செசல்ஸின் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம்

செசல்ஸின் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம்

ஆப்ரிக்கா நாடுகளில் மிகவும் அழகான தொரு தீவாக அமைந்திருப்பது செசல்ஸ் தீவாகும். கடலுக்கு நடுவில் உயரமானதொரு இடத்தில் அமைந்து இயற்கை எழிலோடும் பசுமையோடும் இருப்பதாகும் இந்த தீவு. இது பலவிதமான பறவைகளுக்கு பெயர் பெற்ற இடமாகும். ஆரம்பத்தில் பல ஆண்டு காலமாக இங்கு மக்கள் வசிக்காததால், இன்றும் கூட இதன் மொத்த ஜனத்தொகை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருந்து வருகிறது. மிகச் சிறந்த சுற்றுலா மையமாக விளங்கிடும் இந்த தீவு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வருடம் முழுவதும் ஈர்த்து வருகின்றது. 

 
பொதுவாக வெளிநாட்டில் வாழுகின்ற இந்து சமயத்தை தழுவிய மக்கள் தங்களுடைய மத பழக்கவழக்கங்களையும் பண்பாட்டு கலாச்சார முறைகளையும் பேணி பாதுகாக்க விரும்புவார்கள். இதற்காக அவர்கள் ஒன்றிணைந்து செயல்படவும் விரும்புவார்கள். உலகின் எந்த பகுதியில் வசித்து வந்தாலும் தங்களுக்கென ஒரு வழிபாட்டு தலத்தையும் கலாச்சார மையத்தையும் அமைத்துக் கொள்ளவே அவர்கள் விரும்புவார்கள். அங்ஙனமே செசல்ஸ் தீவில் வசித்து வந்த இந்து சமய மக்கள், செசல்ஸ் இந்து கோவில் சங்கம் என்ற ஒரு அமைப்பை 1984-ம் ஆண்டு நிறுவி அதனை பதிவும் செய்து கொண்டார்கள். இதன் மூலமாக குன்சி தெருவில் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதன் மேல்தளம் ஒன்றில் தெய்வ வழிபாட்டு வைபவங்களை மேற்கொண்டார்கள். எல்லோருடைய பெருமுயற்சியாலும் சங்க அங்கத்தினர்களின் தளராத ஆக்கபூர்வமான ஈடுபாட்டினாலும் செசல்ஸ் தீவில் 1992-ம் ஆண்டில் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் பிரதான வழிபாட்டு தெய்வமாக விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ஆலயத்தின் மதச்சடங்குகள் இந்து ஆகம முறைப்படி நான்கு கால பூஜைகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் மாலை யிலும் அபிசேகங்களும் ஆராதனைகளும், விசேட பூஜைகளும் பாரம்பரிய இசையுடன் செய்யப்படுகின்றது.
 
இந்து வழிபாட்டு முறைகளின் படி ஒரு ஆலயம் கட்டப்பட்டு 12 ஆண்டுகளுக்குள் முதல் கும்பாபிசேகம் நடத்தப்பட வேண்டும் என்பது நியதியாகும். முதல் கும்பாபிசேகத்தை முன்னிட்டு ஆலயத்திற்கு முன்பாக கொடி கம்பமும் ஆலய கோபுரத்திற்கு மேல் ஏழு தங்க கலசங்களும் நிறுவப்பட்டன. கும்பாபிசேக வேலைகள் 2005-ம் ஆண்டு துவங்கப்பட்டு ராஜகோபுர வேலையும் முடிக்கப்பட்டு 2008-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெகு சிறப்பாக கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. கும்பாபிசேக விழாவில் செசல்ஸ் தீவிவை சேர்ந்த அதிகாரிகளும் பிறநாட்டு முக்கியஸ்தர்களும் அதிகளவில் பங்கு பற்றினார்கள். இந்த ஆலயத்தில் பிரதான தெய்வத்தை தவிர முருகன், நடராஜர், துர்கா, ஸ்ரீனிவாச பெருமாள், பைரவர் மற்றும் சந்திரசேகரேஸ்வரர் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஐந்து நிலை கொண்ட ராஜகோ புரத்துடன் கூடிய இந்த நவசக்தி விநாயகர் ஆலயம் செசல்ஸின் தலைநகரமான விக்டோரியாவில் அமையப் பெற்றுள்ளது. இது வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல் தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பான நடவடிக்கைகளுக்கும் உரிய இடமாக இருக்கின்றது. இவ்விதமான கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் இந்த நாட்டின் அமைதியையும் நல்லெண்ணத்தையும் உறுதிப்படுத்தும் விதத்தில் அமைகின்றன. இங்குள்ள இந்து குழந்தைகளுக்கு இந்த ஆலயத்தில் தன்னிகரற்ற இந்து மத தத்துவங்கள் புகட்டப்படுகின்றன. நட்புடைமையும், மத நல்லிணக்கமும் இந்த ஆலய கோட்பாடுகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. 
 
செசல்ஸின் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயத்தில் 1993-ம் ஆண்டு முதல் தைப்பூச காவடி திருவிழா மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்த ஆலயத்தின் சார்பாக ஒவ்வொரு தைப்பூச தினத்தன்றும் காவடித் திருவிழா நாட்டின் ஒரு மிகப் பெரிய திருவிழாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்திருவிழாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, செசல்ஸ் அரசாங்கம் 1998-ம் ஆண்டு முதல் அரசு அறிவிக்கப்பட்ட விடுப்பாக தைப்பூச திருநாளை அனுசரிக்கின்றது. மிகச்சிறிய மக்கள் ஜனத்தொகையை கொண்ட செசல்ஸ் நாடு இதர நாட்டு மக்களையும் பேரன்புடன் வரவேற்று அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கின்றது. தைப்பூச காவடி திருநாளுக்கு இதர நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றார்கள். அன்று வழிபாட்டிற்காக வருகின்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்படுகின்றது. 
 
தைப்பூச காவடி விழாவிற்கு அடுத்தபடியாக, இந்த ஆலயத்தில் தேர் திருவிழாவும், ஆலயத்தின் வருடாந்திர விழாவும் விளக்கு விழாவும், திருக்கல்யாணமும் ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி வெகுச் சிறப்பாக கொண்டாடப்படு கின்றன. இந்த ஆலயம் எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடை கொடுத்து ஆதரிப்பதிலும் முன்னிலை வகுத்து வருகின்றது. 
 
தேசிய பேரிடர் சமயங்களிலும் இயற்கை சீற்றங்களான சுனாமி, பூகம்பம் முதலானவற்றின் போதும் ஆலய நிர்வாக குழு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்பட்ட எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கின்றது. மேலும் ஆலயத்தின் நிர்வாக குழு ஒவ்வொரு ஆண்டும் தெப்பத்திருவிழாவையும் மிகச் சிறப்பாக நடத்துகின்றது. செசல்ஸின் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம் ஒரு வழிபாட்டு தலமாகவும் இந்துக்களுக்கு பல விதத்திலும் கை கொடுக்கும் கலாச்சாரமையமாகவும் இருந்து வருகின்றது என்றால் அது மிகையாகாது.
 
S.ஆகாஷ்