தவயோக வலிமைகளுக்கு பெயர் பெற்ற விஸ்ரவ மகரிஷி!

தவயோக வலிமைகளுக்கு பெயர் பெற்ற விஸ்ரவ மகரிஷி!

மனித லட்சணங்களுக்கு ஒரு முன் உதாரணமாய் இருந்தது பூமயில் ஏற்பட்ட ஸ்ரீ ராமரின் அவதாரம். மனித குலத்தில் ஆண்களும் பெண்களும் எந்தவிதமான நல்ல ஒழுக்கங்களை தர்மத்தின் தலைவாசலிலே நின்று கொண்டு கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாய் ஸ்ரீ ராமரின் திரு அவதாரம் இருந்தது. ராமரின் அபூர்வ சக்திகளை தமக்கானதாக பயன்படுத்திக் கொண்டு, தான் செய்ய இருக்கும் யாகத்தை காத்திடுவதற்காக ராமரையும் அவருடைய தம்பி இலக்குமணனையும் உடன் அழைத்துச் சென்றார் விஸ்வாமித்திர மகரிஷி.

உதாரண புருஷர்களாய் விளங்கிய ராம லட்சுமணரின் அபூர்வ சக்திகளையும், மன உறுதிப்பாட்டையும் கண்டு வியந்த விஸ்வாமித்திர மகரிஷி அவர்கள் செய்ய வந்த நல்ல காரியத்தைச் செவ்வனே செய்திடல் வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர்களுக்கு பலா அதிபலா ஆகிய மந்திரங்களை போதித்து தாகமும் பசியும் எடுக்காத வண்ணம் செய்தார். விஸ்வாமித்திர மகரிஷி அருளிச் செய்த இந்த அபூர்வ சக்திகளினால் மேலும் வல்லமை பெற்ற சகோதரர்களான ராமலட்சுமணர்கள் மகரிஷியின் எண்ணத்தை நிறைவேற்றி யாகம் செவ்வனே நடைபெற ஆவன செய்தார்கள். பூமியில் மனிதர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு ஒரு சான்றாக தசரத புத்திரர்களான ராமலட்சுமணர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடைய அந்த தீர சரித்திரத்தை ராமாயணம் மூலமாக நாம் படித்து உணர்கின்றோம். 

அதைப் போலவே புராண காலங்களில் வேதங்களையும் தர்ம சாஸ்த்திரங்களையும் நன்கு கற்றுணர்ந்த முனிபுங்கவர்களும் மகரிஷிகளும் மனித குலத்திற்கு பல விதங்களிலும் வழிகாட்டியாக வாழ்ந்தார்கள். இவர்களின் பலர் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல், வீரத்துடனும் விவேகத்துடனும், ஆரோக்கியத்துடனும் மண்ணில் வாழ்வது எங்ஙனம் என்றும் எடுத்து இயம்பினார்கள். ஆகவே மகாமுனிவர்களும் மகரிஷிகளும் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் மத்தியிலான ஒரு அந்தஸ்த்தை வகித்தார்கள். இவர்களின் முக்கியமாக நாரத மகரிஷி, அகத்திய மகரிஷி, வசிஷ்ட மகிரிஷி, விஸ்வாமித்திர மகரிஷி, மார்கண்டேய மகரிஷி, துர்வாச மகரிஷி ஆகியோர் மனித குல நல்வாழ்விற்காக தம்முடைய எல்லாவிதமான தவ வலிமைகளையும் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த மகரிஷிகளில் பெரும்பாலானவர்கள் அஷ்டமா சித்திகளை கற்ற வித்தகர்களாய் வாழ்ந்தார்கள் என்பது புராண வரலாறுகள் நமக்கு உரைக்கின்ற உண்மையாகும். 

இப்படியாக தவ வலிமையும் ஆன்ம பலமும் அதிகம் நிறையப் பெற்றவராக இருந்தவரே விஸ்ரவ மகரிஷி ஆவார். இவருடைய தந்தை புலஸ்திய மகரிஷி என்றும், இவருடைய பாட்டன் உலகைப் படைக்கின்ற பிரம்மா என்றும் பழைமை மிக்க புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. வேத பாடங்கள், தர்மசாஸ்திரங்கள் முதலிய எல்லாவற்றையும் ஐயம்திரிபுர கற்ற விஸ்ரவ மகரிஷி மற்ற மகரிஷிகளால் பெரிதும் மதிக்கவும் புகழவும் பெற்றார். இவருடைய ஆத்ம யோக பலங்களை நேரில் கண்டு அதிசயித்துபோன பரத்வாஜ மகரிஷி அவரின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எனவே விஸ்ரவ மகரிஷியின் நற்குணங்களையும், நற்பண்புகளையும், தவவலிமையும் பாராட்டிப் போற்றும் விதமாக தன்னுடைய மகளான இளவிதா என்பவளை இவருக்கு மணம் முடித்து வைத்தார். 

