ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - கும்பம்
தன் செயலை தானே முடிவு செய்து வழி நடத்தும் கும்ப ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதனும். விரையாதிபதியுமாகிய சனி பகவான் தன ஸ்தானத்தில் அமர்ந்தும், தன ஸ்தனானாதிபதியும், லாபாதிபதியுமான குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்தும் ராசியை பார்வை இடுவதும் நீங்கள் எடுத்த காரியம் ஜெயிக்கவும், சொன்னபடி நடக்கவும் சனி பகவான், குரு நன்மைகளை வாரி வழங்குவார்கள். இதுவரை பட்ட பல கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.
தொடர்ந்து ஏழரை சனி கடந்த காலத்தில் பல்வேறு துன்பங்களை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த ஆண்டு புத்துணர்வும், புது பொலிவும் பெறுவீர்கள். பாத சனியாக வந்தாலும் தனாதிபதி வீட்டில் அமர்வது தனாதிபதி பார்வை பெறுவதும் உங்களின் கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த சச்சரவு ஓரளவு சமாதானமாக அமையும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த குழப்பம் தீர்வாகும். உறவினர்களின் திடீர் பகை சில காலம் சமாதானமின்றி இருந்தாலும் போக போக சரியாகும். யாரை எது பேசினாலும் சற்று கவனமுடன் இருப்பது நலன். வாக்கு சனி என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சொந்த உறவுகளுக்குள் சுபகாரியங்கள் நடக்கும். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கு மேலும் உயரும்.
தனாதிபதியும் லாபாதிபதியுமான குரு பகவான் 26-05-2026 முதல் ஆறாமிடத்திற்கு பெயர்ச்சி ஆவது உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது உங்கள் தொழில் முன்னேற்றத்தையும், ஒப்பந்த அடிப்படையில் தொழில் மேன்மையும் பெறுவீர்கள். விரையஸ்தானத்தை பார்ப்பதால் தேவையற்ற செலவுகள் குறையும் வெளிநாட்டு தொடர்புகள் ஓரளவு நல்ல பலனை தரும். திட்டமிட்ட செயல்பாடுகள் சரியாக இயங்க துவங்கும். வங்கி மூலம் கடன் பெற்று தொழிலை வளபடுத்திக் கொள்வீர்கள். தங்க நகை வாங்கும் வாய்ப்பு சிலருக்கு அமையும். ஆசிரியர் பணியில் இருப்பவருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு பெறுவீர்கள். தொலை தொடர்பு துறையினருக்கு புதிய சலுகைகள் கிடைக்க பெறுவீர்கள். நல்லவர்களிடம் நட்பு பெற்று அதன் மூலம் பல அனுபவங்களை அடைவீர்கள். குடும்ப பாரத்தை இறக்கி வைத்தது போல உணர்ச்சியை பெறுவீர்கள்.
13-11-2026 முதல் ராகு / கேது பெயர்ச்சியாகி ராகு விரையத்திலும் கேது ஆறாமிடத்திலும் அமர்வது வெளிநாடு செல்லும் வாய்ப்பு வேலை தேடிக் கொண்டிருப்பவருக்கு அமையும். ஆறாமிடத்தில் குருவோடு கேது இணைவு பெறுவது உடல்நலனிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். ராகு அலைச்சலையும், வெகு தூர பயணத்தையும் அடிக்கடி தந்து வருவார். எவ்வளவு கடன் பட்டாலும் விரைவில் அடையும் படி வாழ்க்கை சூழ்நிலைகள் அமையும். சிறு தொழில் செய்பவருக்கு எதிர்பாராத நஷ்டம் உண்டாகும். கருத்து வேறுபாடு கொண்ட கணவன் - மனைவி மீண்டும் இணையும் வாய்ப்புகள் அமையும். இந்த ஆண்டு பணபுழக்கம் மிக நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
3, 6, 8.
பரிகாரங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மிளகு 27 அதில் போட்டு செவ்வரளி பூ மாலை இட்டு வேண்டிக் கொள்ள எல்லா காரியமும் தடையின்றி நடக்கும்.
















