திருநல்லூரில் லிங்கத்திருமேனி நிறம் மாறுகின்ற அதிசயம்

திருநல்லூரில் லிங்கத்திருமேனி நிறம் மாறுகின்ற அதிசயம்

கயிலை மலையில் இறைவனுக்குத் திருமணம், தேவகணங்கள், முனிவர்கள் எனப் பெருந்திரள் சூழ்ந்ததால் வடதிசை பாரம் தாங்காமல் தாழ்ந்துவிட சரிசெய்வதற்காக இறைவன், அகத்திய முனிவரைத் தென் திசைக்கு அனுப்புகிறார். அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க திருமணக் கோலத்தில் அவருக்குப் பிரத்தியேகமாகக் காட்சியளிப்பதாகவும் திருவாய் மொழிந்தருளுகிறார்.

அகத்தியர், நல்லூருக்கு வருகிறார். சிவலிங்கத் திருமேனியின் ஆவுடையில் இன்னொரு பாணம் அமைத்து பூஜித்து வருகிறார். இறைவன் உமா தேவியரோடு தமது திருமணத் திருக்கோலக் காட்சியை அகத்தியருக்குக் காட்டி அருள்புரிகிறார். நல்லூர் ஆலயத்தின் கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்குப் பின்புறம் சுதை வடிவில் அமர்ந்த கோலத்தில் சிவபெருமானும் உமாதேவியும் இருக்க, நின்ற கோலத்தில் திருமாலும், பிரமனும் காட்சி தருகிறார்கள்.

திருநாவுக்கரசர், “வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே” என்று பாடி இத்தலத்தின் பெருமையை விளக்கியுள்ளார். நீண்ட காலம் திருமணம் ஆகாதிருக்கும் பெண்களும் ஆண்களும் இத்தலத்திற்கு வந்து மலர் மாலை அணிவித்து, இறைவனை வழிபட்டு, ஒரு மாலையை வாங்கி அணிந்து சென்றால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

பெரும்பாலும் சிவலிங்கத் திருமேனியின் ஆவுடையார் வட்டமாகத்தான் இருக்கும். நல்லூர் திருத்தலத்தில் கல்யாண சுந்தரேஸ்வரரின் ஆவுடை தெற்கு வடக்கில் நீண்டு செவ்வக வடிவில் அமைந்திருப்பதும் ஒரே ஆவுடையாரில் இரண்டு சிவலிங்க பாணங்கள் இருப்பதும் தனிச் சிறப்பாகும்.

சிவலிங்கத் திருமேனி கல்லால் உருவாக்கப்பட்டது அல்ல. உலோகமும் இல்லை. மரமும் இல்லை. இன்ன பொருளால் உருவாக்கப்பட்டது என்று தெரியாத நிலையில் தானே தோன்றிய சுயம்பு மூர்த்தி. இறைவனுக்குப் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் ஆறு நாழிகைக்கு ஒரு முறை சிவலிங்கத் திருமேனியின் நிறம் மாறித் தெரிவது இன்றளவும் நடைபெறும் அதிசயம்!

காலை 6 மணி முதல் 8.24 மணி வரை தாமிர நிறமாகவும், காலை 8.25 முதல் 10.40 மணி வரை இளஞ்சிவப்பு நிறமாகவும், 10.45 முதல் 1.12 மணி வரை உருக்கிய தங்கம் போலவும் மதியம் 1.13 முதல் 3.38 ஆறு மணி வரை இன்ன நிறம் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாமல் பல நிறங்களோடும் நிறம்மாறி பஞ்சவர்ணமாகக் காட்சி தருகிறார். நாங்கள் கோயிலுக்குச் சென்ற நேரம் இரவு ஏழு மணி. பாணத்தின் மேல் பாகம் தங்கமாய் ஜொலிக்க, அடிப்பாகம் தாமிர வண்ணத்தில் இருந்தது. “நிறங்கள் ஓர் ஐந்துடையாய்” என்று திருவாசகத்திலும் “வண்ண ஐந்துடையாய் போற்றி” என திருநல்லூர் புராணத்திலும் விளக்கப்பட்டிருக்கிறது.

