பாலகனாய் சிவபக்தியில் சிறப்புற்ற உபமன்ய மகரிஷி!

பாலகனாய் சிவபக்தியில் சிறப்புற்ற உபமன்ய மகரிஷி!

உலகில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் பிறந்து கொண்டேயும் அழிந்து கொண்டேயும் இருக்கின்றன. அவற்றில் பேறு பெற்ற உயிரினமாக என்றென்றும் இருந்து வருவது மனித இனமே. சிந்திக்கவும் செயலாற்றவும் தம்மை படைத்த இறைவனை போற்றவும் கற்றுக் கொண்டுள்ள மனிதன் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் எப்போதும் உயர்ந்தே நிற்கின்றான். இதன் காரணமாகவே அவ்வை மூதாட்டியார் “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்றார். தன்னுடைய ஆறாம் அறிவால் பகுத்துணரும் தன்மையைப் பெற்றுள்ள மனிதன் சாதாரண மனிதனாகவும் அதனினும் மேம்பட்ட ரிஷி புங்கவர்களாகவும் அவரவர் முன்வினை பயன்களின் அடிப்படையில் உதயமாகின்றார்கள். புல்லாய் பூதமாய் பிறப்பதற்கும், கற்றறிந்த மூதறிஞனாய் இருப்பதற்கும் உடன் கொண்டு வந்த கர்மவினையன்றோ துணை நிற்கும் என்று புராணங்கள் அனைத்தும் ஒரே முகமாய் செப்புகின்றன. இத்துணை பெருமைகள் பெற்ற மனித இனத்தில் ஆயிரம் ஆயிரம் ரிஷி புங்கவர்கள் அவதரித்த இந்த பாரத பூமியில் வந்து உதித்தார் உபமன்ய மகரிஷி.

 
உபமன்யு சிறு குழந்தையாய் இருந்த போது, தன்னுடைய அன்னையின் உடன் பிறந்த சகோதரரான தாய் மாமன் வீட்டிற்கு விருந்தாளியாக சென்று சில காலம் தங்கினார்.  அப்போது, அவருடைய தாய் மாமன் வசதி மிக்கவராக இருந்தபடியினால் உபமன்யுவிற்கு அனுதினமும் குடிப்பதற்கு பசும்பால் வழங்கப்பட்டது. பசும்பாலின் ருசியை நன்கு உணர்ந்து விட்ட குழந்தை உபமன்யு பிறகு தன் வீடு திரும்பிய பின்பும் அரிசி மாவும், சர்க்கரையும் கலந்து வழங்கப்பட்ட கரைசலை குடிப்பதற்கு மறுத்து விட்டான். தனக்கு தன் தாய் மாமன் வீட்டில் வழங்கியது போல் பசும்பால் தான் வேண்டுமென அடம் பிடித்து அழுதான். அப்போது அவனுடைய தாய் “நாம் எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள். பசுவினை தனியாய் வளர்த்து அதன் மூலம் பால் அருந்த வழியற்றவர்கள். நாம் இவ்விதத்தில் சிவனின் பேரருள் பெறாதவர்கள், அதனால் தான் நாம் இந்த வறுமைக்கு உட்பட்டு வாழ்கின்றோம், என்று உபமன்யுவிற்கு எடுத்துக் கூறினார். 
 
இதனால் திருப்தி அடையாத உபமன்யு தன் தாயிடம் யாரால் தனக்கு பசும் பால் கிடைக்கும் என மீண்டும் வினவினான். அதற்கு அவனுடைய தாய் “வறுமையின்றி செல்வச் செழிப்பில் வாழ்ந்திட இறைவனின் திருவருள் நிச்சயம் தேவை. அவ்விதம் முதலிலேயே கிடைக்கப்பெறாத பேரருளை அருந்தவத்தாலும் தியாகத்தாலும் மட்டுமே அடைந்திட முடியும்” எனத் தெரிவித்தாள். பூர்வ ஜென்மத்தில் ஒருவர் செய்த புண்ணியங்களின் காரணமாகவே எல்லா நன்மைகளையும் ஒருவர் அடுத்த பிறவியில் பெற முடியும். ஒரு மனிதருக்கு கிடைக்கப் பெற்ற எல்லாவிதமான நன்மைகளுக்கும் இறைவனின் பூரண ஆசீர்வாதமே காரணம் என்றும் மேலும் உபமன்யுவின் தாய் தெரிவித்தாள். தாயின் அறிவுரையால் உபமன்யு தெரிந்து கொண்டது என்னவென்றால், “இந்த உலகம் செம்மையாய் இயங்குவதற்கும், இந்த உலகம் எதனாலும் பாதிக்காமல் இருப்பதற்கும் சிவன் தான் காரணம் என்பதையும், உயர்ந்தவை அனைத்தும் சிவபஞ்சாட்சர மந்திரத்தில் இருந்து தான் உருவாகின்றது” என்பதையும் உணர்ந்து கொண்டான் உபமன்யு. 
 
