சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - துலாம்

சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - துலாம்

பலனை எதிர்பாராமல் கடமையை மட்டும் செய்யும் துலாம் ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்திற்கும், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் …உங்களின் ராசியில் உச்சம் பெறும் சனி, இனி வரும் 06-03-2026 முதல் சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து அட்டம ஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தையும் மூன்றாமிடத்தையும் பார்வை இடுவது உங்களின் ராசிக்கு நற்பலன்களை அருள்கிறார். கிடைக்க வேண்டிய சகல பலன்களையும் பெறுவீர்கள். எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள். சரியான நேரத்தில் காரியத்தை செய்து அதற்கு உரிய பலன்களை பெறுவீர்கள்.
 
உங்களின் ராசிக்கு யோகாதிபதியான சனி பகவான் சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து ரண ருண சத்ருகளை எதிர்க்கும் வல்லமையை பெறுவீர்கள். இதுவரை உங்களிடம் இருந்து கொண்டு மறைமுகமாக உங்களை எதிர்த்து செயல்பட்ட விடயங்களை அறிந்து கொள்வீர்கள். அவரிடமிருந்து மீண்டு வெளியே வருவீர்கள். நீண்ட நாள் நோய் உங்களிடமிருந்து விடைபெற்று செல்லும். கடன் அடையும் விதமாக சில வழிகளில் உதவி கிடைக்க பெற்று கடனிலிருந்து மீள்வீர்கள். 
 
இனி உங்களுக்கு உதவி செய்ய புதிய வழிகள் கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பை கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நால நட்பு மீண்டும் தொடர்பு ஏற்பட்டு நண்பரிடம் உங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள். சுமைகளை இறக்கி வைக்க வாய்ப்பு அமையும். கலைதுறையினருக்கு தங்களின் கலை பயணத்தை இனி சிறப்பாக செய்து முடிப்பார்கள். உடல் நலனில் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். எதை செய்தாலும் உங்களின் நல்ல எண்ணம் அதில் பிரதிபலிக்கும்படி செய்வீர்கள். 
 
உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். ஒரு காரியத்தில் ஈடுபடும் முன் யோசித்து செயல்படுவீர்கள். யோசித்த பின்பு அதனை முழுமையாக முயற்சி செய்து வெற்றி பெறுவீர்கள். யாருக்கு எந்த துன்பமும் ஏற்படுத்தமாட்டீர்கள். குறுகிய கால தொழில்களில் முதலீடு செய்தால்.. நல்லபலனை பெற்று தரும். 
 
அரசியலிலும், பொது வாழ்விலும் சிலருக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றாலும் எதையும் தக்க வைத்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். சரியான வழியில் சென்று வளம் பெற வேண்டுமென்ற எண்ணம் விரைவில் நிறைவேறும். யாருக்கு உதவி செய்தாலும் பிரதி பலன்களை எதிர்பார்க்க மாட்டீர்கள்.
 
பரிகாரங்கள்:
 
சனிக்கிழமை ராகு காலத்தில் (09.00 - 10.30) பைரவர் வழிபாடு செய்து மிளகு 27 கருப்பு துணியில் முடிந்து மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் சகல காரியமும் வெற்றியை தரும். சனி காயத்ரியை நாளாந்தம் 27 முறை சொல்லி வர நன்மை உண்டாகும்.