திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா!

14 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்கள், உற்சாகத்தில் எழுப்பிய அரோகரா கோஷம் மதுரையே குலுங்கியது.
 
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக, மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஜூலை 14) காலை குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 
அதிகாலை 5:25 மணிக்கு யாகசாலையில் இருந்து, 96 வகையான மூலிகைகள் திரவியங்கள் அடங்கிய புனித நீர், 400 வெள்ளிக் குடங்கள், 100 பித்தளை செம்புகள் கோபுரங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு புறப்பாடு நடைபெற்றது. அங்கு, 125 அடி உயரமுள்ள ராஜகோபுரம், சத்யகிரீஸ்வரர், கற்பக விநாயகர், கோவர்த்தன அம்பிகை அம்பாள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகா..முருகா என அரோகரா கரகோஷம் எழுப்பினர்.
 
பின்னர், குடமுழுக்கு விழாவில் ராஜகோபுரத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. யாகசாலை பூஜையில் ஈடுபடும் 200 சிவாச்சாரியார்கள் மூலம் சுப்ரமணிய சுவாமிக்கு 25 குண்டங்களும், சத்யகிரீஸ்வரருக்கு 9 குண்டங்களும், கோவர்த்தன அம்பிகைக்கு 9, கற்பக விநாயகருக்கு 5, துர்க்கை அம்மனுக்கு 5, ராஜகோபுரத்திற்கு 5, பரிவார தெய்வங்களுக்கு 17 குண்டங்கள் சேர்த்து மொத்தம் 75 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
 
பூஜைகளை கோயில் ஸ்தானிக பட்டர்களான சுவாமிநாதன், ராஜா, சந்திரசேகர், சொக்கு சுப்பிரமணியம், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில் 200 சிவாச்சாரியார்களும், 70 ஓதுவார்களும், 30 நாதஸ்வர கலைஞர்களும், 20 பேர் குருவேத பாராயணத்திலும் ஈடுபட்டனர்.
 
கோயிலில் வள்ளி தேவசேனா மண்டபம் முன்பு அலங்கரிக்கப்பட்ட யாகசாலை பகுதியில் மங்கள இசை முழக்கத்துடன் பிரசன்ன அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, யாகசாலை பூஜைக்காக சூரியனிடமிருந்து அக்னி எடுக்கும் நிகழ்ச்சியும், யாகசாலை நிர்மாண பூஜைகளும் நடைபெற்றன. கோயிலின் தற்காலிக மூலஸ்தானத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, மகாலட்சுமி உள்ளிட்ட சுவாமிகள் காசி கங்கை காவிரி உள்ளிட்ட ஏழு புனித நீர் நிரப்பப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் சுவாமிகளிடமிருந்து பட்டு நூல் கொண்டு இறக்கம் செய்யப்பட்டன.
 
யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், முளைப்பாரி இடுதல், கங்கணம் கட்டுதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, முதற்கால யாகசாலை பூஜை, இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, காலை 5:25 மணிக்கு மேல் 6;10 மணிக்குள் குடமுழுக்கு திரளான மக்கள் அலைக்கு இடையே கோலாகலமாக நடைபெற்றது.
 
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குடமுழுக்கு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில், அவர்களுக்கான குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் நல்ல திட்டமிடலுடன் செய்யப்பட்டிருந்தன. அசம்பாவிதங்களை தவிர்ப்பதர்காக, 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.