மேலும் தாயின் அறிவுரைகளும் வறுமைக்கான விளக்கவுரைகளும் உபமன்யுவின் நெஞ்சை தொட்டது. “எனக்கு பசும்பால் தருவதற்கு சிவன் ஒருவரே சக்தியும் அருகதையும் உடையவர் என்றால் நான் சிவனை நோக்கி கடும் தவம் செய்ய சித்தமாகின்றேன் தாயே. என்னை ஆசீர்வாதியுங்கள்” என்று தாயை பணிந்து நின்றான் உபமன்யு. குழந்தை உபமன்யுவின் அவா மிகச் சிறியதாக இருந்த போதிலும், அதை அவன் நிறைவேற்றி கொள்ள தேர்ந்தெடுத்த உபாயம் மிகப் புனிதமானது என்பதை உணர்ந்த தாய், லோகநாயகா சிவனே போற்றி என மனதில் நினைந்து மகன் உபமன்யுவிற்கு ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஓதுவதற்கு கற்றுக் கொடுத்தாள். இதன் பிறகு உபமன்யு இமயமலைச் சாரலுக்குச் சென்று எட்டுச் செங்கலை கொண்டு ஒரு சிறு குடில் அமைத்து அதில் அமர்ந்து சிவனை நோக்கி கடும் தவம் புரியலானான். சிவனை நோக்கி தவம் செய்தவற்கு உபமன்யு மண்ணால் செய்த சிவலிங்கம் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டான். அல்லும் பகலும் உணவும் நீருமின்றி எந்நேரமும் பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லி சிவனை நோக்கி கடும் தவம் செய்தான் உபமன்யு. அதன் காரணமாக அவன் உடல் மிகவும் இளைத்தும் போனது. இந்த நேரத்தில் அவன் உடலை தீண்டுவதற்கு பல பூதங்கள் முயற்சித்தன. ஆனாலும் நம சிவாய மந்திரத்தை சிரத்தையுடன் சொல்லிக் கொண்டிருந்த சிறுவனை நெருங்க முடியாமல் அவை திரும்பிச் சென்றன.
 
சிறுவன் உபமன்யுவின் பக்தியை சோதிக்க பார்வதியுடன் நேரில் வந்து நாடகம் ஒன்றினையும் சிவன் அரங்கேற்றினார். ஆனால் அதிலும் வென்றான் சிறுவன் உபமன்யு. அதன் பிறகு சிவன் சீரராமலிங்கேஸ்வரர் ரூபத்தில் காட்சியளித்து சிறுவனுக்காக சீரசமுத்திரம் குருதசமுத்திரம் மற்றும் அமிர்தசாகரம் முதலியவற்றை அருளிச் செய்தார். அத்துடன் இந்த உலகில் ஒரு சிறுவன் சுவைத்திராத சுவைமிக்க உணவுகள் அனைத்தையும் சிறுவன் உபமன்யுவிற்கு வழங்கினார். மேலும் சிறுவனை தன் மகனை போல் போற்றி அவனுக்கு ஞானாதிபதி என்ற ஸ்தானத்தையும் வழங்கினார். அன்னை பார்வதி சிறுவன் உபமன்யுவிற்கு என்றென்றும் இளமையுடன் வாழ்வதற்கான வரத்தையும் வழங்கினார். சிறுவன் உபமன்யுவிற்கு செய்த உபகாரங்கள் சிவனுக்கு திருப்தி அளிக்காத காரணத்தினால் வேறு என்ன வேண்டும் என்று வினவினார். அதற்கு உபமன்யு இறைவன் தம்மோடு எப்போதும் இருக்க வேண்டும், இருந்து இந்த உலக பந்தங்களிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும், சிவபக்தியே தன் நெஞ்சில் தழைத்தோங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அவ்வாறே அருளிய சிவன் சீரராமலிங்கேஸ்வரா என்ற பெயரில் மாபார்வதியுடன் சீரபுரி என்னும் இடத்தில் இன்றும் அருள் பாலிக்கின்றார். அந்த இடம் இப்போது பாலகொள்ளு என அழைக்கப்படுகின்றது. 
 
- ஒத்தக்கடை ராமன்