சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - மீனம்

சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - மீனம்

அன்பும், மனித நேயமும் கொண்டு செயல்பட்டு வரும் மீன ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு லாபஸ்தானாதிபதியும், விரையாதிபதியுமான சனி பகவான் உங்களின் ராசியில் ஜென்ம சனியாக அமர்ந்து முயற்சி ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வை இடுகின்றார். தொழிலில் சற்று வேகத்தையும், முதலீடுகளையும் அதிகபடுத்தி கொள்வீர்கள். மனவலிமையும் மனிதநேயமும் உங்களின் வாழ்க்கையை உயர்ந்த நிலையை அடைய செய்யும். சனி கொடுத்தால் யார் தடுப்பார். உங்களின் சுய ஜாதக பலன்களின் நற்பலன்களை சனி பகவான் உங்களுக்கு முழுமையாக வழங்குவார்.
 
உங்களின் ராசியில் சனி அமர்வது சிறு உடல் உபாதைகளை அடிக்கடி சந்திக்க வேண்டி வரும். ஏழரை சனி காலம் என்பதால் எதிலும் உடல் நலனை கருத்தில் கொண்டு உண்ணும் உணவுகளை கவனித்து பசியாறுவது அவசியமாகும். சர்க்கரை, இதய நோய் உள்வர்கள் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். அடிக்கடி வெளியூர் பயணம் செய்ய வேண்டிவரும். முயற்சி ஸ்தானத்தின் சனி பார்வை இடுவது சொந்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். குரு பார்வை படும் காலம் உங்களுக்கு எதிர்பாராத பணவரவு வரும். சொத்து விற்பனை மூலம், வங்கி கடன் மூலம் பணம் பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நல்ல பலனை பெற்று தரும். வரவுக்கு மீறிய செலவுகளை தவிர்த்து விடுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வட்டத்தை பெருக்கி கொள்வீர்கள்.
 
இன்றைய நவீன காலத்தில் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்தல், கூட்டுத் தொழில் செய்தல். பல துறை தொழில் முதலீடு செய்தலில் ஆர்வம் செலுத்துவீர்கள். சிலருக்கு கண் நோய் வர வரய்ப்பு உண்டாகும் என்பதால் கண்களை கவனிப்பது அவசியம். அரசியலிலும், பொது விடயங்களிலும் ஆர்வம் இல்லை என்றாலும்.. சில நேரம் அவர்களின் சந்திப்பு நீண்ட வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி அமைக்கும். தனியாகவோ கூட்டாகவோ முதலீடு செய்ய வேண்டிவரும். உடல் நலம் குன்றியவருக்கு வைத்திய உதவி செய்தாலும், பசியுடன் இருப்பவருக்கு உணவு வழங்குவதும் உங்களின் கர்மவினை கழிவுகளை நீக்கி கொள்ள வாய்ப்பாக இப்போது அமையும். செய்யும் தொழிலை தெய்வமாக ஆக்கி கொண்டு செயல்படும் நீங்கள் தெய்வ பலத்துடன் சிறப்பாக செயல்படுவீர்கள்.
 
களத்திர ஸ்தானத்தை சனி பார்வை படுவது கணவன் மனைவிக்குள்  சின்ன சச்சரவு வரும், ஆனாலும் அது நீடிக்காது. உறவுகள் உங்களை குறை சொல்வது மனவருத்தத்தை தந்தாலும் உங்களின் வாழ்க்கையை பாதிக்காதபடி அளவோடு தொடர்பு கொள்வது நல்லது. கலைதுறையினருக்கு நல்ல நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்க பெறுவீர்கள். வேலை தேடுபவருக்கு நல்ல வேலையும், சம்பளமும் கிடைக்கும்.
 
பரிகாரங்கள்:
 
சனிக்கிழமை ராகு காலத்தில் (09.00 - 10.30) பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபம் ஐந்து ஏற்றவும். வெள்ளிக்கிழமைகளில் மகாலெட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி தாழம்பூ குங்குமம் அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும். பொருளாதார நிலை உயரும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554