விஸ்ரவ மகரிஷிக்கும் இளவிதாவுக்கும் மகனாய் பிறந்தவரே செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாய் கருதப்படும் குபேரர். ஆதியில் இலங்காபுரியை ஆண்டவரும் இதே குபேரன் தான் என்று தான் வரலாறுகள் தெரிவிக்கின்றன. தவ வலிமையும் யோக சக்தியும் நிறையப் பெற்றிருந்த விஸ்ரவ மகரிஷியின் பெருமைகளை கேள்வியுற்ற சுமாலி என்ற அசுரனும், அவனுடைய மனைவி தத்தக்கா என்பவளும் அவர்களுடைய சக்தியை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை எண்ணத்தில் மிகச் சிறந்த அரசர்கள் மற்றும் ரிஷிகளுடன் திருமண பந்தங்கள் ஏற்படுத்த விரும்பினார்கள். அங்ஙனமே அவர்கள் சில ஏற்பாடுகளை செய்து தங்களின் மகளான மற்றும் அதிரூபினியான கைகேசி என்பவளை விஸ்ரவ மகரிஷி கண்ணால் காணும் சந்தர்ப்பத்தை உருவாக்கினார்கள். 

பார்த்தவர் போற்றும் பேரழகியான கைகேசியை கண்டவுடன் விரும்பிய விஸ்ரவ மகரிஷி அவளை திருமணம் செய்து கொண்டு அவளை நான்கு குழந்தைகளுக்குத் தாயாகும் பாக்கியத்தை நல்கினார். கைகேசியின் முதல் குழந்தையான ராவணன் தன்னுடைய மூத்த சகோதரனான அதாவது பெரியன்னை இளவிதாவின் மகனான குபேரனை ஆட்சியிலிருந்து விலக்கி விட்டு தானே இலங்கைக்கு அதிபதியானான். இந்த ராவணனே, அழியா புகழ் பெற்ற இலக்கியமான ராமாயணத்தில் தீயவனாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ராவணேஸ்வரன். இவன் ஒரு மிகச் சிறந்த சிவ பக்தன் ஆவான். தன்னுடைய இசையால் சிவபெருமானை கவர்வதற்காக தனியானதொரு ராகத்தை அதாவது சாமகானம் என்னும் ராகத்தை உருவாக்கினான். தன்னுடைய தனிப் பெரும் இசையால் சிவனின் ஆசியை பெற்றவன் ராவனேஸ்வரன். ஆனாலும், விதியின் வசத்தால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தபடி இவனின் கர்ம வினையானது இவனை ராமாயணத்தில் எதிரி பாத்திரத்தில் நிலைப் பெறச் செய்து விட்டது. 

கைகேசியின் மூலமாக விஸ்ரவ மகரிஷிக்கு ராவணனுக்கு அடுத்தபடியாக விபீஷ்ணன் என்னும் மகனும் மற்றும் ஒரு மகனாக கும்பகன்னனும் ஒரே ஒரு மகளான சூர்ப்பனகையும் பிறந்தார்கள். தன்னுடைய மூத்த சகோதரன் குபேரனுக்கு எதிரான ராவணனின் துவேச மனப்பான்மையைக் கண்ட விஸ்ரவ மகரிஷி வெறுப்புற்று கைகேசியை விட்டு பிரிந்து தன்னுடைய முதல் மனைவியான இளவிதாவிடம் சென்று விட்டார். 

விஸ்ரவ மகரிஷி வாழ்ந்த காலக்கட்டத்தில், இவருடைய மிகச் சிறந்த தவவலிமைக்காகவும் யோக சக்திக்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டார். இவர் தம்முடைய அதீத சக்தியினால் எப்போதும் பிறருடன் நல்ல எண்ணங்களையும், உயர்ந்த செயல்களையும் பகிர்ந்து கொள்பவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

- ஒத்தக்கடை ராமன்