குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - மகரம்

பொதுநல.நோக்கோடு செயல்பட்டு விளங்கும் மகர ராசி வாசகர்களே!
இதுவரை உங்களின் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருந்த குரு இனிவரும் 11-05-2025 முதல் ஆறாமிடத்தில் அமர்ந்து தனஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் தடைபட்ட பல காரியங்கள் சிறப்பாக இயங்க கூடிய சூழ்நிலை அமையும்.
முக்கிய காரியங்களில் கவனம் செலுத்தி உங்களில் ஒவ்வொரு செயலையும் சிறப்பாக செய்து வருவீர்கள். ஏற்கனவே ராசிநாதன் ராகுவுடன் தனஸ்தானத்தில் இருப்பதும் குருவின் பார்வை இருவருக்கும் பெறுவது உங்களின் தொழிலில் சிறந்து விளங்குவதுடன் செய்யும் உத்தியோகத்தில் உயர்பதவி பெறுவதும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். பண தட்டுபாடு நீங்கி பணபுழக்கம் அதிகரிக்கும் எதிர்பாராத தனவரவு உங்களை மகிழ செய்யும்.
தொழில் ஸ்தானத்தை குரு பார்வை இடுவதால் இதுவரை நிரந்தர தொழிலின்றி இருந்தவர்களுக்கு விரைவில் தொழில் வளர்ச்சியும் நல்ல தொழிலும் அமையும். ஆடம்பர பொருட்கள் விற்பனையானர்கள் கூடுதல் ஆதாயம் பெறுவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வுகள் கிடைக்கும். உயர்நிலையை அடையும் வாய்ப்பு அமையும்.
விரைய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் செலவுகள் குறைத்து வளம் பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் இனி வெற்றி பாதையில் சிறக்கும் வழிகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள்.
உறவுகளால் மதிக்காமல் இருந்த நிலை இனி மாறி நல்ல உறவுகளை புதுப்பித்து கொண்டு வளம் பெறுவீர்கள். எடுத்த காரியம் இனி ஜெயமாகும். பொருளாதார நிலை மேம்படும்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு கடலை மிட்டாய் வைத்து நெய் தீபமேற்றி வழிபாடு செய்து வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் சிறப்பாக அமையும்.