சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - மேஷம்
ஆற்றலும், செயல் திறனும் கொண்டு விளங்கும் மேஷ ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு பத்து பதினொன்றுக்குரிய சனி பகவான் வரும் 06-03-2026 முதல் ஏழரை சனியின் முதல் சுற்றாக... விரைய சனியாக... அமர்கிறார். உங்களின் ராசியில் நீசம் பெறும் சனி பகவான் விரையத்தில் அமர்வது நல்லது என்றாலும் உங்களின் முன்னேற்றம் தொடர்ந்து வளம் பெற வழிபாடுகளால் சரி செய்து கொள்வீர்கள்.
இந்த ஆண்டு துவங்கும் சனி பெயர்ச்சி இரண்டரை ஆண்டு காலம் விரைய சனியாக அமர்ந்து தன ஸ்தானத்தையும், சத்ரு ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுவது உங்களின் சகல காரியமும் தடைபட்டு புதிய தொழில் முடிவுகளை தடைபடுத்தும் நிலையும் உண்டு பண்ணுவார். சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்பது போல சனி பிடித்தால் யார் சரி செய்வார் என்பதில் உங்களின் முழுமையான கவனம் இருக்கும். தொழிலை தக்க வைப்பதும். புதிய தொழில் முயற்சியை கைவிடுவதும் நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவருக்கு கவன குறைவு காரணமாக தண்டனை பெற வேண்டி வரும் என்பதால் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது. செய்யும் தொழிலில் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடுகளை செய்வதை தவிர்த்து, இருக்கும் தொழிலை தக்க வைக்க என்ன வழியோ அதை செய்வது தான் நல்லது. பாதுகாப்பு பணியில் இருப்பவருக்கு எதிர்பாராத சூழ்நிலைகளால் கஷ்டம் உண்டாகும்.
கடன் பெறுவதை தவிர்த்து, தன் செல்வாக்குகளை மறந்து, யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்த்தால் நல்லது நடக்கும். எந்த காரியமாக இருந்தாலும் நம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. கடமையை செய் பலன் எதிர்பாராதே இந்த கொள்கையை கடைபிடித்தால் பிற்காலத்தில் நன்மை உண்டாகும்.
உறவினர்களின் பகையை வளர்த்துக் கொள்ளாமல் அமைதியாக சகித்து கொண்டால் பிரச்சனையின்றி இருக்கலாம். பண விடயத்தில் யாருக்கும் பிணையம் இடுவதையும், வாங்கி தருவதையும் தவிர்ப்பது நல்லது.
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் தவறாமல் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு சிவப்பு அரளி பூ மாலை சாற்றி வேண்டிக் கொள்ள நன்மை உண்டாகும்.
















