பெண்களுக்கு பாவை நோன்பு!
ஒரு சமயம் திருமாலின் துணைவியான மகாலட்சுமி, பூலோகத்தில் பிறந்து மக்களை நல்வழிப்படுத்தவும், தங்களை வழிபட்டால் இன்மையிலும் மறுமையிலும் நற்பேறுகளை அடையலாம் என்பதை உணர்த்தவும் கூடியதான பிறப்பு ஒன்றினை தமக்கு அருள வேண்டுமென்று திருமாளை வேண்டிக் கேட்டுக் கொண்டாள்.
திருமாலும் அந்த வேண்டுக்கோளை ஏற்றுக் கொண்டு, இன்மைக்கும் மறுமைக்கும் என்ன தேவை என்பதை முன் கூட்டியே பூமியில் உணர்ந்திருக்கும் விஷ்ணு சித்தனாகிய பெரியாழ்வார் மகளாக அவதாரம் செய்ய அருள் புரிந்தார். அங்ஙனமே ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரிய நந்தவனம் அமைத்து அதன் மூலம் கிடைக்கப் பெற்ற மலர்கள் அனைத்தையும் விஷ்ணு வழிபாட்டிற்கே பயன்படுத்தி வந்த விஷ்ணு சித்தரின் நந்தவனத்தில் பச்சிளம் குழந்தையாய் அதிகாலை பொழுதில் அழுதபடியே அவதரித்தாள் திருமகள்.
உலகின் வளங்களுக்கெல்லாம் அதிபதியாகிய திருமகளையே மகளாகப் பெறும் பேற்றினை பெற்ற பெரியாழ்வார், பரந்தாமனை தரிசனம் செய்யாத நாளெல்லாம் பிறவா நாளாக கருதி கைங்கரியங்கள் செய்து வந்தார். இவர் திருமாலின் மீது அளப்பரிய பக்தி கொண்டு பகவத் பக்தியில் தம்மை மறந்து வாழ்ந்தவராவார். நந்தவனத்தில் மலர் கொய்ய வந்த பெரியாழ்வார், தனக்கு திருமகளே குழந்தையாய் வந்து அவதரித்திருப்பதை உணராதவராய், இறைவனே மனமுவந்து அளித்த குழந்தை இது என எண்ணி எடுத்து வந்து கோதை எனப் பெயரிட்டு சீராட்டி வளர்த்து வந்தார். அரங்கனையே ஆளப் பிறந்தவள் என்பதாலோ என்னவோ இவளை எல்லோரும் ஆண்டாள் என்றும் அழைத்து வந்தார்கள். தன் தந்தை தொடுத்து கொடுத்த மாலையை தான் முதலில் அணிந்து அழகு பார்த்த பின்பே இறைவனுக்கு சூட்டியதால் “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்னும் பெயரும் கோதைக்கு உண்டாயிற்று. பெரியாழ்வார் பெருமாளின் 108 திவ்ய சேத்திரங்களின் சரித்திரங்களை தன் மகளாகிய ஆண்டாளுக்கு எடுத்துரைத்த போது, அவள் மனம் திருவரங்கத்தில் உறைகின்ற ஸ்ரீ ரெங்கநாதரின் மீது ஆழ்ந்த பற்றும் காதலும் கொண்டது.
இதை அறிந்த பெரியாழ்வார், மனம் வருத்தமுற்று தன் மகள் ஆண்டாள் நினைத்தது நடக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், மானிடராய் பிறந்த ஒரு பெண் எப்படி இறைவனை மணக்க முடியும் என்று ஆண்டாளிடம் எடுத்துக் கூறினார். ஆனால் ஆண்டாள் எதைப் பற்றியும் கவலை கொள்ளாது தன்னுடைய திருமணக் கனவை ஸ்ரீ ரெங்காநாதரோடு இணைத்தே மகிழ்ந்து கொண்டிருந்தாள். இதன் காரணமாக, ரெங்கன் மீது பக்தியில் உருகி போன ஆண்டாள் பாவை நோன்புதனை மேற்கொண்டு, திருபாவை பாசுரங்களை பாடி இந்த உலகில் கன்னி பெண்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாய் பக்தியில் வெற்றி கண்டு தான் விரும்பிய படியே ரெங்கநாதருடன் இரண்டற கலந்தாள். பக்தியில் நெகிழ்ச்சியோடு பாசுரங்கள் பரந்தாமனைப் பற்றி பாடப்பட்டதால் திருப்பாவை பாசுரங்கள் புனிதம் பெற்றவை ஆயின. இதனை தொடர்ந்து திருமகளின் அவதார நோக்கம் முழுவதும் நிறைவேறப்பெற்றது.
இவ்வுலகில் பெண்கள் பாவை நோன்பு மேற்கொள்வதால் கிடைத்திடும் பலன்களை திருப்பாவை பாசுரங்கள் பக்தி பெருக்குடன் எடுத்துச் சொல்கின்றன. பரந்தாமனின் கருணையையும், பெருமையையும் இந்த உலகிற்கு பக்தி சுவை குன்றாமல் ஆண்டாள் கொடுத்துச் சென்று உள்ளாள் என்பது தான் உண்மை. எனவே பெண்கள் மார்கழி மாதத்தில் மட்டுமாவது திருப்பாவை பாசுரங்களைப் பாடி வாழ்வின் வளங்களை பெற்றிடலாம்.
- ஒத்தக்கடை ராமன்