சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - ரிஷபம்

சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - ரிஷபம்

நிறைவான வாழ்க்கை வேண்டுமென்று நினைக்கும் ரிஷப ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு பாக்கியாதிபதியும், தொழில் ஸ்தானாதிபதியாகி சனி பகவான் உங்களின் லாபஸ்தானத்தில் அமர்ந்து ராசியையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் அட்டம ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் வளமான வாழ்வுக்கு நற்பலனை பெற்று தருவார்.
 
உங்களின் ராசிக்கு யோகாதிபதியான சனி பகவான் ராசியை பார்வை இடுவது மிக சிறப்பு. மேலும் லாபஸ்தானத்தில் அமர்வது மிகமிக சிறப்பு. சனி பதினொன்றில் அமர்ந்து கொடுக்கும் பலனை யாராலும் தடுக்க முடியாது. கொண்ட கொள்கையில் வெற்றியும்… எடுத்த காரியத்தில் வளர்ச்சியையும்.. கொடுத்த வாக்குறுதிகளை செய்து முடிக்கும் நல்ல வாழ்க்கை சூழ்நிலையும்.. அமையும். சொத்து சார்ந்த வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். பொது காரியங்களில் உங்களின் எண்ணம் போல் அமையும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வீர்கள்.
 
இரண்டரை ஆண்டு கால நற்பலன்களை பல்வேறு வழிகளில் அனுபவிப்பீர்கள். பிறந்த ஜாதகத்தில் சனி ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். எதை செய்தாலும் அதில் பல வழிகளால் பலன் அடைவீர்கள். கலைதுறையினருக்கு நல்ல வாய்ப்புகளும், பாராட்டும், பரிசுகளும் கிடைக்க பெறுவீர்கள். பிரிந்த உறவுகள் வந்து இணைவார்கள். 
 
சுபகாரியம் கைகூடும். சிலருக்கு சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிட்டும். சுயதொழிலில் மேன்மையும், புனித யாத்திரை சென்றுவர வாய்ப்பும் அமையும். குறுகிய கால தொழில் வாய்ப்புகளில் வளர்ச்சியை காண்பீர்கள். அரசியலிலும், பொது நல செயலிலும் உங்களின் செல்வாக்கு உயரும். தேர்தலில் வெற்றி வாகை சூடுவீர்கள். பண வரவுகள் சீராக இருக்கும்.
 
சரியான பாதையை தெரிவு செய்து மேன்மை அடைவீர்கள். மாணவர்களில் கல்வி திறன் அதிகரிக்கும். சிலருக்கு பணி செய்து கொண்டு கல்வி கற்கும் வாய்ப்பை பெறுவீர்கள். ஆன்மீகவாதிகளுக்கு தங்களின் சூழ்நிலைகளை மாற்றிக் கொண்டு வளம் பெற தேவையான வசதிகளை பெறுவீர்கள்.
 
பரிகாரங்கள்:
 
ஞாயிறு ராகு காலத்தில் நவகிரக வழிபாடு பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியையும் பொருளாதார வளமும் பெறுவீர்கள்.