நலங்கள் பெருக ராகு கால பூஜை!

நலங்கள் பெருக ராகு கால பூஜை!

எந்த செயலையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கினால், அந்தச் செயல்கள் இனிதே நடந்து நற்பலனக்ள விளையும் என்பது நம்பிக்கை சித்த யோகம், அமிர்த யோகம், மங்களங்கள் தரும் வெள்ளிக்கிழமை, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று நல்ல நேரங்களைப் புகழ்வார்கள். ஆனால், ராகு காலத்தை நினைத்தால் மிகுந்த அச்சம் கொள்வர். உண்மையில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளுக்கும் பரிகார்ஙகளுக்கும் உண்டாகும் பலன்களுக்கு எல்லையே இல்லை.

 
ராகு ஒரு ராசியில் ஒன்றரை வருடங்கள் தங்குவார். இதே போல் ஒவ்வொரு நாளிலும் ஒன்றரை மணி நேரம் ராக காலமாகக் கூறப்படுகிறது. ராகு காலம் அமிர்த காலம் என்றும் சொல்லப்படுகிறது. அமிர்தம் அருந்தியவர்களுக்கு எப்படி பூரண ஆயுள் உண்டாகுமோ, அதுபோல் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளுக்குப் புண்ணியம் பெருகும். ராகு பூஜையை திருமணத் தடைக்குரிய பூஜையாகப் பார்க்காமல் மற்ற துன்பங்களை நீக்கும் பூஜையாகவும் செய்யலாம்.
 
ராகு கால அஷ்டமி பூஜை
 
இந்தப் பூஜையைச் செய்வதால் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து சுகங்களையும் பெறலாம். வளர்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் பூஜையை ஆரம்பித்து, தொடர்ந்து ஒன்பது அல்லது பதினாறு அஷ்டமிகள் செய்ய வேண்டும். முடிந்த அளவு ஏதேனும் நீர் நிலைகளில் குளித்துவிட்டு, தீர்த்தம் எடுத்து வந்து, அதனை பூஜையறையில் வைத்து வணங்கி, ராகு காலம் முடிந்தவுடன் அந்த தீர்த்தத்தை வீட்டில் உள்ளோர் மேலும், வீடு முழுக்கவும் தெளிக்கவும். தேங்காய், வெற்றிலைப் பாக்கு, அவல், பொரி, புளிசாதம், தயிர்சாதம் போன்ற ஏதேனும் கலவை சாதம், கண்டால் ஆகியவற்றில் உங்களால் முடிந்ததை பூஜையில் சமர்ப்பித்து வணங்கலாம். இப்பூஜையின் மூலம் இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சுகங்களும் எவ்விதத் தடங்கலுமின்றிக் கிடைக்கும்.
 
செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜை
 
செவ்வாய்க்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் இப்பூஜையைச் செய்ய வேண்டும். திருமணத் தடை மட்டுமின்றி, வறுமையைத் தீர்க்கவும் இந்தப் பூஜையைச் செய்யலாம். செவ்வாய் தசையில் ராகு புக்தி நடப்பவர்கள், ராகு தசை நடப்பவர்கள், ராகு எட்டாம் இடத்தில் இருந்து தசை நடப்பவர்கள், வெகு கஷ்டம் அனுபவிப்பவர்கள் எல்லாரும் இந்தப் பூஜையைச் செய்யலாம்.
 
