அமெரிக்காவின் குவாய்த்தீவில் சிவாலயம்!
ஆன்மீக சரணாலயம் என்று வர்ணிக்கப்படுகின்ற குவாய் ஆதீனமானது மிகவும் தொன்மை வாய்ந்ததும் பழைமை புகழ் மிக்கதுமாகும். குவாய் ஆதீனத்தை குவாய் இந்து மடாலயம் என்றும் அழைக்கின்றார்கள். இதில் அமைந்துள்ள ஆலயமானது தென்னிந்திய பாரம்பரியத்துடன் அமைக்கப்பட்டதாகும். குவாய் தீவு பசிபிக் பெருங்கடலில் மையத்தில் அமைந்திருப்பது சிறப்பாகும்.
இந்த தீவினை கார்டன ஐலெண்ட் என்றும் அழைக்கின்றார்கள். இந்து ஆலயங்கள் ஆகம விதிகளின் படி அமையப் பெற்றுள்ள இந்த மடாலயத்தின் குரு மகா சன்னிதானமாக இருப்பவர் சத்குரு போதிநாத் வேலன்சாமி ஆவார். மிக சக்தி வாய்ந்த ஆன்மீக அதிர்வுகளை வெளிப்படுத்துகின்ற பாரம்பரியமிக்க சிவாலயம் அமைந்த ஆன்மீக சரணாலயத்தை உருவாக்கியவர் சத்குரு சிவசுப்பிரமணிய சுவாமி ஆவார். இவர் 1970-ம் ஆண்டில் மடலாயத்தை நிறுவினார். இந்த மடாலயமானது பின் வந்த போதிநாதர்களுக்கும் சுவாமிகளுக்கும் இல்லமாக அமைந்தது. இந்த மடாலயத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இறைச் சிந்தனையுடைய, இந்த மத ஆச்சாரங்களில் நம்பிக்கையுடைய பலரும் இடம் பெற்றிருக்கின்றார்கள். இது ஒரு சைவ சித்தாந்த்த மையமாகவும் இறையியல் அமைப்பாகவும் இருந்து கொண்டு சைவ சித்தாந்த நெறிகளை பரப்பி வருகின்றது. இமாலயன் அகாடமி, இந்துயிசம் டுடே என்கின்ற பத்திரிக்கை மற்றும் இந்து ஹெரிட்டேஜ் என்டோன்மெண்ட் ஆகியவையும் இங்கிருந்தே நடத்தப்படுகின்றன.
சுமார் 363 ஏக்கர் பரப்பளவில் கடவுள் ஆலயம் மற்றும் சன்மார்க்க இறைவன் ஆலயம் ஆகிய இரண்டு பிரம்மாண்டமான ஆலயங்கள் சோழர் காலத்து பாணியில் முழுவதும் பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, அனுமன், சண்முகம், நர்மத லிங்கம், முருகனுடைய சக்தி வேல், கணேசர், நந்தி மற்றும் குரு பரம்பரை ஆகிய அனைத்தும் அழகிய பளிங்கு கற்களால் அற்புத வேலைபாடுகளுடன் உருவாக்க்பபட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கடவுள் ஆலயம் என்று சொல்லப்படுகின்ற புகழ்மிக்க இந்த ஆலயத்தில் நடராஜர் பிரதான தெய்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு காலையிலும் 09.00 மணிக்கு முக்கிய பூஜை நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாளும் இங்கு வழிபட வரும் பக்தர்கள் காலை 09.00 மணி முதல் மதியம் வரை வரவேற்கப்படுகின்றார்கள். கடந்த சுமார் 40 ஆண்டுகளாக இந்து யாத்திரீகர்கள் இந்த சிவாலயத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த மடாலயத்திற்கு உட்பட்ட எல்லையில் வாழ்ந்து வருகின்ற சன்னியாசிகள் அவர்களுடைய வாழ்க்கையை இறைவழிபாடு, வழிபாடு சம்பந்தமான பணிகள், யாத்திரீகர்களை கவனித்தல் ஆகிய கடமைகளுக்காகவே அர்ப்பணித்தவர்களாக காணப்படுகின்றார்கள். இவர்கள் அனுதினமும் காலை முதல் மாலை வரை வழிபாடுகளுடன் ராஜயோக சாதனைகளையும் ஆன்மீக பணிகளையும் மேற்கொள்கின்றார்கள். காலை வழிபாடானது இந்த சிவாலயத்தில் கணேசர், முருகன் மற்றும் இறைவன் சிவபெருமான் ஆகியோருக்கு செய்யப்படுகின்ற தீபாரதனைகளுடன் தொடங்குகின்றன. இதனை தொடர்ந்து குருவினால் நடத்தப்படுகின்ற யோக தியான பயிற்சிகளிலும் பக்தர்கள் பங்கு பெறுகின்றார்கள். இவ்வாறு செய்யப்படுகின்ற கூட்டு ஆராதனைகளும், கூட்டு யோக பயிற்சி நடைமுறைகளும் மடலாயத்தின் ஆன்மீக நடைமுறைகளுக்கான நங்கூரமாக செயல்படுகின்றது என்றால் அது மிகையாகாது. இங்குள்ள சன்னியாச பெருமக்கள் தம்முடைய பணிகளை ஐந்து விதமாக பிரித்து கொண்டுள்ளார்கள். ஆலயம் மற்றும் மடப்பள்ளி, உறுப்பினர்கள் மற்றும் கற்பித்தல், நிர்வாகம் மற்றும் நிதி, மடாலய எல்லை மற்றும் பராமரிப்பு மற்றும் பிரசுரங்கள் மற்றும் ஊடகங்கள் என்பனவாகும் அவை.
