வாழ்வில் வளம் சேர்க்கும் வரலட்சுமி் விரதம்!

மனிதர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான எல்லாவித செல்வங்களையும் வளங்களையும் தந்து வாழ வைப்பது லட்சுமி தேவியே ஆவாள். செல்வ வளத்திற்கு அதிபதியான திருமகளை வாழ்வில் உயர்ந்திட எண்ணியிருக்கும் எல்லோரும் பூஜிக்க வேண்டியது அவசியமே. புராண காலங்கள் தொட்டே உலகின் பல பகுதிகளிலும் திருமகள் வழிபாடு இருந்து வந்துள்ளது. இந்தியாவின் வடப்பகுதிகளில் தீபாவளி திருநாளன்று லட்சுமி் பூஜையை நடத்துகின்றார்கள். ஆடி மாத கடைசியில் அல்லது ஆவணி முதல் வாரத்தில் பௌர்ணமிக்கு முன்பு வரக்கூடிய வெள்ளிக்கிழமையன்று லட்சுமியை முறையாய் வழிபடுகின்ற பூஜைக்கு வரலட்சுமி் பூஜை என்று பெயர். அன்றைய நாளில் இல்லத்தரசிகள் வீடுகளை சுத்தம் செய்து, அலங்கரித்து, கலசம் வைத்து லட்சுமி திதி சொல்லி அனைத்து வளங்களும் எல்லோரும் பெற்றிடல் வேண்டும் என்று மனதில் நினைந்து பூஜை மேற்கொள்வார்கள். வரலட்சுமி் விரதத்தை அதற்குண்டான முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் வாழ்க்கைக்கு தேவையான சகல சௌபாக்கியங்களையும் அடைவார்கள் என பத்ம புராணம் தெரிவிக்கின்றது.
குடும்ப உறுப்பினர்களும் கணவனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் செல்வ வளத்தோடும் இருந்திடவும், தம்முடைய தாலி பாக்கியம் நிலைத்திடவும் இல்லத்தில் செல்வம் செழித்திடவும் வரலட்சுமி விரதத்தை பெரும்பாலான பெண்கள் தவறாமல் அனுஷ்டிக்கின்றார்கள். இந்த விரதம் மங்கலகரமான ஒன்றாகும். விரதத்தை கடைப்பிடிக்கும் அனைவருக்கும் மன நிம்மதியையும் இம்மையிலும் மறுமையிலும் நன்மையை தந்திடும் இனிய விரதம் ஆகும் இது.