சக்தியின் வடிவங்கள்!

சக்தியின் வடிவங்கள்!

 சக்தியை முழுமுதல் கடவுளாகக் கொண்ட சமயம் சாக்தமாகும். இந்துமதம் இறைவனை ஆண்டானாகவும், தந்தையாகவும், தோழனாகவும், பார்ப்பதற்குக் கற்றுத் தருகிறது. இவற்றில் மிகச் சிறந்ததாகச் சொல்லப் படுவது தாய்மகன் பாச உறவுதான்.

அதனால் தான் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பாரிந்து என்று பெற்றுவளர்த்து பாலூட்டும் தாயைவிட ஒருபடி மேலே வைத்து ஈசனைப் பாடுகிறார் மாணிக்கவாசகர். இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடே சக்தி வழிபாடு.
 
நாம் நல்லது செய்தாலும், தீயதுசெய்தாலும் தாய் கண்டிப்பாளே தவிர தண்டிக்க மாட்டாள். கொலைக்குற்றம் செய்த பிள்ளையைக் கூட அவளால் அரவணைத்து அன்புகாட்ட முடியும். தாயின் அன்புக்கு ஒப்பானாது தெய்வத்தின் அன்பு என்பதால் தாயின் வடிவத்தில் தெய்வத்தை வழிபாடு செய்வது பக்தர்களுக்கு மிக எளிதாகக் கைவருகிறது.
 
நன்றே வருகினும் தீதே வருகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்குள்ளதை எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன் அழியாத குணக் 
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே
 
என்று பாடுகிறார் அபிராமி பட்டர். தாயைச்சரண் அடைந்து விட்டால் நமக்கு வரப்போகும் நல்வதையும், கெட்டதையும் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தாயின் கையைப் பிடித்துக்கொண்டு தெருவில் செல்லும் குழந்தை எதிரே கார் வருகிறதா? காளை வருகிறதா? என்று பயந்த பயந்து பார்த்து நடக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதை எல்லாம் பார்த்து குழந்தையைப் பத்திரமாக அழைத்துச் செல்வது தாயின் பொறுப்பாகிவிடுகிறது. 
 
இந்த ஒரு பிறவியில் மட்டுமே தாயாகி இருக்கும் மானுடப் பெண்ணுக்கே தன் குழந்தை மீது இத்தனை அக்கறையும். பொறுப்பும், பாசமும் இருக்கிறது என்றால் பல பிறவிகளாக நம்மீது பாசம் காட்டி, நம்மை வழிநடத்தும் தெய்வமாகித் திகழும் பராசக்திக்கு எத்தனை பொறுப்பு இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
 
நமது வாழ்க்கைக்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் அவளையே பணிந்து கிடக்க வேண்டும் என்பதைத்தான், எனக்கு உள்ளதை எல்லாம் அன்றே உனக்கு என்று அளித்து விட்டேன். ஆகவே கொடுப்பதற்கோ, மற்றவர்களால் எடுத்துக் கொள்வதற்கோ என்னிடம் எதுவுமே இல்லை என்கிறார் பட்டர்.
 
அன்னையைச் சரண் அடைந்து விட்டால் அடைய முடியாதது எதுவுமே இல்லை. ஏன் என்றால் அவளே எல்லாமாக இருக்கிறாள். பல்வேறு தத்துவங்களை விளக்குவதற்கும், பலவகையான தொழில்களைச் செய்வதற்கும் வெவ்வேறு வகையான வடிவங்களை எடுத்துக் கொள்கிறாள்.
 
படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய முத்தொழில்களைச் செய்யும் போது அவள் பிரம்மாணி, வைஷ்ணவி, ருத்ராணி என்ற பெயர்களைப் பெறுகிறாள். சிவத்திற்கு இணையாக இருந்து துஷ்டர்களைச் சம்ஹாரம் செய்யும் போது காளி என்றும் துர்க்கை என்றும் போற்றப்படுகிறாள்.
 
கல்விக்கு அதிபதியாகும் போது அவளே சரஸ்வதி. செல்வத்துக்கு அதிபதியாகும் போது அவளே லட்சுமி வீரத்திற்கு அதிதேவதையாகும் போது அவளே துர்க்கை என்று வழிபாடு செய்யப்படுகிறாள்.
 
