தாயும் ஆனார் கருணாசாகரன்!

தாயும் ஆனார் கருணாசாகரன்!

சோமு நாட்டின் பழைய தலைநகரங்களுள் ஒன்று “காவிரிப்பூம்பட்டினம்”. அது காவிரி கடலுடன் சேரும் இடத்தில் இருப்பது. “பட்டினப்பாலை” என்னும் சங்கநூல் அதன் பெருமைகளை உரைக்கும்.

 
அந்நகரில், “அறுபத்து மூன்று நான்மார்களில் ஒருவராகிய, பட்டினத்து அடிகளும் நன்கு வாழ்ந்து வந்துள்ளார்.
 
பூம்புகார் என்று அழைக்கப்பெறும் அப்பகுதியில், தன வணிகர் குலத்தில், புகழ்வாய்ந்த நற்குடியில் பிறந்த “இரத்தின குப்தன் என்பவன், தன் கற்புக்கரசியாம் மனைவியுடன் இல்லறம் நடத்தி வந்தான். அவர்களுக்கு நெடுங்காலமாக (மகப்பேறு) பின்னைச் செல்வம் இல்லாமல் இருந்தது. அவர்கள் இறைவனைத் தொழுது, பிள்ளைச் செல்வம் வேண்டி நின்றனர். இறைவன் திருவருளால், ஒரு பெண் குழந்தையைப் பெற்று அவளுக்கு “இரத்தினாவதி” என்னும் பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார்கள்.
 
இரத்தினாவதியும் செல்வச் செழிப்பொடும், அன்புடைய பெற்றோரின் பாசத்தினால் அருமைப் பெருமையுடன் வளர்ந்து, அழகுடன் திருமண வயதை அடைந்தாள். அவளுடைய தந்தை “குப்தன்” என்னும் வணிகர் குல திலகனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். தங்க சீர்வரிசைகளுடன் மாமியார் வீடான திருச்சிராப்பள்ளிக்கு, அனுப்பி வைத்தான் தன் மகளான இரத்னாவதியை.
 
தனகுப்தனுடன் திருச்சிராப்பள்ளி வந்த இரத்தினாவதியின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக நடந்து வந்தது? அவள் ஒவ்வொரு நாளும் திருச்சிரா மலையில் உறையும், செவ்வந்திரநாதரை வழிபட்டு வந்தாள். அப்பெருமான் அருளால் இரத்தினாவதி தாய்மைப் பேற்றை அடைந்தாள். குழந்தைப் பிறக்கும் பேறு காலம் நெருங்கியதால், அச்செய்தியைக் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழும் தன் தாய்க்குத் தெரியப்படுத்தினாள்.
 
தாய் மகளுக்குத் தேவையான மருந்துககள், எண்ணெய், பலகாரங்கள், இனிப்பு வகைகள், துணிகள் என்று கூடையில் பொருள்களுடன் புகாரிலிருந்தும் புறப்பட்டு திருச்சிரபுரம் அருகில் வந்தடைந்தாள்.
 
காவிரியில் நீர்ப்பெருக்குக் காரணமாக அவள் வரவு தடைப்பட்டது. மகளோ தாய் இன்று வருவாள். நாளை வருவாள், தனக்கு வேண்டிய பொருள்களுடன் வருவாள் என்று எண்ணிய வண்ணம் இருந்து வந்தாள்.
 
பிரசவ வலி ஆரம்பித்தும் தாய் வரவில்லை?! அத்தருணத்தில் இரத்தினாவதி, தான் வழிபட்டு வந்த, செவ்வந்திநாதரிடம், தன் கவலையைப் பணிவுடன் தெரிவித்தாள். அவள் இறைவனின் திருநாமங்களை, வலியுடனே, “சங்கரன், சிவன், சதாசிவன், ஈசன், ஈசானான், புங்கவன், திரிபுராந்தகன், புராதனன், புராணன், கங்கை நாயகன், கறைமிடத்து இறை நுதற் கண்ணான், எங்கள் நாயகன், இராமன் சிராமலை இறைவன், பூரணன், பரன், பராபரன், வெள்ளியம் பொருப்பன் காரணன், மதனாந்தகன், காலனைக் கடிந்தோன், வாரணம் தனை உரித்தவன், மறை பொருள் வகுத்தோன், நாரணன், தனக்கு அரிபவன், சிராமலை நாதன் என்று அழைத்துக் கொண்டே வேண்டினான் செவ்வந்திநாதன், இரத்தினாவதியின் தாய் வேடம் தரித்து, நிறைமாத கர்ப்பிணியாகத் தவித்துக் கொண்டிருந்த, இரத்னாவதியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இரத்தினாவதி வந்தவரைத் தாய் என்றே எண்ணி மகிழ்ந்தாள்.
 
தாயும் ஆனவரும் தக்கவாறு அவளுக்கு மருத்துவம் பார்த்தார். இரத்தினாவதி மகப்பேற்றை அடைந்து அழகிய ஆண் மகவைப் பெற்றெடுத்தாள்.
 
செவ்வந்தி நாதரும், அவள் தாயின் வேடத்தில் அவளுக்கும் குழந்தைக்கும் தேவையானவைகளைச் செய்து வந்தார். குழந்தையைக் குளிப்பாட்டி மருத்துவ வகைகளை ஊட்டி தாலாட் பால் உண்ணச் செய்தும், இரத்தினாவதிக்கும் நீராட்டி லேகியம் பத்தியம் என்று சில நாட்கள் பேணிப் பாதுகாத்தும் வந்தார். இது இவ்வாறு நடந்துவரும் நாட்களில்...
 
காவிரி வெள்ளம் வடிந்து, உண்மையான தாய் ஆற்றைக் கடந்து இரத்தினாவதியைக் காண அவள் வீட்டிற்கு வந்தாள். இரத்தினாவதியும் கண்டாள். திகைத்தாள்! இரு தாயாருள் எவர் உண்மைத்தாய் என்று கவனித்தாள்?! தாயாக வந்த செவ்வந்தி நாதர் மறைந்தார். வானில் மட்டுவார் குழலம்மையுடன் இடபவாகனராகத் தோன்றினார்! யாவரும் தரிசித்து மகிழ்ந்தார்கள்.
 
அன்று முதல் திரிசிர மலைச் செவ்வந்தி நாதருக்குத் “தாயுமானவர்” என்னும் திருப்பெயர் வழங்கலாயிற்று!
 
இரத்தினாவதியும் இறைவனை வழிபட்டதால், தல அடியார்களுள் ஒருவராக விளங்குகிறாள். இந்த வரலாறு, திருக்கோயில் பெருவிழாவில் ஐந்தாம் நாள் திருவிழாவாக செட்டிப்பெண் மருத்துவம் என்று நிகழ்ந்து வருகிறது! அவள் பரம்பரையினர் சிறப்பாக முன்னின்று நடத்தி வருகிறார்கள்.
 
இந்த அரிய வரலாற்றைத் திருக்கோயில் சித்திர மண்டபத்தின் திருச்சுற்றிலும் மேல் விதானத்திலும் சித்திரமாகக் கண்டு மகிழலாம்!
 
கருவுற்றிருக்கும் பெண்களுக்கும் தாயில்லாதவர்களுக்கும் இந்தத் தாயுமானவர் அருள்கிடைக்கப் பிரார்திப்போமாக...!
 
- மீனாட்சி கோகுலபாசன்