காலடிச்சுவடுகள் முடிவுதில்லை...

காலடிச்சுவடுகள் முடிவுதில்லை...

விண்வெளி விஞ்ஞானத்திற்கு ஒரு ஆரியப்பட்டரையும், அரசியல் ஞானத்திற்கு ஒரு சாணக்கியரையும் பெற்றுத் தந்த புனித கேரளம், சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இந்து மதத்துக்கு ஒரு மேதையையும் பெற்றுத் தந்தது.
 

அகண்ட பாரதம் எங்கும் “நிரீச்சுவர வாதங்கள்” தலை தூக்கிச் சதுரடியபோது ஆதிசங்கரர் அவதரித்தார். சிவபெருமானின் மறு அவதாரம் என்று கருதப்படும் சங்கரர், காலடி என்ற சிற்றூரில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் சிவகுரு ஆரியாம்பாள் தம்பதியனருக்குத் தவப் புதல்வனாகப் பிறந்தார்.
 
இவர் கருவிலிருக்கும் போதே இவரது தந்தையர் காலமானார். தாயாரின் அரவணைப் பிலேயே அவரது பாலபருவம் ஆரம்பம் ஆயிற்று. கல்வி கற்கக் கூட வசதியற்ற நிலையில், ஆசிரியர்  பிற மாணர்களுக்குப் போதிப்பதை வெளியில் அமர்ந்து செவிமடுத்தே கல்வி கற்றார். தாயின் மீது அபரிமிதமான அன்பும், பாசமும் கொண்டிருந்த இவரது மனம், சர்வ காலமும் சந்நியாசத்தையே நாடியது. கருவிலேயே திருவுடைய சங்கரர், சிறந்த பிரம்மசாரியாகவே விளங்கினார். பிரம்மசாரிகள் கைக்கொள்ள வேண்டிய அடக்கமும், பணியும், அகம்பாவமின்மையும் தொடக்கத்திலிருந்தே இவரிடம் குடி கொண்டிருந்தன. இந்தக் கொள்கைகள் கைவர வேண்டு மானால், ஒரு பிரம்மசாரி தினமும் வீடு வீடாகச் சென்று பிச்சை வாங்க வேண்டுமென்பது மரபு. பாலசங்கரும் அவ்வாறே தினமும் வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்பார்.
 
ஒரு நாள், பரம தரித்திரரான ஒரு அந்தணர் வீட்டில் பிச்சைக்கு நின்றார். அவருக்குப் பிச்சையிட அந்த இல்லத்தில் ஒன்றும் இல்லை. ஒரு பால பிரம்மசாரிக்கு பிச்சையிட ஒன்றும் இல்லாதது குறித்து மனம் வருந்திய அவ்வீட்டு அம்மையார், இறைவனுக்கு நிவேதனம் செய்வதற்காக வைத்திருந்த ஒரு நெல்லிக்கனியை எடுத்து வந்து சங்கரருக்குப் பிச்சையாக இட்டார். அந்த அம்மையாரின் மேன்மையான உள்ளத்தையும் தரித்திர நிலையையும் கண்ட சங்கரர், மகாலட்சுமியை நினைத்து மனமுருகி, இவர்களது ஏழ்மை நிலைமை மாற்றும்படி விண்ணப்பித்துப் பாடினார். அவ்வண்ணமே “பொன்மழை” பொழிந்தது.
 
சங்கரர் பாடிய முதல் ஸ்தோத்திரமே, “கனக தாரஸ்தவம்”. இன்றும் அந்த இல்லம், சொர்ணத்து இல்லம் என்ற பெயரில் காலடியில் இருக்கிறது. ஒரு நாள், அன்னை ஆரியாம்பாளுக்கு நோய் உண்டாயிற்று. நடக்க முடியாத அளவுக்குப் பலவீனம் ஏற்பட்டது. அம்மையார் ஒரு நாள் தவறாமல் அவ்வூரின் வழி ஓடும் பூர்ணா என்னும் புனித நதியில் நீராடி மகிழ்வார். இப்போது பலவீனமான நிலையில் அவரால் அங்கு சென்று நீராட முடியவில்லை. இது அவருக்கு மிகவும் குறையாக இருந்தது. அன்னையின் இந்தத் துயரை நீக்க எண்ணினார் சங்கரர்.
 
பூர்ணா நதியைப் பிரார்த்தித்து, “அன்னையின் துயர் தீர்க்க வா, வா!” என அழைத்தார் அவர். சிவபெருமானின் அவதாரமான அவரது சொற்களுக்கு நதி கட்டுப்பட்டுத் தனது போக்கையே மாற்றிக் கொண்டு, சங்கரர் வீட்டுத் தோட்டத்துக்கே வந்தது. அன்னை பேருவகை கொண்டார். சந்நியாசத்திலேயே விருப்பமுற்றிருந்த சங்கரருக்கு வயது எட்டு முடிந்தது. ஒரு நாள் சங்கரர், பூர்ணா நதியில் நீராடு கையில் அவரது காலை முதலை ஒன்று கவ்விக் கொண்டது.
 