இந்த மடாலயத்தில் அனுசரிக்கப்படுகின்ற மத பாரம்பரியமானது நந்திநாத சம்பிரதாயம் என்று அழைக்கப்படுகின்றது. இது சைவ சித்தாந்த்தின் ஆணி வேராக கருதப்படுகின்றது. இதன் தொடர்பான இறை நடவடிக்கைகள் அனைத்தும் “கைலாச பரம்பரா” என்ற இரண்டு வார்த்தைகளில் அடக்கப்படுகின்றது. இங்கு போற்றப்படும் சைவசித்தாந்த தத்துவமானது அத்வைத சைவ சித்தாந்தம் அல்லது அத்வைத ஐஸ்வரவதா என்றும் சொல்லப்படுகின்றது. இந்த சிவாலயத்தில் அமைந்துள்ள நந்தியின் சிலையானது 16 டன் எடையுள்ள ஒரே கருங்கல்லால் உருவாக்கப்பட்டதாகும். இங்கு பரந்து விரிந்து ஆலமரத்து அடியில் முருகப் பெருமான் ஆறு முகங்களுடனும் பன்னிரண்டு கைகளுடனும் காட்சி தருகின்றார். கடவுள் ஆலயம் என்கின்ற நடராஜர் ஆலயம் 1973-ம் ஆண்டில் முழுமையாக முடிக்கப்பட்டது. இங்கு பக்தர்களும் சன்னியாசிகளும் ஒவ்வொரு நாள் காலையிலும் கூட்டு பிரார்த்தனைகளும் கூட்டு தியானங்களையும் மேற்கொள்கின்றார்கள். குவாய் தீவில் ஆகம விதிகளின்படி பூரணமாய் அமைக்கப்பட்ட சிவாலயமாகும் இது.
குவாய் தீவில் அமையப் பெற்றுள்ள கடவுள் இந்து ஆலயமானது இலங்கை பாரம்பரிய பாணியில் அமையப் பெற்றுள்ளது என்றும் சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றார்கள். இந்த ஆலயமானது குவாய் மடாலயத்தின் மையமாக திகழ்கின்றது. ஒரு நாளின் 24 மணி நேரத்திலும், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒரு குழுவாக தொடர்ந்து வழிபாடு, தியானம், மந்திரம் சொல்லுதல், சமஸ்கிருதம் பயிற்சியளித்தல் ஆகியவற்றை தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கின்றார்கள். இந்த சாதனையானது, இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ள 1973-ம் ஆண்டு முதல் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக இங்கு வருகின்ற பக்தர்கள் மற்றும் வருகையாளர்களின் வாழ்க்கையில் இந்த தெய்வீக அதிர்வுகளானது பெரும் ஆற்றல்களை தந்து கொண்டிருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. பிரதான கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கமானது ஸ்படிக வடிவில் அமையப் பெற்றுள்ளது.
குவாய் தீவில் அமையப் பெற்றுள்ள சிவாலயம் சைவசித்தாந்த நெறிகளை இந்து மதத்தை பின்பற்றி சிவ வழிபாட்டில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் எல்லாவிதமான வழிகாட்டிகளையும் நெறிமுறைகளையும், இறைவழிபாட்டிற்கான வசதிகளையும் செய்து கொடுக்கின்ற தொன்மை வாய்ந்த சிவாலயமாகவும் இந்து சமுதாயத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகவும் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.
- அபிதா மணாளன்