ஆத்மா வேறுபடுவதில்லை!

ஆத்மா வேறுபடுவதில்லை!

ஆத்மா, ஜீவன் என்பன, மனிதன், விலங்கு, தேவதை என்ற பல்வேறு நிலைகளில் வேறுபட்டிருக்கும் தாரதம்மிய நிலை, அந்தந்த ஆத்மா இயங்கும் பண்புகட்கு ஏற்பட அமைகிறது. ஆத்மாவின் இயல்பு இவற்றுள் வேறுபடுவதில்லை. அவற்றில் செயல்பாட்டில் தனித்தன்மையில் தான் தாரதம்மியம்.

ஆன்மாவில் ஆளுமைப் பண்புகள்
 
மனித உடல் இறந்தவுடன், தன் பூத உடலில் அமைந்த பௌதிக ஆளுமைப் பண்புகளும் அதன் உறுப்புக்களும் அழிந்து விடுகின்றன. ஞானம், அனுபவம், நற்செயல்கள் ஆகியவற்றால் ஆன ஆளுமைப் பண்புகள் ஆத்மாவின் கூறாக நிரந்தரமாகப் பரிணமிக்கின்றன. அமர உலக ஆத்மாக்களுடன் உரையாடுகையில் இந்த ஆளுமைப் பண்புகளின் வெளிப்பாட்டை வெளிப்படையாகப் பார்க்கலாம். வரலாற்றறிஞர் ஆர்னால்டு டாயென்பி அவர்கள் மனித உடல் இறந்தவுடன் அதன் ஆளுமைப் பண்புகள் அழிந்து விடுகின்றன என ஒரு நூலில் எழுதியுள்ளார்கள். எனது அனுபவம் அவ்வாறில்லை.
 
ஆத்மா மென்மையடைதல்
 
பிறவிக்குப் பின் பிறவியாகப் பிறவிகள் தொடர, மரணதுக்குப் பின் மரணம் அதற்குக் காரணமாகக் காரியமாகிய மறுபிறப்பு நிகழ்கையில், அந்த ஆத்மா பிறவி தோறும் மிகவும் அதிகரித்த மென்மை உடையதாகின்றது.
 
ஆத்மாவின் உள் ஆடை
 
“எக்டோபிளாசம்” என்று கூறப்படும், ஒளி நுட்பம் அதிர்ந்து கொண்டே இருக்கும், மிக நுண்ணிய பொருட்களைக் கொண்டுள்ளது. இந்த ஒளி நுட்பம். ஆத்மாவின் உயிரின் உள்ளாடை போன்றது இது. இந்த மானிட உடல் ஆத்மாவின் மேலாடை. இந்த ஒளி நுட்பம், ஆவி போன்று இருக்கும், ஒரு உருவமற்ற பொருள். இது பல்வேறு உருவங்களைக் கொள்ளும் மேகத்தைப் போன்றது” என்று, பிரஞ்சு வானநூல் வல்லுநர், காமிலி பிளம்மேரியன் என்பார், தனது “அறியாதது” என்ற நூலில் குறிப்பிடுகிறார். இது இந்தியராகிய நாம் கூறும் சூட்சும் சரீர நிலை எனலாம்.
 
சூத்திரப் பிணைப்பு
 
ஆத்மாவின் வாழ்வு, புதிதாக வருவதோ. ஆதாரமற்றதோ அன்று கடந்த காலம் நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களின் சூத்திரங்களால் இணைக்கப்பட்டது ஆத்மா. அதனோடு மட்டுமன்றி பிறப்பு - மரணம் - மறுபிறப்பு என்ற சங்கிலித் தொடர் அமைப்பு கொண்டது. வினை வீட என்னும் நல்வினை தீவினைகள் சரி செய்யப்பட்ட ஜீவன் முக்த நிலையில் ஆன்மா பரமாத்மாவில் கலக்கின்றது.
 
உலக அணைக்கட்டு
 
உத்தம ஆத்மாக்கள், மேற்கூறப்பட்டவை, உலகமாகிய சாகரம் (ஏரி) அழியாமல் இருப்பதற்கான அணைக்கட்டு எனப்படும். இவ்வுயர் ஆத்மாக்கள், ஆத்ம இயல்புகளுடன் ஒளிர்வதால், உடல் உபாதைகளாகிய மூப்பு, சாக்காடு. சோகம், பர்வம், புண்ணியம் முதலியவற்றால் தொடப்படாமல், பாவத்தைக் கடந்த நிலையாகிய பிரம்ம லோக நாட்டம் - தொடர்பு உடையன. கதிரவனைக் கண்ட பனி போல உத்தம ஆத்மாக்களிடமிருந்த பாவங்கள் உதிர்ந்து விடுகின்றன.
 
ஆத்மா என்ற அணைக்கட்டின் நிலையை முழுவதும் உணர்ந்து அதன் கரையை அடைந்தவன், அறியாமை என்னும் குருடு நீங்கி, பாசாபாசத் தாக்குதலினின்று விடுபட்டு, வருத்தங்கள் நீங்கியவனாகின்றான். இவன் சுழுத்தி என்னும் உறக்கத்தில் (தன்வாழ்நாளிலேயே) பிரம்மலோகப் பயணம் செய்து, அவண் தோன்றி மறையாத பரஞ்சோதியின் திவ்யப் பேரொளியைத் தரிசிக்கிறான்.
 
ஒவ்வொரு மனிதனும் அவஸ்தைகள் என்றும் கூறப்படும் நனவு (ஜாக்கிரதை) கனவு ஸ்வப்பனம்) சுழுத்தி (உறக்கம்), துரியம் (பேருறக்கம்), துரியாதீதம் (உயிப்படக்கம்) என்ற ஐந்து நிலைகளை அனுபவிக்கும் வாய்ப்புண்டு. இது மேநிலை எய்தியவர்கட்கே சாலும் ஆழ்ந்த உறக்கம் என்னும் துரியநிலையில் பிரம்மத்துடன் ஒன்றியவன் அத்துரிய நிலையில் துன்பம் நீங்கியவனாக இருப்பான். ஆழ்ந்த உறக்கத்தினின்று எழுந்தவுடன், உயர்நிலை நீங்கி, துன்பத் தொடர்பு மீண்டும் வந்து விடும்.  பிராம்மீஸ்திதி என்னும் சீவப் பிரம்ம ஐக்கிய நிலை ஏற்படும் போது. துன்பமே இல்லாத நிலை பெறுவான்.
 
- வை. தட்சிணாமூர்த்தி