நல்லூர் திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் - கும்பகோணம் பெருவழிப் பாதையில் பாபநாசத்திற்குக் கிழக்கில், வாழைப்பழக்கடை என்ற பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருக்கிறது. சுந்தரப் பெருமாள் கோயில் என்ற  புகையிரத நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கி, மீ, தொலை வில் உள்ளது. இத்தலத்தைச் சுற்றி ஆவூர், அவளிநல்லூர், ஊத்துக்காடு, திருக்கருகாவூர், மெலட்டூர், திருப்பாலைத்துறை, திருவலஞ்சுழி, சுவாமிமலை, பட்டீசரம், திருசக்திமுற்றம் போன்ற திருத்தலங்கள் உள்ளன.

பாம்புகளுக்கு அரசனாகிய ஆதிசேஷனின் மகள் சுமதி, மனதிற்கினிய நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று நல்லூர் ஈசனை வழிபட்டு வந்தாள். இறைவன் அருளால் சோணாட்டு இளவரசனான அரித்துவசன், நல்லூர் வந்து, சுமதியைக் கண்டு மையலுற்று அவளைத் திருமணம் செய்து கொண்டான் என்பது தலபுராணச் செய்தி. இத்தலத்து இறைவனை வழிபட, நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

நரசிம்ம அவதாரம் எடுக்கும் முன் திருமால் இத்தலத்தில் தவமிருந்து, இரணியனைக் கொல்வதற்காக, நரசிம்ம வடிவத்தைப் பெற்றார் என்பதும் ஒரு செய்தி, ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரரின் கருவறையின் விமானத்தின் உச்சியில் மேற்கு முகமாக வீற்றிருக்கும் நரசிம்மப் பெருமானின் திருஉருவத்தைப் பார்க்கலாம்.

ஒளிப் பிழம்பாக நின்ற இறைவனின் திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறி சாபம் பெற்ற பிரமன், தன் தீவினையைப் பொக்கிக் கொள்வதற்காக இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம் என்ற பொய்கையை உருவாக்கி, நீராடி, பெருமானைப் பூசித்துப் பேறு பெற்றதாக வரலாறு. ஒரு மாசி மக நன்னாளன்று பாண்டவர்களின் அன்னையான குந்திதேவி இத்தலத்திற்கு வந்துசேர நேர்ந்தது. மாசி மகத்தன்று புண்ணிய நதிகள் அல்லது கடலில் நீராடுவது சிறந்த புண்ணியம் என்று நாரத முனிவர் அவரிடம் கூறினார். குந்தி தேவி இறைவனைப் பிரார்த்தித்தார். இறைவன், குந்திதேவிக்காக பிரம்ம தீர்த்தத்தில் உப்பு, கரும்பு, தேன், நெய், தயிர், பால் சுத்தநீர் ஆகிய ஏழு கடல்களையும் வருமாறு செய்ய, குந்திதேவி மகிழ்ச்சியுடன் நீராடிப் பேறு பெற்றாள். அன்று முதல் பிரம்ம தீர்த்தம் “சப்த சாகரம்” என்று பெயர் பெற்றது. நல்லூர்ப் பெருமானைப் பூசிக்கும் கோலத்தில் குந்தி தேவியின் சிலை வடிவம் கோயில் உள்ளது. இந்த ஏழு கடல்களைக் குறிக்கும் விதத்தில் இத்திருக்குளத்தில் ஏழு கிணறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இறைவனை உளமார நினைத்து இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் தீரா, நாள்பட்ட நோயும் தீரும் என்று நம்பப்படுகிறது. திருக்குளத்தின் பன்னிரு துறைகளிலும் நிராடித் திருக்கோயிலைப் பன்னிரு முறை வலம் வந்து, இதுபோல் ஒரு மண்டலம் செய்து ஈசனை வழிபட்டு வந்தால் அனைத்து நோயும் குணமாகும் என்பது ஐதீகம்.

பிரம்மதேவன் இத்திருக்குளத்தில் கீழ்த்திசையில் ரிக் வேதத்தையும், தென் திசையில் யஜுர் வேதத்தையும் மேற்கில் சாம வேதத்தையும், வடக்கில் அதர்வண வேதத்தையும் திருக்குளத்தின் நடுவில் சப்த கோடி மகா மந்திரங்களையும் பதினெண் புராணங்களையும் வைத்துப் புனித மாக்கினான் என்பது வரலாறு. மக நன்னாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் விசேஷம் கும்பகோணம் மகாமகக் குளத்திற்கு இணையானது இந்தத் தீர்த்தம் என்ற பொருளில், “மகம் பிறந்தது நல்லூரில், மகா மகம் பிறந்தது கும்பகோணத்தில்” என்று குறிப்பிடுவார்கள் 

- K. குருமூர்த்தி