குப்தர் காலத்தில் சக்திக்கு உரிய கோயில்கள் இருந்தன. சந்திரகுப்தனுடைய நாணயத்தில் சிங்கத்தின்மீது பெண் தெய்வம் எழுந்தருளி இருக்கும் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. குப்த மன்னர்கள் தான் முதன் முதலாக பெண் தெய்வங்களுக்குச் சிலைகள் வடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியதாக வரலாற்று ஆசிரியர்கள் குறித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழ்நாட்டிலும் பெண் தெய்வங்களுக்கு சிலைகளும், சிலைகளைப் பிரதிஷ்டை செய்ய கோயில்களும், மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டன.
 
காளிதாச மகாகவி காளியைப் போற்றி பல பாடல்கள் பாடி இருக்கிறான். அவன் ஆட்டு இடையனாக இருந்து காளியின் அருளால் கவிபாடும் திறமை பெற்றதாக செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிவபுராணத்தில் உமாதேவி தன்னை பிரம்மமாகவும், பிரகாசப் பேரொளியாகவும், பரந்த இந்த பேருலகமாகவும், அதற்குரிய காரணமாகவும், அதன் வழி வந்த காரியமாகவும், எல்லாமாகப் பரிணமித்து இருப்பதைக் குறிப்பிடுகிறது.
 
மார்க்கண்டேய புராணம் சக்தியின் பெருமையைப் பேசுகிறது.
 
பல்லவர் காலத்தில் சக்தி வழிபாடு சைவத்துடன் இணைந்து விட்டது.
 
“அம்மையே அப்பா ஒப்பிலா மணியே” போன்ற பாடல்களும்.
 
“மாதர்ப்பிறைக்கண்ணியானை”.
 
“தோடுடைய செவியன்” போன்றவைகளும் இதற்குரிய சான்றுகள்.
 
பல்லவர் காலத்திற்குப் பிறகும் கூட சக்தி வழிபாடு சிறப்பு பெற்றிருந்தது. சோழர் காலத்தில் தேவிக்குரிய தலங்கள் அமைக்கப்பட்டன. சோழர்கள் ராஜராஜேஸ்வரியை வணங்கினர். பாண்டியர், நாயக்கர் ஆகியோர் மீனாட்சி அம்மையை வழிபட்டனர். நாயக்கர் காலத்தில் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முழுமை பெற்றது.
 
கி.பி.17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் என்ற நூலை அம்பிகையின் பெருமைகளைப் போற்றும் விதமாக எழுதி இருக்கிறார். 300 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அபிராமி பட்டர் அம்பிகையின் சிறப்புக்களை வல்லமையைப் போற்றி அபிராமி அந்தாதி பாடி இருக்கிறார். அது அம்பிகையை உபாசனை செய்பவர்களுக்குத் தாரக மந்திரமான நூலாகும்.
 
வடநாட்டில் வாழ்ந்த காளிதாசர், இராமகிருஷ்ணர், விவேகானந்தர் ஆகியோர் அம்பாள் உபாசகர்களே, அது போல தென்நாட்டில் வாழ்ந்த குமரகுருபரர், அபிராமி பட்டர் ஆகியோரும் அம்பிகையை உபாசித்து அவளுடைய அருளுக்குப் பாத்திரமானவர்களே. 
 
தாய் எனப்படும் மூலப்பிரகிருதியில் இருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்துள்ளது. தேசங்கள் தோறும் மாகாணங்கள் தோறும் தேவியின் வழிபாடு பல மாறுதல்களைக் கொண்டு இன்றும் சாசுவதமாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு தேசத்திற்கும், மொழிக்கும் ஏற்றவாறு தேவியின் திருநாமங்களும், வழிபடும் முறைகளும் மாறுகின்றன. இருந்தாலும் ஒரே பரம்பொருளையே அனைத்து மக்களும் பக்தி செலுத்தி வணங்குகின்றனர். அவரவர்கள் தங்கள் தேசத்திற்கும், தேவைக்கும் ஏற்ப தேவியைச் சாந்த சொரூபியாகவும், ஆக்ரோஷ சக்தியாகவும், கருணையான தாய் வடிவத்திலும், பயங்கரமான காளிதேவியின் வடிவத்திலும் வணங்கிப் பயன்பெறுவதை காண முடிகிறது.
 
- வேணு சீனிவாசன்