த தியானம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

இதைச் செய்யும் முறை :

வசதியான விதத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொள்ளுங்கள். எல்லா உறுப்புக்களையும் தளர்த்திக் கொள்ளுங்கள். மனதால் எல்லா உறுப்புக்களும் தளர்ந்து விட்டதை உணருங்கள். பின் தியானம் ஆரம்பம்.

மூச்சு உள்ளே, வெளியே செல்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வந்து போகலாம். அது தானாகவே வந்து போய், பின் அடங்கி விடும். அதைக் கட்டுப்படுத்தாதீர்கள். எண்ணங்களின் மேல் இருக்கும் கவனிப்பை விடுத்து சுவாசத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.

நம் மூக்கு தான் பிரமிட் என்று எண்ண வேண்டும். கொஞ்ச நேரத்தில் மன அழுத்தம் குறைந்து மனம் மலர்ந்து விரிவதைப் பார்க்கலாம். இதைச் செய்வதால் பிராணசக்தி நம் உடலில் பெருகுகிறது. மனம் தெளிவு பெறுகிறது. உணர்ச்சிப் பெருக்கில் நல்ல மாற்றம் உண்டாவது நமக்குத் தெரிகிறது. ஒரு சாந்த நிலை ஏற்படுகிறது. ஆன்மா ஊக்கப்படுகிறது. இந்தத் தியானம் ஆரம்பத்தில் பத்து நிமிடங்கள் செய்யலாம். பின் நன்கு பயிற்சி ஆனபின், 60 நிமிடம் வரை செய்யலாம்.

எகிப்து தேசத்தின் பிரமிட்கள் சுமார் 5000 வருடங்கள் பழமையானவை. இறந்த உடல்கள் இங்கு கெடாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். . பிரமிட்டின் கீழே தூங்குபவர்களுக்கு ஹைபர்டென்சன், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் மறைகின்றன.

விஞ்ஞானி லியால் வாட்சன் சொல்கிறார், "சிறிது நேரம் இதன் கீழ் அமர்ந்து மௌனமாகக் கண்களை மூடினாலும் கூட அது பலனைக் கொடுத்து விடுகிறது. மன அழுத்தம் மிகப்பெருமளவில் குறைந்து விடுகிறது"

பிரமிட் வடிவ டப்பாவில் நகைகள் அப்படியே புதுப் பொலிவுடன் இருக்கின்றன. சிறிது நீரை இதனுள் வைத்துப் பின் முகம் கழுவ, முக சுருக்கம் மறைகிறது. முக லோஷன் போல் உதவுகிறது. காய்கறிகள் பிரமிட்டில் வைக்க அப்படியே வாடாமல் இருக்கின்றன, உணவுப் பொருட்களும் கெடுவதில்லை. தவிர, மருந்துகளும் பிரமிட் டப்பாவில் வைக்க கூடுதல் நன்மை அளிக்கின்றனவாம்.

தலைவலிக்கு பிரமிட் போன்று அட்டையில் வடிவம் அமைத்து தலையில் தொப்பி போல் வைத்துக் கொள்ள, தலைவலி மறைகிறது. சிலர் வீடுகளிலும் இந்த மாதிரி வடிவம் அமைத்துக் கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டுக் கோயில்களில் கோபுரங்களைக் காணலாம். அதே போல் எல்லாக் கேரளக் கோயில்களும் பிரமிட் வடிவத்தில் அமைந்தவையே.

தமிழ் நாட்டில் கோயம்பத்தூரில் வடவள்ளி என்னும் இடத்தில் பெரிய பிரமிட் கட்டிடம் உள்ளது. இதனுள் அமர்ந்து பலர் தியானம் செய்கிறார்கள். இதில் மூன்று மாடிகள் உள்ளன. மூன்றும் பிரமிட் வடிவம் தான். இந்தத் தியானம் செய்யும் முறை மிக எளிது என்பதால் எல்லோரும் இதைச் செய்ய முடியும். இத்தனை உபயோகம் தரும் இதை நாம் வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ளலாமே!

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!