“அம்மா, அம்மா” என்று சங்கரர் அலறினார். உயிருக்கு உயிரான குழந்தையை முதலை கவ்வி இருப்பதைக் கண்டு தாயார் துடித்தார். முதலையின் பிடியிலிருந்த குழந்தையை ஒரு பெண்ணால் எப்படி விடுவிக்க முடியும்?
 
“ஐயோ, கையால் ஆகாத பாவியாக நிற்கிறேனே, உன்னைக் காப்பாற்றுவது என்கையில் இல்லையே, என்ன செய்வேன்?” என்று பதறினார்.
 
“அம்மா, என்னைக் காப்பது உங்கள் கைகளில் தான் இருக்கிறது,” என்றார் சங்கரர். இதன் உட்பொருள் விளங்காமல் அம்மையார் தவித்தார்.
 
“அம்மா, நான் இந்தப் பிறவியில் முதலையால் சாக வேண்டும் என்பது விதி. ஆனால் சந்நியாசம் வாங்கிக் கொண்டு துறவியாகி வீட்டையும், உற்றார் உறவினர்களையும் விட்டு விட்டு வெளியேறி னேனாகில், இப்பிறவி முடிந்து வேறு பிறவி கிடைத்ததாகும். வேத ஆகமப்படி சந்நியாசம் என்பது மறுபிறவியாகும். அடுத்த பிறவியில் முதலை என்னை ஒன்றும் செய்ய முடியாது. எனவே அம்மா, நான் துறவியாவதற்கு நீங்கள் அனுமதித்தால் முதலை என்னை விட்டு விடும். என்னைப் பிழைக்க வைப்பது உங்கள் கரத்தில் தான் இருக்கிறது.” என்றார் சங்கரர்.
 
தவம் இருந்து பெற்ற புதல்வனைப் பிரிய எந்தத் தாய்க்கு மனம் வரும்? ஆனாலும் மகன் உயிர் பிழைத்தால் போதுமென்று அனுமதித்தார்.
 
மாதாவைப் பிரிந்து, குருவைத் தேடி காலடியில் இருந்து காலடி வைத்தார் ஆதிசங்கரர். அதோ, அந்தப் புனிதக் காலடி, அகண்ட பாரதத்தை வலம் வரப்போகும் அந்தக் காலடி, பிரம்ம ஞான வித்தைகளை, வேத உப நிஷத்துகளை உலகம் உணரும் வண்ணம் விளக்கப் போகும் காலடி, அழுந்தப் பதிந்து புறப்பட்டது. காடு, மேடுகளைக் கடந்து, மனோ வேகத்துடன் சென்ற காலடி இதோ, நர்மதா நதி தீரத்து வந்து விட்டது.
 
அப்போது நதி மாதா, பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்தாள். சங்கரர் தன் சக்தியால் அப்பிரவாகத்தைக் கமண்டலத்துக்குள் அடக்கினார். அந்த நதியை மக்களுக்குப் பயன்படும் நதியாக - கரைக்குள் அடங்கிப் போகும் நதியாகச் செய்தார்.
 
கரையிலிருந்த குரு கோவிந்தர் தன் சீடனைக் கண்டு கொண்டார். வியந்தார். முறைப்படி அவருக்கு துறவு வந்தார். “மகா வாக்கியங்களை” உபதேசித்தார். அத்வைத விதியை உலகினருக்கு விளக்கிக் கூறக் கிளம்பினார், சங்கரர். கங்கைக் கரையில் இவரது உபதேசம் கங்கை போலக் கொந்தளித்து வந்தது. அத்வைதத்தை எதிர்த்த பிற மதத்தினரும் அவரது உபதேசத்தினால் மன அழுக்கு நீங்கித் தெளிவு பெற்றனர்.
 
தனது உபதேச ஒலிக ளெல்லாம் காற்றில் சங்கமித்து விடாது நிலைத்து நிற்க அவற்றை எழுதி வைத்தார். பிரம்ம சூத்திரம், உபநிஷதங்கள், கீதை ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார். கணேச பஞ்சரத்தினம் போன்ற ஸ்தோத்திரங்களையும் இயற்றினார். அக்காலத்தில் நற்குருவைத் தேர்ந்தெடுக்கக் காசிக்குத் தான் செல்வார்கள். இவ்விதம் சோழ நாட்டைச் சேர்ந்த சநந்தனர் காசிக்குச் சென்றார். ஆதிசங்கரரைக் கண்டு அவரிடம் மிகுந்த பக்தி கொண்டு சீடரானார். இவர் நரசிம்ம மூர்த்தியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவரே சங்கரரின் முதல் சீடர், இவருக்கு பத்மபாதர் என்ற பெயரைச் சூட்டினார் குருநாதர். 
 
- கவிஞர் கண்ணதாசன்