விரதமிருந்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பூஜை முடிந்த பின்பே உணவு உண்ண வேண்டும் துர்க்கை சந்நிதியில் எலுமிச்சை விளக்கில் என் எண்ணெய், பசு நெய், இலுப்பை எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் விளக்கு ஏற்றவும். தயிர்சாதம், எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை முதலிய ஏதாவது ஒன்றை நிவேதனம் செய்யலாம். சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பது நலம். துர்க்கைக்கு எலுமிச்சை மாலை சாற்றுவதும் நலம் தரும். துர்க்கைகக்கு மஞ்சள் நிறப் பூக்கள் பூஜைக்கு ஏற்றது. துர்க்கை சம்பந்தமான துதிகளைப் பாராயணம் செய்யலாம். பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷமோ மாங்கல்ய தோஷமோ இருப்பின், இப்பூஜையைச் செய்துவர கணவரின் ஆயுள் விருத்தியாகும். புத்திர தோஷம் உள்ளவர்களும் இப்பூஜையைச் செய்யலாம். ஆண்கள் தொழிலில் கடன் தொல்லைகள் இருப்பின் இப்பூஜையைச் செய்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவர்.
 
வெள்ளிக்கிழமை ராக கால பூஜை
 
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் இந்தப் பூஜையைச் செய்ய வேண்டும். நிறைய செல்வம், பெயர், புகழ், கணவன் - மனைவி ஒற்றுமை, நினைத்த காரியத்தில் வெற்றி, குழந்தைப் பேறு தாமதத்தை நீக்குதல் போன்ற நன்மைகளை இந்த பூஜை பெற்றுத் தரும். மேலும் சுக்கிரன் வக்ரமாக இருப்போர், திருமணத் தடை உடையவர்கள் இப்பூஜையை பதினாறு வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். ஜாதகரீதியாக மாங்கல்ய பலம் குறைந்தவர்கள் ராகுவும் சுக்கிரனும் சந்திக்கும் இந்நேரத்தில் பூஜை செய்வது உத்தமம். அதனால் மாங்கல்ய பலம் கூடும்.
 
திருமணத் தடை உடையவர்கள் தேன், பால், பழம் ஆகிய மூன்றும் கலந்த திரிமதுரத்தை துர்க்கைக்கு நிவேதனமாகப் படைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, வெள்ளை மொச்சை, சுண்டல் வெண் பொங்கல், பால் பாயசம் ஆகிய அனைத்தையுமோ அல்லது முடிந்த பொருட்களையோ நிவேதனம் செய்து எல்லாருக்கும் கொடுத்துவிட்டு பின் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். வாசனை மஞ்சள் பொடி, பசு மஞ்சள், வெற்றிலைப் பாக்கு, பூ, குங்குமம் ஆகிய மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்து சுமங்கலிகளுக்கு வழங்குதல் நன்று லலிதா சகஸ்ரநாமப் பாராயணமும் நன்று.
 
ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை
 
ராகுவுக்கு வாலில் அமிர்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் நேரத்துக்கு முன்பாக வரும் ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டு, எலுமிச்சை விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. தம் அமுதமான வாலால் நல்ல பலன்களை ராகு கொடுப்பாராம்.
 
மேலும் ராகு காயத்ரியை மூன்று அல்லது ஒன்பது அல்லது 27 முறை கால அவகாசத்துக்குத் தக்கவாறு உச்சரிக்கலாம்.
 
உங்கள் ஜாதகத்தில் சூரியன், ராகு சேர்ந்திருந்தால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரைப் பூஜிக்கலாம்.
 
சந்திரன், ராகு சேர்ந்திருந்தால் திங்கட்கிழமை ராகு காலத்தில் கருமாரி அம்மனைப் பூஜிக்கலாம்.
 
செவ்வாய், ராகு சேர்ந்திருந்தால் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையைப் பூஜிக்கவும்.
 
புதன், ராகு சேர்ந்திருந்தால் புதன்கிழமை ராகு காலத்தில் வராஹமூர்த்தியை வணங்கவும்.
 
குரு, ராகு சேர்ந்திருந்தால் வியாழக்கிழமை ராகு நேரத்தில் ருத்திரனைப் பூஜிக்கவும்.
 
சுக்கிரன், ராகு சேர்ந்திருந்தால் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காமாட்சியை வணங்கவும்.
 
சனி, ராகு சேர்ந்திருந்தால் சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவரை வணங்கவும்.
 
- ஆர்.மகாலட்சுமி